புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சொத்து தகராறில் உடன் பிறந்த தங்கை மீது கொதிக்கும் பாலை அண்ணன் வீசினார். இதில் 3 வயது குழந்தை உடல் வெந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்களுக்கு சத்தியபிரியா
(5) என்ற மகளும், லோகேஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர். அயனாவரம், செட்டி தோட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் சரஸ்வதி கடந்த 6 மாதமாக குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

சரஸ்வதியின் தாய் இந்திராணிக்கு சொந்தமாக அயனாவரத்தில் அரை கிரவுண்ட் நிலம் உள்ளது. இவர் அந்த நிலத்தை மகன் விஜயகுமாருக்கும் (35), மகள் சரஸ்வதிக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார். அதற்கு விஜயகுமார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விஜயகுமார், இந்திராணியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அதை சரஸ்வதி தடுத்தார். உடனே சமையலறைக்கு சென்று, அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த பாலை எடுத்து வந்து சரஸ்வதி மீது வீசினார்.

அவர் விலகி ஓடியதால், அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சரஸ்வதியின் மகன் லோகேஸ்வரன் உடலில் கொதிக்கும் பால் கொட்டியது. இதில் உடல் வெந்து குழந்தை அலறித்துடித்தது. உடனடியாக குழந்தையை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சரஸ்வதி, அயனாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top