புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நவீன உலகில் உச்சம் பெற, மனிதர்களுக்கிடையில் இருக்கின்ற பாசப் பிணைப்புக்களும் பிரிவடைந்து செல்கின்றது. அந்தக் காலத்தில் தாய் பிள்ளை பாசம், கணவன் மனைவி பாசம், சகோதர பாசம் எனப் பலப் பாசப் பிணைப்புக்கள் ஒரு சமூகக் கட்டுப்பாட்டுக்குள்
இருந்து பிரிக்க முடியாத உறவாக, உண்மையான அன்பாக பிரகாசித்திருந்தது. 

ஆனால் தற்போது உலா வருகின்ற நவீன யுகம் அத்தனை பாசங்களையும் உடைத்தெறிந்து, அனைத்தும் வெறும் வேசம் என்பதை எடுத்துக் காட்டி நிற்கின்றது. 

அந்த வகையில் பணத்துக்காக, சொகுசு வாழ்க்கைக்காகத் தாங்கள் பெற்ற பிள்ளைகள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர் பெற்றோர்கள். 

இதனை ஒரு சுயநலம் என்று கூடச் சொல்ல முடியும். ஏனெனில் தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக பிள்ளைகளை தூரதேசம் அனுப்பி விட்டு கண்காணாத இடத்தில் அப் பிள்ளை என்ன செய்கின்றான் என்பது கூடத் தெரியாமல் அவனால் அனுப்பி வைக்கப்படும் பணத்தை அனுபவிப்பது என்பது ஒரு வகையில் சுயநலமே.

இருந்தும் நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அதனால் அழிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள். எனவே தன் பிள்ளை உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காக தாங்கள் சேர்த்து வைத்த அத்தனை சொத்துக்களையும் விற்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களும் உண்டு.

அதைவிட தன் பிள்ளை எங்கிருந்தாலும் சரி உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தாலிக் கொடியைக் கூட விற்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த தாய்மார்களும் உண்டு.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தாலிக்கொடியை விற்று வெளிநாடு அனுப்பி வைத்த அந்தத் தாயின் மரண நிகழ்வுகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்கைப் மூலம் அங்கிருந்து பார்க்கின்றார்கள் பிள்ளைகள்.

உயிருடன் இருக்கும் போது ஒரு நாளாவது வந்து பார்க்காமல், அவர்கள் அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் விடுத்து, அவர்களின் இறுதி நிகழ்வுகளை ஸ்கைப் மூலம் பார்த்துக் கண்ணீர் விடுவதில் என்ன பயன்?

அது மட்டுமல்லாமல் பெற்றெடுத்தவர்களுக்கான அத்தனை கடமைகளையும் செய்யாது விடுத்து, அவர்கள் இறந்த பின் உற்றார், உறவினர், நண்பர்கள், அயலர்கள் என அனைவரையும் அழைத்து இறந்த பெற்றோர்களுக்குத் துவசம் கொடுப்பதில் என்ன பயன்?

தற்போது இந்த உலகத்தில் இதுதான் நடக்கின்றது. உயிருடன் இருக்கும் போது முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை விட்டு விட்டு, அவர்கள் இறந்த பின்னர் சடலத்தை அடக்கம் செய்ய சண்டை பிடிக்கும் எத்தனையோர் பிள்ளைகளும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அவர்களின் சொத்துக்களை அடைய வேண்டும் என்பதற்கான சண்டையாக இது இருக்குமே தவிர, உயிருடன் இருக்கும் அரவணைக்காத பிள்ளைகள் இறந்த பின் அடிபடுவதற்கு என்ன அர்த்தமாக இருக்க முடியும்?

இத்தனைக்கும் காரணம் பகட்டு வாழ்க்கை, முழுக்க முழுக்க சுயநலப் போக்கு மற்றும் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி. 

மேற்போன்ற காரணங்கள்தான் ஆதிகாலம் தொட்டு வந்த அத்தனை உறவுகளின் பாசப் பிணைப்புக்களில் பிரிவுகளை ஏற்படுத்தியவை. 

எனவே பெற்றோர்கள் உயிருடன் இல்லாதபோது வராத பிள்ளைகள் இறந்த பின்னர் போட்டி போட்டுக் கொண்டு மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதென்பது தேவையற்ற ஒன்று.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top