நடத்தையில் சந்தேகப் பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர், கத்தியுடன் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பூர் அடுத்த கொளத்தூர் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (38). பாடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரமணி (32). இவர்களுக்கு கணேஷ் (10), லோகேஷ் (8) என 2 மகன்கள் உள்ளனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான மூர்த்தி, தினமும் இரவு நேரத்தில் போதையில் வீட்டுக்கு வருவார். இதைக் கண்டித்து ரமணி சண்டை போடு வார். மனைவியின் நடத் தையில் சந்தேகம் இருந்த தால் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற மூர்த்தி, இரவு 9 மணியளவில் போதையில் வீடு திரும்பினார். ரமணியிடம் சாப்பாடு பரிமாறுமாறு கூறியிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். ஆனால், தூக்கம் வராமல் அவதிப்பட்ட மூர்த்தி, ராணியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ரமணியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் துடிதுடித்த ரமணி பரிதாபமாக இறந்தார்.
பின்னர், ரத்தக் கறை படிந்த கத்தியுடன் ராஜமங்கலம் போலீசில் மூர்த்தி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியின் சடலத்தை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அம்பத்தூர் நீதிமன்றத்தில் மூர்த்தியை ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறில் கழுத்தை அறுத்து மனைவியை கணவனே கொன்ற சம்பவம், கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக