தினந்தோறும் சிறிதளவு ஆஸ்பிரினை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்பதுடன், பெரும்பாலும் குணப்படுத்தவும் கூட முடியும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த முடிவுகள் மருத்துவ நாளிதழான “த லான்சட் இல்” வெளியாகி உள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
ஆனால் இந்த மருந்து புற்றுநோயையும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளையும் தடுக்கக்கூடியது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லையெனவும், அதனால் வயிற்றில் இரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் அதிகரிக்கலாம் என்றும் ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்தனர்.
ஆனால் தற்போதைய புதிய ஆய்வை நடத்திய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ரொத்வேல், ஆஸ்பிரினால் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதே போன்று 10 ஆண்டுகள் போன்ற நீண்டகாலப் போக்கிலேயே ஆஸ்பிரின் மருந்தினால் நல்ல பலன்களைக் காணமுடியும் என்றும் அப்போது கூறப்பட்டது.
ஆனால் தற்போது 77 ஆயிரம் பேருக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆஸ்பிரின் மருந்தினால் 3- 5 ஆண்டுகள் வரையான காலப்பகுதிக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பேராசியர் பீட்டர் ரொத்வேல் தலைமையிலான விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களை ஆஸ்பிரின் குறைப்பது மட்டுமன்றி, புற்றுநோய்கள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதையும் அதனால் தடுக்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப்பேர், உயிரிழந்தவர்கள் எத்தனைப்பேர் என்பதற்கும் அவர்களின் ஆஸ்பிரின் உபயோகத்துக்கும் இடையே தொடர்பு இருக்கின்றமையே இந்த ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
75 முதல் 300 மைக்ரோ கிராம் வரை தினந்தோறும் ஆஸ்பிரின் உட்கொண்டவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் புற்றுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்வாசிப் பங்களவு குறைந்திருந்தது.
புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் 5 ஆண்டு காலப்போக்கில் 15 வீதத்தால் குறைந்திருப்பதாகவும், அவ்வாறே ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் ஆஸ்பிரினை தொடர்ந்தும் எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளின் வீதத்தை மேலும் 37 வீதத்தால் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் வயிற்றுக்குள் இரத்தக் கசிவுகள் ஏற்பட இந்த நீண்டநாள் ஆஸ்பிரின் பாவனை காரணமாவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக