ஆலயத்திற்குச் சென்ற பதினைந்து வயது நிரம்பிய சிறுமி மீது விருப்பம் கொண்ட இளைஞன் ஒருவர் ஆசைவார்த்தை கூறி அவரை ஆட்டோவில் கடத்திச்சென்று கடற்கரையிலுள்ள மண் குடிசையில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவைத்துள்ளார்.
இளைஞரின் வார்த்தையை நம்பி மோசம் போன மேற்படி சிறுமி பொலிஸான் உதவியை நாடியதைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவைக் கைப்பற்றியதுடன் நேற்று முன்தினம் இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
அனலைதீவைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய சிறுமி ஒருவர் தைப்பூசத் திருவிழாவை பார்ப்பதற்காக நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அங்கு வைத்து சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்ட சாவல்கட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நாளடைவில் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி உரையாடி வந்துள்ளார்.
இந் நிலையில் மேற்படி இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த சிறுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக கூறி யாழ். பஸ் நிலையத்திற்கு உடனடியாக வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இவன் அழைப்பை நம்பிய சிறுமி பஸ்ஸில் ஏறி யாழ்ப்பாணம் வந்தபோது ஆட்டோவில் வந்த இளைஞன் சிறுமியை ஏற்றிக்கொண்டு காக்கைதீவு கடற்பரப்பிலுள்ள குடிசையொன்றிற்குச் சென்று சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் மறுநாள் காலை அவரை வீட்டிற்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.
இச் சம்பவம் குறித்து சிறுமியின் உறவினர்களால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடமும், சந்தேகநபரும் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த காரணத்தினால் ஊர்காவற்றுறை பொலிஸார் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.
இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட மானிப்பாய் பொலிஸார் சிறுமியை ஏற்றிச் சென்ற ஆட்டோவைக் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின்பேரில் சாவல்கட்டைச் சேர்ந்த இரு இளைஞர்களையும் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக