நேற்று மாலை திடீரென ஏற்பட்ட சூறாவளி மற்றும் பனிக்கட்டி மழையால் வவுனியா செட்டிக்குளம், கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களில் பெரும்பாலானவை அழிவுற்று அங்கு தங்கியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் காற்றுடன் கூடிய பனிக்கட்டி மழை கொட்டித் தீர்த்ததால் முகாம்களில் இருந்த குடிசைகள் வெள்ளத்தில் அள்ளுண்டன. காற்றினால் குடிசைகள் சாய்ந்தன. இவற்றில் சிக்குண்டு 14 பேர் காயமடைந்தனர்.
நேற்று மாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பனிக்கட்டி மழை கொட்டியது. கடும் காற்றும் வீசியது. காற்றினால் குடிசைகள் அனைத்தும் தரைமட்டமாகின.
ஆனந்தக்குமாரசுவாமி முகாமில் 950 குடிசைகளும் கதிர்காமர் முகாமில் 272 குடிசைகளும் தரைமட்டமாகின. குடிசைகள் சாய்ந்து வீழ்ந்ததில் அவற்றுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டனர்.
இவர்களில் 14 பேரே காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் மழை காற்றினால் முகாமில் இருந்த மக்கள் பெரும் அல்லோலகல்லோலப்பட்டனர். மின்சார இணைப்புகள், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.
மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அனைத்து இடங்களிலும் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் எங்குமே செல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் எவையும் கிடைக்கவில்லை.
மக்களின் பொருள்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
மரங்கள் வீழ்ந்தும் கூரைத் தகரங்கள் வெட்டியுமே மக்கள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் கைக்குழந்தையுடன் இருந்த தாய்மார்கள், கர்ப்பிணிகள் உடனடியாக செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் எவையும் உடன் அங்கு இருக்கவில்லை.
இதேவேளை பாதிப்புற்ற மக்களுக்கான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பி.எம். சாள்ஸ் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக