சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 3 சிறுமிகளை கற்பழித்த வார்டன் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஷிவ்குடி பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு இளம் குற்றவாளிகளும், அனாதை சிறுவர் சிறுமிகளும் தங்க வைக்கப் பட்டுள்ளனர். வித்யாபூஷன் ஒஜா (52) என்பவர் இப்பள்ளியின் வார்டனாக பணியாற்றி வந்தார்.
அலகாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இந்த சீர்திருத்த பள்ளியில் தங்கி இருந்த 6 வயது சிறுமியை தத்து எடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அச்சிறுமி ஒருவித பயத்துடனேயே இருந்திருக்கிறாள். அவளிடம் அந்த தம்பதி பரிவுகாட்டி விசாரித்தபோது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தனக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்களை திகிலுடன் தெரிவித்தாள்.
வார்டன் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி போலீசில் புகார் செய்தனர். மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து ஷிவ்குடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை வார்டன் வித்யா பூஷன் ஜகா பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர். வார்டனிடம் விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இது போல் மேலும் 2 சிறுமிகளை கற்பழித்ததாகவும் வாக்கு மூலம் அளித்தார். அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள். இதுபற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட அதிகாரி விசாரணை நடத்தினார்.
இதில் வார்டன்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பெண் சூப்பிரண்டு ஊர்மிளா குப்தா சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக