மதுரை பெத்தானியாபுரம், மேட்டுத்தெரு, அன்புவீதி பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 23). இவர் மதுரை ரெயில்வே பார்சல் நிலையத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், ஈரோட்டை சேர்ந்த சந்திரா(வயது 18) என்பவருக்கும்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
மதுரை செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்த காசிப்பாண்டியின் மனைவி வசந்தி (22). வசந்தியின் சித்தப்பா மகள் தான் சந்திரா. நேற்று காலை சந்திராவின் அப்பா, வசந்திக்கு போன் செய்து, தன் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பார்த்து விட்டு வந்து தகவல் தெரிவிக்குமாறும் கூறினார்.
அதைத்தொடர்ந்து வசந்தி, அவருடைய கணவருடன் சந்திரா வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவு உள்புறம் பூட்டியிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சத்தியராஜும், சந்திராவும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட வசந்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கிய கணவன், மனைவி இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அக்கம்பக்கத்தினரை போலீசார் விசாரித்த போது இரண்டு பேரும் மகிழ்ச்சியாக தான் வாழ்க்கை நடத்தி கொண்டிருந்ததாக தெரிவித்தனர். திருமணமாகி 3 மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக