வடமராட்சி கற்கோவளம் புனிதநகர் பகுதியில் திங்கட்கிழமை இரவு, மதுபோதையில் வந்த இளைஞர் குழுவொன்று நடத்திய வாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.திங்கள் இரவு 7.30 மணியளவில் இந்தப் பகுதிக்கு மதுபோதையில் வந்த மூவர் குடும்பஸ்தர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கியுள்ளனர்.
தங்கள் வசமிருந்த வாளால் அவரை வெட்டிய அதேநேரம், அந்த காட்டு மிராண்டிகளிடமிருந்து அவரைக் காப்பாற்ற வந்த அவரது மனைவியையும் மகளையும் அவர்கள் கண்மூடித்தனமாக வாளால் வெட்டியுள்ளனர்.
மிருகத்தனமாக நடந்து கொண்ட அவர்களது வாள் வெட்டால் செல்லையா தங்கவேல் (வயது 40) அவரது மனைவி சசிகலா (வயது 36), அவரது மகள் நிஷாந்தி (வயது 18) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பெண்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாகவே அந்தப் பகுதியிலிருந்து தலைமறைவாகிவிட்டனர். இதுபற்றி பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்படவே அவர்கள் அவ்விடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடமராட்சி பகுதியில் அண்மைக்காலமாக இவ்வாறான வாள் வெட்டுக்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் நிலவுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக