வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் காவனூர் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மஞ்சுளா(45) கடந்த 10 ஆண்டுகளாக கணவனை பிரிந்து மகன் சரவணனுடன்(25) காவனூர் ரோட்டில் வசித்து வருகிறார்.மஞ்சுளா புதியதாக வீடு கட்டி இருந்தார். வீட்டின் கிரகபிரவேசம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மஞ்சுளாவின் சித்தப்பா முனிரத்தினத்தின் மகன்கள் சேட்டு, செல்வம், மகள் வாசுகி அவரது கணவர் பாண்டி துரை மற்றும் உறவினர்கள் வந்து இருந்தனர். இரவு அனைவரும் வீட்டின் அருகே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது பாண்டிதுரைக்கும் செல்வம், சேட்டு தரப்பின ருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சேட்டு, செல்வம் ஆகிய இருவரும் கத்தியுடன் பாண்டிதுரையை வெட்டுவதற்காக துரத்தி சென்றனர். உயிரை காப்பாற்றி கொள்ள பாண்டிதுரை அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனை பார்த்த மஞ்சுளா சேட்டு, செல்வம் இருவரையும் தடுத்து நிறுத்தி என் வீட்டு விசேஷத்திற்கு வந்து ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள் என கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த சேட்டு, செல்வம் இருவரும் மஞ்சுளாவை கத்தியால் வெட்டினர். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மங்சுளா ரத்த வெள்ளத்தில் பிணமாக சரிந்தார்.
பிணத்தை அருகில் இருந்த ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதை தொடர்ந்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம், சேட்டுவை தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக