கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி கோமதி (18). இவர்களது 4 மாத குழந்தை கோகுல். கோமதியின் முதல் கணவரான மோகன் மூலம் கோமதிக்கு வித்யா (4) என்ற குழந்தை உள்ளது. மோகனுடன் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு கோமதி அவரை பிரிந்து சென்றார்.
அதன்பிறகு கோமதி ராஜேசை திருமணம் செய்து கொண்டார். ராஜேஷ் மூலம் கோமதிக்கு ஆண் (கோகுல்) குழந்தை பிறந்தது. தனிக்குடித்தனம் நடத்தி வந்த ராஜேஷ் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது தாயார் குப்பம்மாளுடன் கூட்டுக்குடும்பாக சேர்ந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு குழந்தை கோகுல் திடீரென மாயமானது. மறுநாள் அதிகாலை 5 1/2 மணி அளவில் வீட்டு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் குழந்தை கோகுல் பிணமாக கிடந்தது.
இதுகுறித்து ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் தான் கடைக்கு சென்றபோது குழந்தையை கணவரின் அக்காள் ராஜலட்சுமியிடம் கொடுத்து சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. ராஜலட்சுமியிடம் கேட்டபோது எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக கோமதி போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜலட்சுமியை பிடித்து போலீசார் 2 நாட்களாக விசாரித்தனர். அப்போது குழந்தையை தனது சித்தப்பா கருணாகரன் தூக்கி சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
கோமதி என்னிடம் குழந்தையை கொடுத்து சென்ற சிறிது நேரத்தில் எனது சித்தப்பா கருணாகரன் எங்கள் வீட்டுக்கு வந்தார். குழந்தை கோகுலை தூக்கிக் கொண்டு வெளியே சென்ற அவர் இதை யாரிடமாவது சொன்னால் வெட்டிக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
அவர் 1991-ம் ஆண்டு வியாசர்பாடியை சேர்ந்த சேகர் என்பவரை கொலை செய்து ஜெயிலில் இருந்தவர். எனவே அவருக்கு பயந்து 2 நாட்களாக வெளியே சொல்லவில்லை.
இவ்வாறு ராஜலட்சுமி கூறினார்.
இதையடுத்து கொலையாளி கருணாகரனை (40) போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
ராஜேசின் தாயார் குப்பம்மாள் எனது அண்ணன் மனைவி ஆவார். எனது அண்ணன் கன்னியாகுமரியில் வேலை பார்த்து வருகிறார். எனவே குப்பம்மாள் தனியாக வசித்தார். அப்போது அவருக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி வீட்டுக்கு சென்று குப்பம்மாளுடன் உல்லாசம் அனுபவித்தேன்.
20 நாட்களுக்கு முன்பு ராஜேஷ் மனைவி, குழந்தை மற்றும் தாயாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்தார். இது எனது கள்ளக்காதலுக்கு இடையூறாக அமைந்தது. எனவே குழந்தையை கடத்தி பயமுறுத்தினால் ராஜேஷ் அங்கிருந்து சென்று விடுவார். அதன்பிறகு அண்ணியுடன் கள்ளக் காதலை தொடரலாம் என்று எண்ணினேன்.
குழந்தையை கடத்தி சென்றபோது போலீசார் குழந்தையை தேடத் தொடங்கினார்கள். எனவே இரவு முழுவதும் குழந்தையுடன் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். இனி குழந்தையை ஒப்படைத்தால் பிரச்சினையாகி விடும் என்பதால் கட்டையால் குழந்தை தலையில் அடித்தேன்.
பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன்பிறகு அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் வீசினேன். என்மீது சந்தேகம் வராமல் இருக்க அனைவருடன் சேர்ந்து நானும் குழந்தையை தேடினேன். ராஜலட்சுமி என்னை காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் அவளை கொலை செய்வதாக மிரட்டினேன்.
2 நாட்கள் அவள் ஏதும் சொல்லாததால் இனி தப்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் போலீஸ் விசாரணையில் ராஜலட்சுமி உண்மையை கூறி விட்டார். காமம் எனது கண்ணை மறைத்ததால் குழந்தையை கொன்றுவிட்டேன்.
இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்தார்.
இந்த கொலை தொடர்பாக ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக