புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


படம் தயாரிக்க சினிமா பைனான்சியரிடம் ரூ.85 லட்சம் பணத்தை வாங்கி, திருப்பித் தராமல் ஏமாற்றியதாகக் கூறி, ‘கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு’ படத்தின் கதாநாயகி நடிகை புவனா என்கிற புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் வேம்புலிஅம்மன்
கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 42). சினிமா பைனான்ஸ் தொழில் செய்யும் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், “நான் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த, சம்பூர்ணம் அம்மாள் என்பவர் தான் ‘கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு’ என்ற சினிமாப்படம் தயாரித்து வருவதாகவும், அதற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும், என்னிடம் கூறினார்.
அவர் சொன்ன வாக்குறுதியின் பேரில் ரூ.85.50 லட்சம் கொடுத்தேன்.
ஆனால் அந்த பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்தார்கள். வங்கி கணக்கில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது. அந்த பணத்தைத் தராமல் சம்பூர்ணம் அம்மாள் ஏமாற்றி விட்டார்.
சம்பூர்ணம் அம்மாளின் மகள் புவனா என்கிற புவனேஸ்வரிதான், அந்த படத்தின் கதாநாயகியாக நடித்தார். அங்காடித்தெரு படத்தின் நாயகன் மகேஷ்தான், இந்த படத்திலும் கதாநாயகன் வேடத்தில் நடித்தார். படம் வெளியாகி நன்றாக ஓடியது. ஆனால் சம்பூர்ணம் அம்மாள் தான் சொன்ன வாக்குறுதிப்படி, அந்த படத்தின் லாபத்தில் கூட பங்குதரவில்லை.
சம்பூர்ணம் அம்மாள், அவரது மகள் நடிகை புவனேஸ்வரி ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
புழலுக்குப் போன புவனா
நடிகை புவனேஸ்வரி (வயது 22) நேற்று கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
“சினிமா தயாரிப்பு செலவுக்காக, குருநாதன் ரூ.15 லட்சம்தான் கொடுத்தார். படம் சரியாக ஓடாததால், அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை,” என்று தனது வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீது மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புவனேஷ்வரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கதறி அழுதபடியே சிறைக்குச் சென்றார்.
புவனா ஏற்கெனவே கார்த்திக் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top