தமிழரின் பண்பாட்டு விழுமியங்களுடன் ஒன்றி வளம் பெற்று வழி வந்த வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும்
உன்னத வாத்தியமாகும். இந்து மதத்திலும், தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது யாழின் வழிதோற்றலாகக் காலம் காலமாகக் கருதிக் கையாளப்படும் வீணை என்னும் நரம்பிசை வாத்தியமாகும்.
இத் தெய்வீக கலையம்சம் செறிந்த நாரிசை வாத்தியமானது, தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும் அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் கம்பராமாயண காப்பியத்தில் நாம் இன்றும் காணமுடிகின்றது.
இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை என்றால் அது மிகையாகாது. தனி இசை வாத்தியமாகவும், பக்க வாத்தியமாகவும் இவ்வரிய வாத்திய இசை வடிவம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் மூலப் பொருளாகக் கருதப்பட்டவிடத்தும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாற்றமுறுகின்றது.
பொதுவாக நாம் தமிழ்க் கலை உலகில் வீணை என வர்ணித்துக் கையாளும் வாத்தியமானது சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையான சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும்.
இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.
மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவ அமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும், வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை) மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவானந்தபுரம் விளங்குகின்றது. திருவானந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவானந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில் அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பன வற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டாலும், வீணை மீட்டல் என்றே கட்டுக்கோப்பான வகையில் வரையறுத்துக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது.
இவ்வீணை எஃகு, வெண்கலம், வெள்ளி, பித்தளை ஆகிய நான்கு உலோகங்களையும் பயன்படுத்திச் செய்யப்படுகின்றது. வீணை மீட்டல் பயன்பாட்டிற்கு நான்கு தந்திகள் பயன்படுத்தப்படும் அதே சமயம் மூன்று தந்திகள் தாள லயத்தைப் பேண பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
பலவிதமான பகுதிகளைக் கொண்டதாக இக்குறிப்பிட்ட வீணை இடம்பெறுகின்றது. குடம், குடத்தின் மேல் புறத்தே இரு பக்கமும் பொருத்தப்பட்டிருக்கும் அம்சம் காடிச் சங்கையாகும். காடிச்சங்கையின்மேல் மெழுகுச் சட்டத்தின் மீது வெண்கல மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஒட்டு மொத்தமாக இருபத்திநான்கு மெட்டுகள் இடம்பெறுகின்றன.
குடத்திற்கு சமப்படுத்தும் வகையில் சுரக்காயும், ஏழு பிரடைகள், கழுத்துப்பகுதி, கீழ் நோக்கியதாக யாழின் முகம் அமையப்பெற்றதாகவும் காணப்படும். ஏழுவகைக் கம்பிகளிலும் ஏழு லங்கர்கள் பிணைக்கப்பட்டிருக்கும். இவ்வேழு லங்கர்களின் மேல் அரிய சிறப்பு நுட்பச் சுருதி சேர்க்கும் வகையில் வளையங்கள், மற்றும் ஏழுதந்திகள், என்பன பிணைக்கப்பட்டு இருப்பது வழமையாகும். குடம் அமையப்பெற்ற பகுதி பெருத்தும், கழுத்துப் பகுதி சிறுத்தும் காணப்படுதல் சிறப்பம்சமாகும். ஏறத்தாழ ஐம்பத்திரண்டு அங்குல நீளத்தைக் கொண்டதாக இவ்வீணை அமையப் பெற்றதாகவும், கமக அசைவுகளை இசைக்கேற்றவாறு நெளிவு சுழிவுகளுக்கேற்ற வகையில், மற்றும் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற வகையில் இவ்வரிய இசை வாத்தியம் மீட்கப்படுகின்றது.
சுரக்காயில் அரியவகை ஓவியங்கள் தீட்டப்பட்டு கலை அம்ச வெளிப்பாட்டின் சின்னமாய் விளங்கும். இன்று இச் சுரக்காய் பயன்பாட்டிற்குப் பதில் பெப்பர் இழைகள், பல்கலவை நாரிழைக் கண்ணாடிகள், அலுமினியம் போன்ற அரிய வகை பாரமற்ற மென் உலோகங்கள் கையாளப்படுகின்றன.
இவ்வீணையில் மீட்கப்படும் நான்கு தந்திகளும் முறையே, சாஸ்திரிக ரீதியில் நான்கு பெயர்களைக் கொண்ட தந்திகளாக அமைந்துள்ளன. அவை முறையே அனுமந்திரம், மந்திரம், பஞ்சமம், மற்றும் சாரணய் ஆகும். மூன்று தாள தந்திகளைக் கொண்டதாக அமையும் தந்திகள் முறையே பக்க சாரணி, பக்க பஞ்சமம் மற்றும் தீ வீர சாரணி ஆகிய சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றன.
இவ்வீணையின் அலங்கரிப்பு மற்றும் வேலைப்பாடுகளுக்கு யானைத் தந்தமும், மான் கொம்பும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.
வீணையின் வகையில் இடம்பெறும் மற்றுமொரு வீணை ருத்திர வீணையாகும். இப்புராதன வாத்தியமானது குறிப்பாக ‘துர்பத’ எனக் குறிப்பிடப்படும் வாத்தியத்துடன் தொடர்புபட்டதாக அமைவதாகும். புராதன காலங்களில், மறைகள் ஓதும்போதும் இவ் ருத்திர வீணை பயன் படுத்தப்பட்டதாக அறிகின்றோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாக இந்திய சாஸ்திரீக இசை அமைப்பிற்கு இவ் வீணை இசையானது பெரிதும் பயன்படுத்தப்பட்டது எனலாம். அண்மைக் காலத்தில் இவ்வீணைப் பயன்பாடானது பெரிதும் அருகிவிட்ட-து. ஆயினும் இன்று அதன் பாவனை உலகளாவிய ரீதியில் பயன்பட்டு வருவதை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது.
தேக்கு மரத்திலும் வீணை செய்யப்படும் அதன் உள் பக்கம் வெற்றிடமாக்கப்பட்ட மரமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய வீணைகளைப் போன்று தந்திகள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு சமாந்தரமாகப் பிணைக்கப்பட்டு உள்ளமை வழமையாகும். இவ்வீணை இரண்டு பெரிய பூசணி உருவங்களைத் தாங்கியதாக அமையப்பெற்றுள்ளது.
‘யுட்சாட் சியா மொகிடின் தர்கார’ என்பவர் பலதரப்பட்ட உத்தியல் பாவனை மாற்றங்களை இவ் வீணையில் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதன் விளைவாக குறைந்தளவு தாழ்வு சுருதி நிலையினைப் பேணும் வாத்தியமாக இது கருதப்பட்டது. அதிக சித்திர வேலைப்பாடுகள் செறிந்த வாத்தியமாக இது கருதப்படுகின்றது. வடஇந்திய இசைப் பண்பாட்டிலேயே பெரிதும் இவ்விசைவாத்தியம் பயன்படுத்தப்படுகின்றது.
அடுத்து வீணை என்ற பார்வை வரிசையில் இடம்பெறும் மற்றுமொரு வாத்தியம் வச்சிர வீணையாகும். இது பெரிதும் வட இந்திய சாஸ்திரீக சங்கீதத்தில் முக்கிய இடம்பெறும் வாத்தியமாக மிளிர்கின்றது. அடிப்படையில் நான்கு முக்கிய தந்திகளையும் ஐந்து இரண்டாந்தர தந்திகளையும் பதின்மூன்று துணைக் கம்பிகளையும் கொண்டு விளங்குவது இவ் வச்சிர வீணையாகும்.
மேலும் இவ் வச்சிர வீணையானது பெரிதும் வட இந்திய இசைக்கே பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் வச்சிர வீணையின் வழித் தோன்றல்களாகக் கர்நாடக இசை உலகில் பயன்படும் வீணையானது சித்திர வீணையென போற்றப்படுகின்றது. இது வச்சிர வீணை மற்றும் கோட்டு வாத்தியம் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் உருவானதாகும். இந்த வகையில் வீணையின் வகைகள் பலவகைப்படுகின்றன. அவ்வாறே அதன் பயன்பாடும் மாற்றம் பெறுகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக