புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம்தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும்.இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது.


எண்ணெய் வழியும் சருமத்திற்கு சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது. இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும். மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.

முகம் பளிச்சிட சிலருடைய முகம் எப்போது பார்த்தாலும் இருண்டே காணப்படும். எவ்வளவுதான் கிரீம்கள் தடவினாலும் முகம் பளிச்சிடாது. இவர்கள் முட்டைகோஸ் மற்றும் கேரட் போன்றவற்றின் வேகவைத்த தண்­ணீரை கீழே கொட்டிவிடாமல் அதை ஆறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும். கறுப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

முகப்பரு மாற முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்

வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
துளசி இலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு

எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.

வெள்ளரி - 2 துண்டு
தக்காளி - 2 துண்டு
கேரட் - 2 துண்டு

எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

புருவங்கள் அடர்த்தியாக சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும். இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். அல்லது சுத்தமான விளக்கெண்ணெய்யை தடவி வந்தாலும் புருவம் அடர்த்தியாக வளரும்.

முகம் பளபளக்க முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்துப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். வெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.

1 கருத்து:

  1. நல்ல பயனுள்ள தகவல்கள் . எல்லோருக்கும் பயன்படும் வகையில் மிகவும் இலகுவான வழிமுறைகள் .நன்றி சாந்தை.நெட் இணையத்திற்கு

    பதிலளிநீக்கு

 
Top