புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


newsயாழ்.மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் நேற்று முதல் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை விண்ணப்பித்து ஒரு மணி நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான சேவை யாழ்.மாவட்டத்தில் பதிவாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்.மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள பிறப்புச் சான்றிதழ்களை கணினி
மயப்படுத்தும் சேவைகள் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வந்தன. அவை ஓரளவுக்கு முழுமை பெற்றுள்ள நிலையில் அவற்றை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள பதிவாளர் திணைக்களத்தில் நேற்றுக் காலை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர, மேலதிக பதிவாளர் ந.சதாசிவஐயர், யாழ்.மாவட்ட பதிவாளர் ப.பிரபாகர் ஆகியோர் பிறப்புச் சான்றிதழ்களை உடன் வழங்கும் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 20மில்லியன் ரூபா செலவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவு, கோப்பாய் பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சங்கானை பிரதேச செயலர் பிரிவு, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு,வேலணை பிரதேச செயலர் பிரிவு, உடுவில் பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றிலேயே நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் மிக விரைவில் இந்தத் திட்டம் செயற்படுத்தப் படவுள்ளது என்று பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு உதவி அரச அதிபர் பணிமனை, மருதங்கேணி உதவி அரச அதிபர் பணிமனை, காரைநகர் உதவி அரச அதிபர் பணிமனை, ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் பணிமனை, பிரதேசங்களில் உள்ளோரின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை மாத்திரமே இனி யாழ்.மாவட்ட செயலகத்தில் பெறமுடியும். அந்தப்பிரதேசத்து மக்கள் விரும்பினால் தமது பகுதிக்கு அண்மையிலுள்ள பிரதேச செயலகம் மூலமும் தமது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.
யாழ். செயலக நிகழ்வைத் தொடர்ந்து கரவெட்டி பிரதேச செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவையை பதிவாளர் நாயகம் ஆரம்பித்து வைத்தார். பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடந்த நிகழ்வில் மேலதிக பதிவாளர் நாயகம் ந. சதாசிவஐயர், உதவிப்பதிவாளர் நாயகம் வசந்த சந்திரிகம ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுச்சான்றிதழ்களைக் கணினி மயப்படுத்தி அவற்றை உடன் மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் 2013 ஆம் ஆண்டில் நாடு முழுதும் பூர்த்தியாகும் என்று அதிகாரிகள் கூறினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top