புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மெரினா கடற்கரையில், வாயில் மணலை திணித்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மெரினா கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெரினா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு சிறுவன் ஓடிவந்து எஸ்ஐ பழனிச்சாமியிடம் “சார், லைட்
ஹவுஸ் பின்புறம் ஒருத்தரை அடித்து உதைக்கிறார்கள்’’ என்றான்.

உடனே அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது 2 பேர் சேர்ந்து 30 வயது வாலிபரை கொன்று மணலில் புதைத்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போலீசை கண்டதும் அந்த 2 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களை எஸ்.ஐ. மடக்கிப் பிடித்து கைகளை கட்டினார். பின்னர், மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மணலில் புதைக்கப்பட்டிருந்த சடலம் வெளியே எடுக்கப்பட்டது. அந்த வாலிபரின் வாயில் மணலை திணித்து, தலையை மணலுக்குள் புதைத்தது தெரிய வந்தது. பிறகு அவசர ஆம்புலன்ஸ் மூலம் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிடிபட்ட 2 பேரும் மெரினா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் “கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் புலிக்கோடு பகுதியை சேர்ந்த பிரபு (24), ரத்தீஸ் (24) என்பது தெரிந்தது. தூங்கிக் கொண்டு இருந்தபோது அந்த வாலிபரின் காலை மிதித்ததால் ஏற்பட்ட தகராறில், மணலை வாயில் திணித்து கொன்று விட்டதாக போலீசில் 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் 2 பேரையும் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. கறுப்பு பூப்போட்ட சட்டை, பிரவுன் கலர் பேண்ட் அணிந்திருந்தார். உடலில் 2 இடங்களில் மச்சம் உள்ளது. பையில் 4 சாவிகள், ஒரு துண்டு பேப்பரில் கணக்கு எழுதப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நொச்சிக்குப்பம் பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், எந்த துப்பும் கிடைக்கவில்லை. திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மேன்ஷனில் தங்கி இருந்தவரா? என்று அறிவதற்காக கடற்கரைக்கு அருகில் உள்ள மேன்ஷன்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வாலிபரை (படத்தை பார்க்கவும்) பற்றி அடையாளம் தெரிந்தால், உடனடியாக மெரினா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுவனின் உதவியால் சிக்கிய கொலையாளிகள்

நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சூர்யா(15). மயிலாப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் இரவு இவன் பீச்சில் கலங்கரை விளக்கம் பின்புறம் பாய், தலையணையுடன் தூங்குவதற்காக வந்தான். அப்போது ஒரு வாலிபரை பிரபு, ரத்தீஸ் 2 பேரும் அடித்து உதைத்து மணலில் புதைப்பதை பார்த்து ரோட்டிற்கு ஓடி வந்துள்ளான். அப்போது ரோந்து பணியில் இருந்து எஸ்ஐ பழனிச்சாமியிடம் நேரில் பார்த்ததை தெரிவித்துள்ளான். பிறகுதான் அவர் சென்று 2 பேரையும் மடக்கி பிடித்துள்ளார்.

கைதான இன்ஜினியர் வாக்குமூலம் ‘ஆபாசமாக திட்டியதால் கொன்றோம்’

கைது செய்யப்பட்ட பிரபு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், “நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், எனது சான்றிதழ்கள் கிழிக்கப்பட்டு விட்டது. தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் மேஸ்திரியாக வேலை செய்கிறேன். ரத்தீஸ் கொத்தனாராக வேலை செய்கிறார்.

எங்களுடன் 7 பேர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) அன்று வேலை எதுவும் இல்லை. அதனால், ராயப்பேட்டையில் உள்ள கான்ட்ராக்டர் சேகர் என்பவரை சந்திப்பதற்காக சென்றோம். அவர் கூலிப்பணம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினோம்.

மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்றோம். அங்கு மது அருந்து விட்டு குளித்தோம். மீண்டும் இரவிலும் மதுபாட்டில்கள் வாங்கி வந்து, கலங்கரை விளக்கம் அருகில் மது அருந்தினோம். போதையேறிய பிறகு கடற்கரை மணலில் தூங்குவதற்காக நடந்து சென்றோம். அப்போது, வழியில் வாலிபர் ஒருவர் படுத்து இருந்தார்.
போதையில் தள்ளியாடியபடி சென்றபோது, அந்த வாலிபரை மிதித்து விட்டோம். தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், எங்களை பார்த்து ஆபாச வார்த்தைகளில் திட்டினார்.

இதனால், எங்களுக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அந்த வாலிபரை அடித்து உதைத்தோம். அதனால் “காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள்’’ என கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு யாரும் வந்து விடக்கூடாது என பயந்து, அந்த வாலிபரின் கைகளை ரத்தீஸ் பிடித்துக்கொள்ள, அவரது வாயில் மணலை திணித்தேன். இதனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார். அதிர்ச்சியடைந்த நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அதே பகுதியில் மணலை தோண்டி புதைத்தோம். இடுப்பு வரை புதைத்து விட்ட பிறகு, போலீசார் வந்து எங்களை பிடித்து விட்டார்கள். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top