புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மன்னார், வங்காலைக் கடலில் மிதந்துவந்த போத்தல் ஒன்றில் மதுபானம் இருப்பதாக எண்ணி அதனை எடுத்து அருந்திய 4 இளைஞர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், வங்காலைக் கிரமாத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டன.

வங்காலைக் கடற்கரைக்கு கடந்த புதன்கிழமை சென்றிருந்த இந்த 4 இளைஞர்களும் கடலில் இருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த மதுபான போத்தல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளதாகவும் இதில் வெளிநாட்டு மதுபானம் காணப்படுவதாக எண்ணி அந்தப் போத்தலில் காணப்பட்ட திரவத்தை எடுத்து இவர்கள் அருந்தியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த திரவத்தை அருந்திய பின்னர் இந்த 4 இளைஞர்களில் சிலர் வாந்தி எடுத்தபோதிலும், அவர்கள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை எனவும் இருப்பினும் இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் அருந்தியதாகக் கூறப்படும் திரவத்தின் வெற்றுப் போத்தல் வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அது மதுபானம் அல்ல எனவும் அவர்கள் அருந்திய திரவம் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும்போது பயன்படுத்தும் ஒருவகை மருந்து எனவும் தெரியவந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top