புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயா‌ரித்திருக்கும் இரண்டாவது படம். முதல் படம் எங்கேயும் எப்போதும் போலவே இந்தப் படத்தையும் முருகதாஸின் அசிஸ்டெண்ட் - கின்ஸ்லின் - இயக்கியிருக்கிறார். முருகதாஸின் தம்பி திலீபன் ஹீரோ.


நாயகனின் வீரதீரத்தை சொல்ல ஒரு கதை, ரொமான்டிக் ஏ‌ரியாவுக்கு ஒரு ஹீரோயின். தமிழின் ஐயாயிரத்துச் சொச்ச படங்களின் அதே ஃபார்முலா.

ஷேர் ஆட்டோ ஓட்டும் சாதாரணன் சக்தி. அவனை கொலை செய்ய மூன்று குரூப்கள் முயல்கின்றன. முதலாவது பென்னி (சம்பத்) என்கிற லோக்கல் ரவுடி. இரண்டாவது ஒரு மார்வாடி தொழிலதிபர் (ஜெயப்பிரகாஷ்). மூன்றாவது சக்தியின் பக்கத்துவீட்டு எல்ஐசி ஏஜென்டான இளைஞன் (நண்டு ஜெகன்).

படத்தின் ஆரம்பத்தில் ஒரு சாதாரண இளைஞனை மூன்று பேர்கள் கொலை செய்ய முயலும் போது ஏன், எதற்கு என்று கொஞ்சம் சுவாரஸியம் எழுகிறது. அந்த காரணத்தை நான் லீனியராக சொல்லும் யுக்தியும் ஓகே. ஆனால் காரணங்களும், அதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும்தான் விஷயமே.

கழுத்தில் கத்தி வைத்து பணத்தை பிடுங்கும் கும்பலை தேடிப்போய் ஹீரோ பணத்தை திரும்ப வாங்குவதெல்லாம் நன்றாகதான் இருக்கிறது. ஆட்டோக்காரனிடம் அடிவாங்கியதால் லோக்கல் ரவுடிக்கு மார்க்கெட் டல்லாகி பிக்பாக்கெட் அடிக்கிற நிலைக்கு வருவதையும்... சகித்துக் கொள்ளலாம். கொலை செய்யப் போவதை காய்கறி கணக்கு சொல்வது போல் பொது இடத்தில் ஒருவன் போனில் பேச, அதனை வைத்து ஹீரோ கொலையை தடுப்பதையும்... தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த கடைசி எபிசோட்... நண்டு ஜெகனும் அவனது நண்பர்களும், ஒட்டவே இல்லையே பாஸ்.

குழந்தை கடத்தவே கூடிக்கூடி பேசுகிறவர்கள் ஒரு கொலையை செய்துவிட்டு வேறொருவனையும் போட்டுத் தள்ள ஹவுஸிங் போ‌ர்ட்டின் ஜனத்திரளுக்கு நடுவில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதை எந்த லா‌ஜிக்கில் சேர்ப்பது?

ஒருபக்கம் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில், அந்த சுவடே இல்லாமல் அஞ்சலியை டாவடிக்கிறார் ஹீரோ. பெ‌ரிய படிப்பு படிப்பதாய் சொல்லி ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்கும் அஞ்சலிதான் படத்தின் ‌ரிலீஃப். அவரும் அவ‌ரின் தோழிகளின் பட்லர் இங்கிலீஷும் புன்னகைக்க வைக்கின்றன. ஆனால் அந்த ஷாப்பிங் பாடல் போர். தனியாக கேட்கையில் நன்றாக இருக்கும் பாடல்களும் படத்தின் சூழலுக்கு ஒட்டாமல் நெ‌ளிய வைக்கின்றன. ஆட்டோ ஓட்டிக் கொண்டே ஹீரோ கனவு காணும் பாடல் மட்டும் ஓகே. அதை படமாக்கியிருக்கும் விதத்தில் எங்கேயும் எப்போதும் படத்தின் மாசமா ஆறு மாசமா பாடலின் சாயல் அப்பட்டமாக‌த் தெ‌ரிகிறது. அஞ்சலியின் ஆளுமை நிரம்பிய காதலி பிம்பமும் எங்கேயும் எப்போதும் படத்தின் இன்ஸ்பிரேஷன்தான். தமிழ் ஹீரோயின்களின் அசட்டுத்தனத்தை கூடுதலாக சேர்த்து வித்தியாசப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

திலீபன் நடிப்பதற்கான முயற்சி எதையும் செய்யவில்லை என்பதுதான் இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர் செய்திருக்கும் நல்ல விஷயம். முருகதாஸ் மாதி‌ரி அண்ணன் இருந்தால் காதலியைப் பார்த்து சி‌ரித்து, சண்டைக் காட்சிகளில் முறைத்து எளிதாக ஹீரோவாகலாம். அண்ணன் இன்னும் ஏழெட்டு படம் எடுக்கட்டும், தம்பி நடிக்காமலா போகப்போறார்.

ஹீரோ எப்படி சூப்பர்ஹீரோவானார் என்பதை இயக்குனர் மெனக்கெட்டு யோசித்திருக்கிறார். பென்னியின் ஆட்களிடம் முதலில் அடிவாங்குகிறவர் ஒருமாதம் கழித்து வந்து பின்னி பெடலெடுக்கிறார். எப்படி? ஒரு மாசம் புல்அபஸ் எடுத்து, தம்பிள்ஸ் அடித்தாராம். ஓகே, அதுக்காக கிளைமாக்ஸிலுமா? விடியிற வரைக்கும் அடிவாங்கி, அடடா நம்மால இவனுங்களை சமாளிக்க முடியாதுன்னு பொறுப்பா யோசித்து, அடியாட்களை ஏமாற்றி தூங்கி, சிக்னலில் தப்பித்து பரோட்டாவும் சால்னாவும் தின்று, அப்படியே கிரவுண்டில் புல்அப்ஸ் எடுத்து... ஒவ்வொரு காட்சியிலும் ஏவிஎம் உருண்டை அளவுக்கு ஓட்டையை வைத்துவிட்டு இந்த டுபாக்கூர் சண்டைக்காட்சிக்கு (எப்படியும் ஹீரோதான் ஜெயிக்கப் போறார்) பிளாஷ்பேக்கில் சால்னா சாப்பிட்ட கதையை சொல்றது... ஐயாமாரே உங்களுக்கே ஓவரா தெ‌ரியலை? புவி‌யீர்ப்பு விசையை கிண்டல் செய்கிற மாதி‌ரி ஹீரோ நெஞ்சில் குத்தினாலும் அடியாட்கள் சைடு வாக்கில் ஆறேழு வட்டமடித்துதான் விழுகிறார்கள்.

அடாவடியும் அசட்டுத்தனமும் கலந்த அஞ்சலியும், தண்ணியடித்துக் கொண்டே ´அப்படியே ஃபங்காயிட்டான்´ கதை சொல்லும் சம்பத்தும் கொடுத்த காசுக்கு ரசிக்க வைக்கிறார்கள். இன்னொருவர் இசையமைப்பாளர் ‌ஜிப்ரான். பின்னணியிசையில் அதிகமாக சோதிக்கவில்லை, குறிப்பாக டைட்டிலில் வரும் இசை இவ‌ரிடம் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.

கைத்தட்ட வைக்கணும் கல்லா நிறைய காசு பார்க்கணும் நோக்கத்துக்காக எடுத்தப் படம். அரை கிணறு உத்தரவாதம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top