
பெங்களூருவில் உள்ள பேட்ராயனபுரா, சாமண்ணா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் அஜீஸ். இவருக்கு மெகர்தாஜ் என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். சரக்கு ஆட்டோ டிரைவரான அப்துல் அஜீஸ், கடந்த 25-ந் தேதி சிவனசமுத்திரத்தில் உள்ள தர்காவுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். வழிபாடுகளை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பிய அப்துல், மனைவியை சமையல் செய்யச் சொல்லி இருக்கிறார்.
ஆனால் அதனை மறுத்த மெகர், சமைப்பதற்கும், வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்கும்படி தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபத்தில் அப்துல், அருகில் கிடந்த நைலான் கயிறால் மெகரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், மெகர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பின்னர் தனது மனைவியை தானே கொலை செய்து விட்டதாகக் கூறி பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார் அப்துல். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த மெகரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்துல் மற்றும் மெகர் இருவருமே ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதும், ஐந்தாண்டுகளுக்கு ம் முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினருக்கு, திருமணமான நாள் முதற்கொண்டு சண்டை நடந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.