புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மேற்கிந்தியத் தீவுகளும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.


இந்த ஆட்டம், ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் வென்ற கையோடு இங்கு வந்துள்ள இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்போடு இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் முதல் ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட மேற்கிந்தியத் தீவுகள், மிகுந்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் இந்திய அணியை சந்திக்கும்.

இரு அணியின் வீரர்களுமே ஐபிஎல் போட்டியில் இணைந்து விளையாடியதால், ஒவ்வொருவருமே மற்றவர்களைப் பற்றி துல்லியமாக தெரிந்து வைத்துள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய அதே அணியே களமிறங்கும். அதில் எவ்வித மாற்றமும் இருக்காது. ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கோலி, தினேஷ் கார்த்திக், தோனி, ரெய்னா என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது இந்தியா.

ஆல்ரவுண்டர் இடத்தில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோரின் கூட்டணியும், சுழற்பந்துவீச்சில் அஸ்வின்-ஜடேஜா ஆகியோரின் கூட்டணியும் இந்தியாவுக்கு பலம் சேர்க்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில்தான். தனிநபராக ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவர்.

சார்லஸ், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், டுவைன் பிராவோ, கிரண் போலார்ட் ஆகியோரும் அந்த அணிக்கு பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சில் ரவி ராம்பால், கெமர் ரோச் ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் சுனில் நரேனும் மேற்கிந்தியத் தீவுகளின் துருப்புச் சீட்டாக இருப்பார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற இந்திய அணி, வெற்றியைத் தொடருமா அல்லது சாம்பியன்ஸ் டிராபியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் கண்ட தோல்விக்கு மேற்கிந்தியத் தீவுகள் பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
 
Top