புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகர் : மிர்ச்சி சிவா
நடிகை : வசுந்தரா
இயக்குனர் :கிருஷ்ணன் ஜெயராஜ்
‘சென்னை-28’, ‘தமிழ்படம்’, ‘தில்லுமுல்லு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவா நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘சொன்னா புரியாது’! இந்தப் படத்தின் கதையும் சொன்னா
புரியாது.. ஹி... ஹி... படமா? பார்த்தாதான் புரியும்.. என்றாலும் நமக்கு புரிந்த வகையில் இதோ.. இதுதான் கதை. அதாகப்பட்டது,

ஹீரோ சிவா சரியான சோக்குப் பேர்வழி. குட்டி, புட்டி... என வாழ்க்கையை தனக்கு பிடித்தமாதிரி சரியாக என்ஜாய் பண்ணும் மனிதர். ஆனாலும் அவங்க அம்மா மீரா கிருஷ்ணனுக்கும் பாட்டி வத்சலாவுக்கும் அப்படி ஒரு நல்ல பிள்ளை! மகனுக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பது மீரா கிருஷ்ணனின் ஆசை! ஆனால், சிவாவுக்கு கல்யாணம், மனைவி, குடும்பம் என்றாலே... ‘எங்‌கே தனது ஜாலி லைப் காலியாகிவிடுமோ?’ என்னும் பயத்தில் திருமணப் பேச்சே எட்டிக்காயாக கசக்கிறது! இருந்தாலும் அம்மாவின் பாதயாத்திரை பயமுறுத்தலுக்காக ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்திற்கும் சம்மதிக்கிறார். அந்தப்பெண் ஹீரோயின் வசுந்தரா. அம்மணியோ, சிவாவுக்கும் ஒரு படி மேல்.. கேடி, கில்லாடி! அப்பா ஆர்.எஸ்.சிவாஜியின் பழைய பாடல் பயமுறுத்தலுக்காக கல்யாணத்திற்கு சம்மதிக்கும் தில்லாலங்கடி! இப்படி பெரியவர்களின் முன்னிலையில் இருவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டு தங்களுக்கு நடக்க இருக்கும் திரமணத்தை தாங்களே தடுக்க போடும் மாஸ்டர் பிளான்கள் காமெடியாவதும், அதுவே இருவருக்குள்ளும் காதலை எழுப்புவதும்தான் ‘சொன்னா புரியாது’ (என்ன புரிந்ததா) படத்தின் மொத்த கதையும்!

நாயகர் சிவா, பேசுவது புரியாது, நிறைய பேசிக்கொண்டே இருப்பார் என்னும் பரவலான குற்றச்சாட்டு இந்தப் படத்திலும் பிரதிபலித்திருக்கிறது... என்றாலும் புரியாமல் எல்லாம் இல்லை... கடி, கொய்யா இலை வைத்திய காமெடி... ஓப்பனிங் சீனிலேயே நண்பனை அவமதிக்கும் இந்தி பார்ட்டி கூட்டத்தி்ல், ‘ரோசாஹே சின்ன ரோசாஹே... டபுள் சைடும் போட்டா தோசா‌ஹை...’ என ‘ரோசாப்பூ சி்ன்ன ரோசாப்பூ..’ ‘சூர்யவம்ச’ பாடலை தனக்கு தெரிந்த இந்தியில் டப் பண்ணி பின்னி பெடலெடுத்திருக்கும் ஆரம்ப காட்சியில் தியேட்டரி்ல் கேட்க ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் படத்தின் க்ளைமாக்சுக்கு முந்தைய இரண்டு ரீல் வரை அடங்கிவிடாதபடி படத்தை அனாயாசமாக நகர்த்தி செல்கிறார் மனிதர்! ஹேட்ஸ் ஆப் சிவா! கடைசி இரண்டு மூன்று ரீல்களையும் அதே பெப்பில் நகர்த்தி சென்றிருந்தீர்கள் என்றால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்! சரி, அதுபோகட்டும்.. நைஸ் கோட்,  இப்போ நைட் நேரம் எல்லா கல்யாண மண்டபமும் மூடியிருக்கும். காலையில போய் பார்க்கலாம்... உள்ளிட்ட டயலாக்குகள் எல்லாம் டயலாக் வெடிகளா?! ஹாவ்! என்னமா வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறீர்கள் சிவா?! ஆனாலும் தமிழ் படத்தில் ஆரம்பித்த குசும்பு படத்துக்கு படம் பிறர் படங்களை நக்கலடித்தே தீர வேண்டுமா என்ன? கொஞ்சம் யோசியுங்கள்!

நாயகி வசுந்தரா, சிவாவுக்கு ஏற்ற ஜோடி. சில இடங்களில் நடிப்பில் சிவாவையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அம்மணி! பேஷ்! பேஷ்!

சிவா, வசுந்தரா மாதிரியே கங்கை அமரன், சிங்கமுத்து, ஆர்த்தி, ஆர்.எஸ்.சிவாஜி, மீரா கிருஷ்ணன், அல்வா வாசு, பிளேடு சங்கர், வத்சலா பாட்டி, ஃபன் ஆண்டர்சன் உள்ளிட்ட கெஸ்ட் ரோல், டெஸ்ட்ரோல் நடிகர்களும் சும்மா ஒரு பேச்சுக்கு கூட பெஸ்ட்ரோல் செய்திருக்கின்றனர். அதிலும் அந்த வத்சலா பாட்டி இவருக்கு எஃப்.பி.ன்னா ‘பேஸ் புக்’குன்னு தெரியலை.. இந்த ஆளு பாரஸ்ட்லேயே இருந்திருக்கலாம்., இந்த வீட்டுல பொண்ணு எடுக்க வேணாம்.. என ரிட்டயர்டு பாரஸ்ட் ஆபீசர் - ஆர்.எஸ்.சிவாஜி முன் ‘டேபும்’ கையுமாக அலட்டும் அலட்டல் இருக்கிறதே! அடி ஆத்தி... சரியான ஆளைத்தான் சிவாவின் பாட்டி ஆக்கி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ்!

சிவா - வசுந்தராவின் இயல்பான நடிப்பு, சரவணன் சந்துருவின் நச்-டச்-வசனம், யத்தீஷ் மகாதேவ்வின் இனிய இசை, சரவணனின் அழகிய ஒளிப்பதிவு, கிருஷ்ணன் ஜெயராஜின் எழுத்து, இயக்கம் உளளிட்ட ப்ளஸ் பாயிண்ட் ‘சொன்னா புரியாது’. படத்தில் இன்டர்வெல்லுக்கு பின்னான இழுவை உள்ளிட்ட ஒரு சில குறைகளை பெரிதாக வெளிக்காட்டாதது ஆறுதல்!

ஆக மொத்தத்தில் ‘சொன்னா புரியாது’ - ‘பார்த்தா புரியும்’.. ‘பார்க்கப் பார்க்க புடிக்கும்!’
 
Top