கடலில் கப்பல் மிதந்து செல்வதைப் பார்த்திருப்போம். மழை பெய்து ஓடும் நீரில் காகிதக் கப்பல் செய்து தண்ணீரில் விட்டு ரசித்திருப்போம். கடலுக்குள்ளே செல்லும் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப் போம். உள்ளே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படிச்
செயல்படுகிறது?கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவையே நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் 2 என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே ஒரு என்ஜின் உள்ளது.
இது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (Periscope) இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் என்றே இதனை அழைக்கலாம்.
கப்பலின் ஓரங்களில் வெடிகுண்டு வைக்கும் அறை இருக்கும். நீரினுள் மூழ்கும் முன்பு இதன் கதவுகளையும் அடைத்துவிடுவர். கப்பலின் அடிப்புறம் 2 பலகைகளால் ஆனது. கடலின் உள்ளேயிருந்து வேகமாக மேலே வர, கீழே இருக்கும் பலகையைத் தட்டிவிடுவர். முன்னும் பின்னும் சிறகுகள் அமைந்திருக்கும். கப்பலின் உள்ளே இடம் நெருக்கமாக இருக்கும். உணவுப் பொருள்கள், போர்க்கருவி, நீராவிக் கருவி, மின்சாரக் கருவி போன்றன அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும். மேலும், நீர்த்தொட்டிகளும் காற்றுக் குழாய்களுமே மூன்றில் ஒரு பங்கு இடத்தை அடைத்துவிடும்.
கப்பல் நீரினுள் மூழ்கும்முன்பு அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு கோபுர வாசலும் மூடப்படும். பின்னர் நீர்த்தொட்டி திறக்கப்படும். கடல் நீர் தொட்டிகளுக்குள் வந்து நிறைந்ததும் கப்பலின் எடை மிகுந்து கீழே செல்லும். இதற்குச் சிறகுகளும் உறுதுணையாகச் செயல்படும். கப்பல் கடலுக்குள் மூழ்கும்போது, முன்புறம் தாழ்ந்தும் பின்புறம் உயர்ந்தும் மீன்போல நீந்திச் செல்வதுபோல் இருக்கும்.
எவ்வளவு ஆழம் செல்ல வேண்டுமோ அதற்கேற்ப தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும். கப்பல் மேலே வரும்போது, காற்றுக் குழாய்கள் திறக்கப்படும். காற்றானது நீர்த் தொட்டிகளுக்குள் சென்று அங்கிருக்கும் நீரை வெளியேற்றும். இதனால் கப்பலின் எடை குறைந்து மேலே நீர்மட்டத்திற்கு வரும். கப்பல் வெளியே வரும்போது மீன் வெளியில் வந்து மூச்சுவிடுவதைப் போல் தோற்றமளிக்கும்.
கப்பலின் உள்ளே எடை ஒரே அளவில் இருக்க வேண்டும். கொஞ்சம் கவனிக்கத் தவறினாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கப்பலின் எடை குறையும் போதெல்லாம் அந்த அளவுக்குச் சரியான நீரைத் தொட்டிகளில் நிரப்ப வேண்டும். கப்பலின் இருமுனைகளிலும் உள்ள எடை தராசுத் தட்டுகள் போல் சமமாக இருக்க வேண்டும். நீராவிக் கருவிகள் கப்பலை நீர்மட்டத்திற்கு இழுத்துச் செல்வதுடன், வேண்டும்போது காற்றுக் குழாய்களை நிரப்பவும் மின்னாற்றலைப் புதுப்பிக்கவும் உதவுகின்றன. திடீரென ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க காற்று உடைகள் இருக்கும். இவை மூச்சுவிட, கரைசேர உறுதுணை செய்யும். நீர்மூழ்கிக் கப்பலில் செல்பவர்களுக்கு அஞ்சா நெஞ்சமும், வீரமும் வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டிஸ் (Thetis) என்ற நீழ்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்கியது. அதிலிருந்த 99 பேரும் உயிரிழந்தனர்.
எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்கும்வகையில் நீர்மூழ்கிக் கப்பல்களைச் செயல்பட வைக்க பல அரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீர்மூழ்கிக் கப்பல் என்றாலே அழிக்கும் தொழிலுக்கே முதன்மையாகப் பயன்படுத்தி வந்த காலம் இப்போது மாறிவிட்டது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் ஆழ்கடல் உயிரினங்கள், புவியியல், ஆழ்கடல் தட்பவெப்ப நிலை ஆய்வு, கடல்வழிப் போக்குவரத்துத் தகவல் தொழில்நுட்ப ஆய்வு போன்ற பல ஆய்வுகளுக்குப் பயன்படுவனவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் திகழ்கின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக