புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நமக்கு நல்லதைத்தான் செய்வார் பகவான்; நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் இது பகவான் சித்தம் என்று ஆறுதல் பெற வேண்டும்; அது, நல்லதாகவே முடியும்.ஒரு ராஜாவும், மந்திரியும் இருந்தனர். ஒரு நாள் மாம்பழம் நறுக்கினார் ராஜா. அப்போது, அவரது விரல் ஒன்று கத்திபட்டு, துண்டாகி கீழே விழுந்து விட்டது.
பக்கத்திலிருந்த மந்திரி, “நடப்பது எல்லாம் நன்மைக்குத் தான்…’ என்றார். ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது. விரல் துண்டாகி விட்டது; இவர், எல்லாம் நன்மைக்குத்தான் என்கிறாரே என்று கோபப்பட்டு, மந்திரியை சிறையிலிட்டார். மந்திரியும் நடப்பது எல்லாம் நன்மைக்குத் தான் என்று சொல்லிவிட்டு, சிறைக்குச் சென்றார்.

ஒரு நாள் தனியாக காட்டுக்குச் சென்றார் ராஜா. அங்கே சிலர் நர பலி கொடுப்பதற்காக ஆளைத் தேடிக் கொண்டிருந்தனர். ராஜாவைப் பார்த்ததும், அவரை இழுத்துக் கொண்டு தங்கள் தலைவனிடம் சென்றனர். ராஜாவை ஒவ்வொரு அங்கமாக பரிசோதித்தான் தலைவன். ராஜாவுக்கு ஒரு விரல் இல்லாததை பார்த்து, இப்படி அங்கஹீனம் உள்ளவன் நரபலிக்கு பிரயோஜனமில்லை என்று ராஜாவை, “ஓடிப்போ’ என்று விட்டு விட்டான்; ராஜாவுக்கு சந்தோஷம்.

அன்று, “நடப்பது எல்லாம் நன்மைக்கு தான் என்று மந்திரி சொன்னது எவ்வளவு உண்மையாகி விட்டது! நாம் அவரை சிறையிலடைத்தது தவறு. உடனே, அவரை விடுதலை செய்து, மன்னிப்பு கேட்க வேண்டும்…’ என்று எண்ணி, உடனே சிறைச்சாலைக்கு வந்து மந்திரியிடம் விவரம் சொல்லி, அவரை விடுதலை செய்தான்.


அப்போது, மந்திரியை பார்த்து, “உங்களை சிறையிலடைக்கும் போது, வருத்தப்படாமல்,நடப்பது  எல்லாம் நன்மைக்கே என்று சொன்னீர்களே… அது எப்படி?’ என்று கேட்டான். அதற்கு மந்திரி, “தாங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால் நானும், உங்களுடன் காட்டுக்கு வந்திருப்பேன். நரபலி கொடுப்பவர்கள் என்னையும் பிடித்து
போயிருப்பர்.

“எனக்கு அங்கஹீனம் எதுவும் இல்லாததால், என்னை நரபலி கொடுத்திருப்பர். தாங்கள் என்னை சிறையிலிட்டதால், நான் உங்களோடு வராமல் தப்பினேன். அதனால், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணினேன். இப்போதாவது புரிந்ததா? எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்றும், எல்லாம் அவன் செயல் என்றும் நினைக்க வேண்டும்…’ என்றார் மந்திரி.
ராஜாவும், “நீங்கள் சொல்வதும் சரி தான்…’ என்றார்.
அதனால், நமக்கு எப்போது என்ன நடக்க வேண்டும் என்றுள்ளதோ, அப்போது, அது நடந்து விடும்.
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top