ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2010 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த புனிதர் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான் இவ்வாறு கொண்டாடப்படுகிறது. இன்று, உலகம்பூராவும் பரவலாக நூறு கோடி மக்களுக்கு மேல் கிறிஸ்துமஸ் பண்டிகையை வண்ணமயமாக, கேளிக்கைகள், உறவினர், நண்பர்களுடனும்
விருந்துகளுடனும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் என்பது செய்தியாகும்.
இந்நாளில் ஒளிரும் நட்சத்திரங்களை வீட்டின் முன்பு தொங்கவிட்டும், பல வகை வண்ண விளக்குகளால் வீடுகள், கடைகள், அலுவலகங்களை அலங்கரித்தும் பிரியமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும், பரிசு வழங்கியும் சுவை மிகுந்த கேக்குகள், பலகாரங்கள் வழங்கியும் அறுசுவை உணவுகளை உண்டும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள்.
இவ்வாறு வீடுகளில் அழகுற அமைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்களை, கிறிஸ்தவர்கள் வழக்கமான முக்கியத்துவத்துடன் கிறிஸ்துமஸ் விழாவின் ஓர் அங்கமாக வடிவமைத்து மகிழ்கிறார்கள். இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், இந்த மாதிரி மரத்தை அலங்கரித்து வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் மார்டின் லூதர் ஆரம்பித்து வைத்தார்.
அது குறித்த ஒரு பழங்கதை உண்டு. சுமார் 1, 500 ஆண்டுகளுக்கு முன் ஓர் அருமையான கிறிஸ்துமஸ் மாலை நேரத்தில், ஜெர்மனியின் பனி மூடிய ஒரு காட்டுப் பகுதியில் மரங்களினூடே மார்டின் லூதர் நடந்து கொண்டிருந்தபோது, என்றும் பசுமை மாறாதிருக்கும் அழகிய செடிகள் அவரைத் தடுத்து நிறுத்தின. அவற்றின் பசுமைக் கிளைகள், பனித்துளிகளால் மூடப்பட்டு, சந்திர ஒளியில் அழகாகப் பிரகாசித்ததைக் கண்டு, அதில் மனம் பறி கொடுத்து நின்றார்.
அவர் வீட்டுக்குச் சென்றதும், அவர் கண்ட அழகை வீட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஒரு சிறிய தேவதாரு மரத்தை வீட்டுக்குள் வைத்து, அதில் மெழுகுவர்த்திகளை ஒளிரவிட்டு அலங்கரித்தார். இயேசுவின் பிறந்தநாளில், அவர் பிறப்பைக் கொண்டாடுவதற்கான அர்ப்பணிப்பாக அந்த மரத்தை அவர் எண்ணினார்.
சில ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மரங்களை அலங்கரித்து வைக்கும் பழக்கம் ஜெர்மனி முழுவதும் பரவியது. கிறிஸ்துமஸ் மர விற்பனை கிறிஸ்துமஸ் மர விற்பனை 1851-ல் ஆரம்பமானது. கேட்ஸ்கில் மார்க்கார் என்ற விவசாயி இரண்டு எருதுகள் பூட்டிய வண்டியில் பசுமையான மரங்களை நியூயார்க் நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தார்.
1900-வாக்கில் அமெரிக்காவில் ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் கிறிஸ்துமஸ் மரத்தை வாங்கினார்கள். அதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த வழக்கம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவியது. 1930-ல் நர்சரி செடிகள் தயாரிப்பாளர்கள் அவர்கள் தயாரித்த பசுஞ்செடிகளை வீட்டு அலங்காரங்களுக்கும், பூங்காக்களுக்கும் மற்ற வகைகளுக்கும் விற்பதில் மந்த நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் கிறிஸ்துமஸ் மரங்களின் தேவைகள் அதிகமானதால், அவர்கள் தங்கள் பண்ணைகளைக் கிறிஸ்துமஸ் மரங்களுக்கான பண்ணைகளாக மாற்றி, செடிகள், வளர்ந்த மரங்களை கிறிஸ்துமஸ் மரங்களுக்காக வெட்டி விற்பனை செய்தார்கள். இவ்வாறுதான் கிறிஸ்துமஸ் மரப்பண்ணைகள் பிறப்பெடுத்தன.
பண்ணைகளில் சீரான நல்ல மரங்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஏனென்றால் ஏற்கெனவே இருந்த பண்படுத்தப்படாத சீரற்ற மரங்களைவிட அவை அதிக விலைக்கு விற்றன. என்றும் பசுமையாயிருக்கும் ஆறு வகையான பைன், பைர் மரங்களைப் போன்ற ஊசியிலை மரங்கள், கிறிஸ்துமஸ் மர வியாபாரத்தில் முக்கியமாக 90 சதவீதம் இடத்தைப் பிடித்தன. இதில் முதல் இடத்தைப் பிடித்த ஸ்காட்ச் பைன் மரங்கள் 40 சதவீதம் சந்தையைப் பிடித்திருந்தன.
டக்ளஸ் பைர் மரங்கள் 35 சதவீதம் சந்தையைப் பிடித்ததென கணக்கிடப்பட்டன. இவைகளுக்கு அடுத்ததாக, அதிகம் விற்பனையான மரங்கள், நோபிள்பைர், ஒயிட் பைன், பால் சப்பையர் மற்றும் ஒயிட்சப்ரூஸ் ஆகிய மரங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக 35 முதல் 40 கோடி இயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் வட அமெரிக்காவிலும், 60 முதல் 65 கோடி மரங்கள் ஐரோப்பாவிலும் உற்பத்தியாகின்றன. 20 கோடி மரங்கள் ஜெர்மனியில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான கிறிஸ்துமஸ் மரங்கள் ஜப்பான், சீனா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கிறிஸ்துமஸ் மரப்பண்ணைகளில் கிறிஸ்துமஸ் மரங்களுக்காக என ஒதுக்கப்பட்ட 6 அல்லது 7 அடி உயரம் வரை வளர, 13 அல்லது 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வளர்ச்சி விகிதம் உலகின் தேவைகளை ஈடுகட்டும் விதமாக இல்லை. சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மரங்களின் தேவை மற்றும் மக்களின் விருப்பம் கூடிக்கொண்டே போகிறது. இது பல்வேறு வகையான செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் உற்பத்திக்கு வழிகோலியது. செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் அதிக உற்பத்தி மற்றும் விற்பனை இயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் விற்பனையை பாதித்தது.
அதிக அளவாக பிவிசி பிளாஸ்டிக்குகளில் தயாராகும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள், கையாளவும், சுலபமாக எடுத்துச் செல்லவும் வசதியான பாதுகாப்புக்கும், மறுஉபயோகத்திற்கும் வசதியாக இருந்தன. இயற்கை மரங்களைவிட செயற்கை மரங்களுக்கான செலவுகள் குறைவாகவும் இருந்தன. பிரிலிட், பைர், ஆப்டிக் ஆகிய இயற்கை மரங்கள், செடிகளைப் போலவும், இயற்கையான பிற மரங்களைப் போலவும், பல்வேறு வகைகளிலும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் இன்று இருக்கின்றன. உலகிலேயே சைனாவிலுள்ள பியர்ன் ஆற்றின் டெல்டா பகுதிகளில் மிக அதிக அளவு செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் இன்று உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவைகளுக்கான கிராக்கி ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கிறிஸ்துமஸ் மரங்கள் இயற்கையானதாகவோ, செயற்கையானதாகவோ எதுவாக இருந்தாலும் அவைகளின் பழமையான பின்னணியோடும் கிறிஸ்தவர்களின் உணர்வுகளோடு கலந்ததாகவும், பக்திபூர்வமாக ஈர்ப்பதாகவும், இன்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் மிக முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரங்கள் இடம் பெறுகின்றன.
|
தெரிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி
பதிலளிநீக்குஇனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்துகள்
@தமிழ்த்தோட்டம்நன்றி நண்பரே உங்களுக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள் ,சாந்தை இணையம்
பதிலளிநீக்கு