கண்டமனூர் என்ற ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை, தான் அடைய வேண்டும் என்று நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயர் மறைந்து பேராசைக்காரனாயிற்று.ஒருநாள் வெளியூருக்கு
வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து, காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்த கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதை கிணற்றுக்குள் விட்டு தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.
கிணற்றுக்குள் இருந்து, ""யார் இங்கே தண்ணீர் எடுப்பது?'' என்ற பயங்கரமான குரல் கேட்டது.
அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
நடுங்கும் குரலில், ""ஐயா! நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?'' என்று கேட்டான்.
""விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யாருடைய கண்ணுக்கும் தெரியமாட்டேன்!'' என்றது அந்தக் குரல்.
""மந்திரக் கிணறா? விரும்பியதை எல்லாம் தருமா?'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.
""உன்னிடம் பொற்காசுகள் உள்ளதா? ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு. உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்!'' என்றது அந்தக் குரல்.
"என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசைக் கிணற்றுக்குள் போட்டான்.
""விலையுயர்ந்த நகைகளாலும், பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்!'' என்றான் அவன். ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும், நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.
""ஆ! ஏராளமான செல்வம் கிடைத்து விட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான்தான்!'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.
""ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில் திருடர்கள் இருப்பார்களே! அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசு களையும் கைப்பற்றிக் கொள்வார்களே. என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடமுள்ள இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.
""உனக்கு என்ன வேண்டும்?'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.
""வண்டியிலிருக்கும் நகைகளும், பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக்கூடாது!'' என்று கேட்டான்.
""அப்படியே ஆகட்டும்!'' என்று குரல் கேட்டது.
வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும், பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.
விட்டுக்குள் ஓடினான். ""இனி நாமோ, நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டியதில்லை. அரசனைப்போல செல்வச்செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலையுயர்ந்த பொருட்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தான். ""என்னங்க! வண்டியில் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பதாகச் சொன்னீர்களா? எந்தப் பொருட்களும் இல்லையே!'' என்றாள்.
அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும், நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, ""வண்டியை நன்றாகப் பார்!'' என்றான்.
""நன்றாகப் பார்த்து விட்டுத்தான் சொல்கிறேன்!'' என்றாள் மனைவி.
அப்போதுதான் அவனுக்கு தான் கேட்ட இரண்டாவது வரம் எவ்வளவு தவறானது என்பது புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலைமதிப்பற்ற பொருட்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன், வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டுக்குச் சென்றான்.
அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப்போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின. என்ன பிரயோசனம்! அவை இவன் கண்களுக்கு மட்டும் தெரிந்தன. தன்னுடைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.
0 கருத்து:
கருத்துரையிடுக