ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் பெயர் வில்ஃப்ரெட். வாத்துகளை வளர்ப்பது அவனது தொழில், வாத்துகளையும் முட்டைகளையும் விற்பான். ஒரு முறை, ஒரு வாத்து அடைகாத்த முட்டை ஒன்று உடைந்து, வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. அதைப் பார்த்து வியப்படைந்தான் வில்ஃப்ரெட். அந்த
வாத்துக் குஞ்சு தகதகக்கும் தங்க நிறத்தில் இருந்தது.ஆ! இந்த வாத்துக் குஞ்சு அதிசயமான பிராணிதான்!'' என்று உறுதியாக நம்பினான் வில்ஃப்ரெட். அதனால், அதை மிகவும் கவனமாக வளர்த்தான். அவனது நம்பிக்கை வீணாகவில்லை. வாத்துக் குஞ்சு வளர்ந்து, பெரிய தங்க வாத்து ஆனது. அது, தங்க முட்டை இட்டது. அப்போது நண்பன் பீட்டர் அங்கே வந்தான். ''எல்லாம் உன் அதிர்ஷ்டம்தான் வில்ஃப்ரெட்!'' என்ற பீட்டர், ''சிறப்பான இத்தகைய அரிய பிராணிகளும் பொருட்களும் ராஜாவுக்கு உரிமையானவை. அதனால், நீ இந்த வாத்தை ராஜாவிடம் கொடுத்துவிடுவதுதான் நல்லது. அவர் உனக்குப் பரிசுகள் தருவார்!'' என்றான்.பீட்டர் சொல்வது சரிதான் என்று வில்ஃப்ரெட்டுக்குத் தோன்றியது. அவன், வாத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டான்.ஒரு பெரிய காட்டைக் கடந்துதான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். படை வீரர்களால் தேடப்பட்டு வரும் ஒரு கொள்ளைக்காரன் அந்தக் காட்டில்தான் இருந்தான். பாங்கோ என்று அவன் பெயரைச் சொன்னாலே, எல்லோரும் பயந்து நடுங்குவார்கள். எனவே, வில்ஃப்ரெட் பயந்து பயந்து காட்டு வழியே சென்றான். அப்போது அவன் முன்னால் பாய்ந்து வந்து நின்றான் பாங்கோ.
''அடேய்! உன்னிடம் இருக்கும் பணத்தை எடு!'' என்று இரட்டைக் குழல் துப்பாக்கியை நீட்டினான்.''என்னிடம் பணம் இல்லை. ஒரே ஒரு வாத்துதான் இருக்கிறது. இதை ராஜாவிடம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். வாத்தை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டால், ராஜா உன்னைத் தண்டிப்பார்!'' என்றான் வில்ஃப்ரெட்.
அதைக் கேட்ட பாங்கோ, 'இவன் சொல்வது சரிதான். இந்த வாத்தைப் பிடுங்குவதால் என்ன பயன்? தேவை இல்லாமல் ராஜாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டும். அதற்குப் பதிலாக, இவனுக்கு ராஜா கொடுக்கிற பரிசுகளைப் பறித்துக்கொள்ளலாம்!’ என்று நினைத்தான்.பாங்கோ துப்பாக்கியை அகற்றிவிட்டுச் சொன்னான், ''உன்னை நான் சும்மா விடுகிறேன். ஆனால், ராஜா தருகிற பரிசில் பாதியை எனக்குத் தர வேண்டும்!''
''நிச்சயம் தருகிறேன்!'' என்று வில்ஃப்ரெட் சம்மதித்தான். பிறகு, வாத்துடன் அரண்மனைக்குச் சென்றான். தங்க வாத்தைக் கண்டு ராஜா பெரிதும் வியந்தார்.
''யாரங்கே? இந்த அற்புதமான பரிசைக் கொண்டுவந்த இவருக்கு, அருமையான விருந்து கொடுங்கள்!'' என்று கட்டளை இட்டார்.
விருந்து முடிந்த பிறகு, வில்ஃப்ரெட்டுக்கு விலை உயர்ந்த பரிசுகள் தரச் சொன்னார் ராஜா. அப்போது வில்ஃப்ரெட், ''ராஜாவே... எனக்கு ஒரு அப்பம் மட்டும் போதும். அதுவும் ஒரு பகுதியில் மயக்க மருந்து கலந்து செய்த அப்பம்!'' என்றான்.ராஜா அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அவன் கேட்டவாறு அப்பத்தைத் தயாரித்துக் கொடுத்தார்கள். வில்ஃப்ரெட் நேராக பாங்கோவிடம் வந்து சொன்னான், ''ராஜா எனக்கு இந்த அப்பம் மட்டும்தான் கொடுத்தார். இதில் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்!''
வில்ஃப்ரெட் அப்பத்தின் நல்ல பகுதியைப் பிட்டுத் தின்றான். மிச்சத்தை பாங்கோவிடம் கொடுத்தான். சினம் கொண்ட பாங்கோ, வில்ஃப்ரெட்டை சோதனையிட்டான். அவன் எதையும் ஒளித்துவைத்து இருக்கவில்லை என்பது உறுதிப்பட்டது. ஏமாற்றம் அடைந்த பாங்கோ ஏற்கெனவே பசியில் இருந்ததால், பாதி அப்பத்தை 'இதுவாவது கிடைத்ததே’ என்று நினைத்தபடி தின்று முடித்தான். தலை சுற்றியது உடனடியாக மயங்கிக் கீழே விழுந்தான்.
வில்ஃப்ரெட் காத்திருந்தது இதற்குத்தானே.
பாங்கோவைத் தூக்கிக்கொண்டு விரைவாக அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான். நடந்ததை எல்லாம் ராஜாவிடம் தெரிவித்தான். படை வீரர்கள் பாங்கோவைப் பிடித்துச் சிறையில் அடைத்தார்கள். அறிவாளியான வில்ஃப்ரெட்டுக்கு ராஜா, மதிப்பு உயர்ந்த பரிசுகளைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக