தனது மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக கணவரை கொன்ற பெண்ணை போலீசார் வழக்கில் இருந்து விடுவித்தனர்.மதுரை, திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து உஷாராணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜோதிபாசுவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள் ஜோதிபாசுவின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த கொலையில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் அவர்களுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் காரணமாக சமாதானம் அடைந்து, வீரண்ணன் உடலை வாங்கிச் சென்றனர்.
மருத்துவ பரிசோதனை
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கொலையுண்ட ஜோதிபாசு என்ற வீரண்ணன் தனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி உஷாராணி மகளின் மானத்தை காப்பதற்காகவே வீரணனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றார். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள உஷாராணியின் 2-வது மகள் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அவரது உடலில் பல இடங்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஜோதிபாசு தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதும், அதிலிருந்து மகளை காப்பாற்றவே உஷாராணி தனது கணவரை கொலை செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
விடுவிப்பு
இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கொலை செய்தால் அது சட்டப்படி குற்றமாகாது.
எனவே அதன்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் உஷாராணியை விடுதலை செய்தனர்.
கொலை வழக்குகளில் இதுபோல விடுவிக்கப்படுவது மிக அரிய நிகழ்வாகும். போலீசாருக்கு ஜோதிபாசு பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதாலும், பல காவல் நிலையங்களின் குற்றவாளிகள் பட்டியலில் அவர் இருப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
ஏற்கெனவே இவர் மனைவி மற்றும் மகள்களை துன்புறுத்துவதாக போலீசில் புகார் இருந்தது. இந்தப் புகார் குறித்து விசாரித்த போலீசாரிடம், இனி மனைவியை அடிக்கவே மாட்டேன் என உறுதி அளித்துவிட்டுப் போனாராம். அடுத்த 15 தினங்களில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கேவலத்தை அரங்கேற்றியுள்ளார். அதன் விளைவாகவே உஷா ராணி அடித்துக் கொன்றுவிட்டார்.
இந்த மாதிரி வழக்குகளில் போலீசாருக்கு உண்மை முழுமையாகத் தெரிந்தால், அவர்களே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை இது. குற்றத்துக்கான முகாந்திரம் உறுதியாகத் தெரிந்ததால் இந்த முடிவை மேற்கொண்டோம்," என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக