11. செய்ந்நன்றி அறிதல்
செய்ந்நன்றி அறிதல்
101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
* தக்க நேரத்தில் செய்த உதவி சிறிதென்றாலும், உலகில் பெரியதாகவே கொள்ளப் படும்
103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
* பயன் கருதாது ஒருவர் செய்த உதவி, கடலை விடப் பெரியது.
104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
* சிறிய உதவியைக் கூட அதன் நன்மையை கருத்தில் கொண்டு பெரிதாக கருதுவர் பயன் அறிந்தவர்.
105. உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
* உதவி என்பது உதவியின் தன்மையை பொறுத்து அல்ல, உதவி பெற்றவரின் தன்மையைப் பொறுத்தது
106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க'
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
* நல்லவர் நட்பை மறக்கக் கூடாது. துன்பத்தில் தோள் கொடுத்தோர் நட்பை துறக்கக் கூடாது
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
* தாங்கள் தாழ்வுற்று இருந்த போது தாங்கிய நண்பரை ஏழேழு பிறப்பிலும் மறக்கக் கூடாது.
108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
* ஒருவர் செய்த உதவியை மறப்பது நற்பண்பல்ல. ஆனால் நல்லது அல்லாதவைகளை அன்றே மறத்தல் நல்லது.
109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
* கொலைக்கு ஒப்பான தீமை செய்தாலும், அவர் செய்த நன்மைதான் நினைவில் கொள்ளப் படும்.
110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
* எத்தகைய நல்ல செயல்களை மறந்தாலும், தனக்கு உதவியவரை மறந்தவர்களுக்கு செழிப்பு சேராது.
12. நடுவுநிலைமை
நடுவுநிலைமை
111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
* எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி.
112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
* அனைவரும் ஏற்கக் கூடிய வகையில் நீதி வழங்குபவன் ஆக்கி வைத்தவை, தலைமுறைக்கும் சேதமில்லாமல் நிலைத்திருக்கும்
113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
* நன்மையே ஆயினும் நடுநிலை தவறுவதால் அமையுமெனின், கைவிடல் வேண்டும்.
114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
* ஒருவர் போற்றத் தக்கவரா என்பது அவருடைய செயல்களால் தீர்மானிக்கப் படும்.
115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
* நல்லதும், கெட்டதும் கருதாமல் நடுநிலையுடன் இருத்தலே சான்றோருக்கு அழகு.
116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
* நடுநிலை தவறி செயல்பட்டால் கெடுதல் வரும் என்பதை ஒருவன் அறிந்திருத்தல் வேண்டும்
117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
* நடுநிலையோடு வாழ்வதால் ஒருவன் வாழ்நிலை தாழ்ந்திருந்தாலும் உலகம் அவனை பழிக்காது
118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
* வழக்கின் இருபுறமும் சீர்தூக்கிப் பார்த்து நடுநிலையுடன் செயல் படுதல் அறிஞர்க்கு அழகு
119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
* ஒருதலைப் படுதல் இல்லாமல் ஒருவன் சொல்லும் சொல் நீதியாக கொள்ளப்படும்.
120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
* நீதி வழங்குபவர் அனைவருக்கும் அவரவர் துறையில் வல்லவர் போல் செயல் வேண்டும்.
13. அடக்கம் உடைமை
அடக்கம் உடைமை
121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
* அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.
122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
* ஒருவருக்கு அடக்கத்தைவிட அவரின் உயிர்க்குக் காவலாய் அமைவது வேறெதுவுமில்லை.
123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
* ஒருவர் அறிவாற்றலுடன் அடக்கமுடனும் நடந்துகொள்வானாயின் அதுவே அவனுக்குப் பெருமையளிக்கும்
124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
* தன் நிலையிலிருந்து மாறாமல் அடங்கி நடப்பவனே மலையைக் காட்டிலும் பெரியவனாய் கருதப்படுவான்.
125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
* பணிவு என்பது எல்லார்க்கும் நன்மையேயாயினும் செல்வந்தர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாகக் கருதப்படும்.
126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
* ஒரு பிறவியில் ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கினால் அது அவனுக்கு ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பளிக்கும்
127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
* ஒருவன் தன் நாக்கை அடக்காவிட்டால் அதுவே அவனுக்குத் தீராதப் பழியை உண்டாக்கி விடும்
128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
* ஒரே ஒரு தீயசொல்லினால் அப்போது பொருட்பயன் கிட்டுவது போலிருந்தாலும் அதனால் விளையப்போகும் நன்மை ஒன்றுமில்லை
129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
* ஒருவரைத் தீயினால் சுட்டாலும் அது காலப்போக்கில் ஆறிவிடும், ஆனால் அவரின் மனம் புண்படும்படி பேசியது என்றும் ஆறாத்தழும்பாய் இருந்து வருத்தும்.
130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
* தன் சினத்தை காத்து, கல்வி கற்று, அடக்கத்துடனும் நடப்பவனை அவன் வழியிலே சென்று அறக்கடவுள் அவனைத் தகுந்த காலத்தில் பார்க்கும்
14. ஒழுக்கம் உடைமை
ஒழுக்கம் உடைமை
131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
* பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.
132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
* எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கமே வாழ்க்கைக்கு சிறந்தது என்பதால் அதை பேணிக் காத்திடல் வேண்டும்
133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
* ஒழுக்கத்துடன் வாழ்பவர் உயர் குடியினர் எனவும் அஃதிலார் இழிந்தவர் எனவும் கொள்ளல் தகும்
134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
* ஒழுக்கம் தவறியவன் தான் இழிபிறப்பின் நிலை எய்தியதை காண்பான்.
135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
* மனத்தூய்மை இல்லாதவனின் செயல் பயனுடையதன்று, அது போல் ஒழுக்கமில்லாதனுக்கு உயர்வு வாய்க்காது.
136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
* ஒழுக்கம் தவறியதால் நேரும் துன்பம் அறிந்தவர், ஒழுக்கத்தினின்று பிறழ மாட்டார்.
137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
* ஒழுக்கமுடையவர் மேன்மை அடைவர், ஒழுக்கம் தவறியவர் கொடும் பழியைப் பெறுவர்.
138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
* நல்ல செயல்களுக்கு நல்ல ஒழுக்கமே அடிப்படை; தீய ஒழுக்கம் தீமையையே தரும்.
139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
* ஒழுக்கமுடையவர் தீயனவாயின் வாயால் கூட, தவறியும் கூற மாட்டார்கள்
140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
* பல கல்வி கற்றும் உலக வழக்கத்தை ஏற்று நடக்க கல்லாதவர் அறிவற்றவராகவே கருதப் படுவர்.
15. பிறன் இல் விழையாமை
பிறன் இல் விழையாமை
141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
* அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.
142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
* அறத்தின் பக்கம் நிற்பவர் யாரும் பிறன் மனைவியை நாடி நிற்கும் பேதையர் இல்லை.
143. விளிந்தாரின் வேறல்லார் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
* நன்கு தெரிந்தவர் வீட்டில் தீமை ஏற்படுத்துபவர் பிணத்துக்கு ஒப்பானவர்
144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
* தன் தவறான செயலைப் பற்றி திணையளவும் ஆராயாமல் பிறன் மனையில் நுழைபவருக்கு எவ்வளவு துணை இருந்தும் பழியிலிருந்து
மீள முடியாது
145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
* எளிதாக தன் இழி செயலை நிறைவேற்றலாம் என அடுத்தவர் வீட்டிற்கு செல்பவருக்கு என்றும் விலகாத பழி நேரும்
146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
* அடுத்தவன் மனைவியை கவர நினைப்பவனுக்கு வந்து சேரும் பகை, பாவம், அச்சம், பழி அகிய நான்கும் விலகாது
147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
* அறத்தினின்று வழுவாத இல்வாழ்க்கை நடத்துபவன், பிறன் மனைவியை நாடுவதில்லை.
148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
* பிறர் மனைவியை தவறாக நோக்காமை சான்றோருக்கு பேராண்மை மட்டுமன்றி அறன் சார்ந்த ஒழுக்கமும் ஆகும்.
149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
* கடல் சூழ் உலகில் பிறன் மனைவியின் தோள் தீண்டாதவரே நம் நலத்துக்குரியவர் ஆவார்.
150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
* அறன் வழி நில்லாவிட்டாலும் பிறன் மனைவியை வேண்டாமை நன்று.
16. பொறை உடைமை
பொறை உடைமை
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
* தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல, நம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நன்று.
152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
* தவறைப் பொறுத்தல் நீங்காத புகழ் தரும் என்றாலும், அதனை மறத்தல் அதனிலும் நல்லது.
153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
* விருந்தினரை வரவேற்க இயலாத வறுமை மிகவும் கொடியது; மடமுடையோரின் செயலைப் பொறுத்தல் மிகுந்த வலிமை உடையது
154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
* தான் பெற்ற புகழ் நிலைத்திருக்க நினைப்பவர் பொறுமையை கடை பிடித்தல் வேண்டும்.
155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
* தன்னை தண்டித்தவரை வெறுக்காது பொறுத்து அரவணைப்பவரை பொன்னைப் போல் போற்றுவர்.
156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
* தண்டித்தவருக்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தவறுக்கு அவர் மறையும் வரை புகழ் நிலைக்கும்.
157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
* பிறர் நமக்கு தவறிழைப்பினும் அதனால் வெகுண்டு அறன் அல்லாதவற்றை செய்தல் கூடாது
158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
* ஆணவத்தால் தவறிழைப்பவரை, அவற்றைப் பொறுக்கும் தகுதியால் வென்று விடலாம்.
159. துறந்தாரின் தூய்மை உடையவர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
* தன்னை இகழும் சொற்களைப் பொறுத்தோர் துறவிகளை விட தூய்மை உடையவராக கருதப் படுவர்.
160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
* உண்ணாமல் நோன்பிருக்கும் பெரியார் ஆயினும், தன்னை இகழ்ந்துரைத்த சொற்களைப் பொறுத்தவருக்கு பின்னால் தான் வரிசைப் படுத்தப் படுவர்.
17. அழுக்காறாமை
அழுக்காறாமை
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
* மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒரு ஒழுக்கமாகப் பேண வேண்டும்
162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
* ஒருவரிடம் பொறாமை குணம் இல்லை எனில், அவரிடம் அதை விட சிறப்பு வேறு இல்லை.
163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
* பிறரிடம் பொறாமை பேணுபவன் அறத்தினால் ஆன செயல்களை வேண்டாம் என தள்ளி விடுவான்.
164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
* பொறாமையினால் விளையும் தீமைகளை அறிந்தோர், அதனால் தூண்டப்பட்டு தீமைகளைச் செய்ய மாட்டார்கள்
165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
* பொறாமை உடையோருக்கு அதுவே கேடு விளைவிக்கும் பகையாய் விளங்கும்.
166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
* பிறன் கொடுப்பதில் கூட பொறாமை கொள்ளும் ஒருவன், தன் சுற்றத்தாருடன் உண்ணவும், உடுக்கவும் இல்லாத நிலையை அடைவான்.
167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
* பொறாமை உடையவனை திருமகள் வெறுத்து மூத்தவளுக்குக் காட்டுவாள்.
168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
* பொறாமை உடையவனின் செல்வம் அழிந்து, தீயில் வாட்டும் கொடுமையில் விடும்.
169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
* பொறாமை கொண்டவனால் நற்செயலும், நல்லவனால் கேடு விளைவதும் அரிது.
170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
* பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை, பொறாமை தவிர்த்ததால் ஒருவர் வீழ்ந்ததும் இல்லை.
18. வெஃகாமை
வெஃகாமை
171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
* நடுநிலை இன்றி தனக்குரிமை இல்லாத பொருளுக்கு ஆசைப்பட்டால், குடிப் பெருமை கெட்டு பழியை சுமக்க நேரும்.
172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
* நடுநிலை தவறுவதற்காக வெட்கம் கொள்ளுபவர், தன் நன்மைக்காக ஆசைப்பட்டு பழிக்கு அஞ்சி செய்ய மாட்டார்கள்.
173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
* தற்காலிக இன்பத்துக்கு ஆசைப்பட்டு அறத்துக்கு ஆகாத செயல் செய்யாதவரே, ஆழ்ந்த இன்பத்தை அடைய முடியும்.
174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
* தன் புலன்களை அடக்கி தவறான ஆசைகளை மறுப்பவர், வறுமையிலும் செம்மையுடையவர் ஆவர்
175. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
* ஆசையால் தவறான செயல் செய்ய துணிபவருக்கு, நுண்ணிய அறிவிருந்து பயன் என்ன?
176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
* அருள் வேண்டி அதற்கான வழியில் நிற்பவன், பொருளுக்கு ஆசைப்பட்டு செயல் பட்டால் கேடு நேரும்.
177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
* ஆசையால் செய்யும் செயல் சிறப்புப் பெறுவது அரிது ஆதலால் ஆசையை கை விடுதல் நன்று
178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
* பிறருடைய பொருளுக்கு ஆசைப் படாமையே, குறைவற்ற செல்வம் தரும்.
179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
* அறன் எதுவென அறிந்து செயல்படும் அறிவுடையோரிடம் செல்வம் தானாய்ச் சேரும்.
180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
* துன்பம் நேரும் என எண்ணாமல் ஆசைப்படுபவனுக்கு துன்பம் நேரும். அத்தகைய ஆசையை வேண்டம் என வெறுப்பவருக்கு வெற்றி கிட்டும்
19. புறங்கூறாமை
புறங்கூறாமை
181. அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
* அறச்செயல் செய்யாதவன் ஆயினும், புறம் பேசாதவன் என்றால் நல்லதே.
182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
* அறம் அழித்து தீயவை நெய்வதை விட தீமையானது ஒருவர் இல்லாத நேரம் புறம் பேசி பின் அவர் முன் சிரித்திருப்பது
183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
* புறம் பேசி வாழ்தலை விட, சாதலே அறம் கூறும் ஆக்கமுள்ள செயலாகும்.
184. கண்ணின்று கண்ண்றச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
* நேரில் பரிவு காட்டாமல் பேசினாலும் ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்
185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
* ஒருவன் புறம் கூறும் சிறுமை உடையவன் எனின் அவன் அறம் பேணுபவன் இல்லை எனத் தெரிந்து கொள்ளலாம்
186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறந்தெரிந்து கூறப் படும்.
* பிறரைப் பற்றி தவறாகப் பேசுபவன், அப்பழிச் சொற்களில் கீழானவற்றால் பழிக்கப் படுவான்.
187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
* இனிமையாக பேசி நட்பு பாராட்டத் தெரியாதவர்கள், புறம் பேசி உள்ள நட்பையும் இழப்பார்கள்.
188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
* நண்பரிடம் குற்றம் கண்டு தூற்றுபவர் அயலாரை என்ன பேச மாட்டார்?
189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
* புண்படுத்தும் சொற்களை கூறுபவனையும் சுமப்பது, அற வழியில் செல்வதால் என உலகம் ஆறுதல் படும்
190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
* பிறரை குற்றம் காண்பது போல் தன் குற்றமும் ஆராய்ந்தால் அனைத்து உயிர்களுக்கும் தீமை எவ்வாறு ஏற்படும்?
20. பயனில சொல்லாமை
பயனில சொல்லாமை
191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
* பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.
192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
* பயனில்லாதவற்றை பலர் முன் பேசுதல், நல்லன அல்லாததை நமக்கு உற்றவருக்கு செய்வதை விட தீங்கானது.
193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
* ஒருவன் பயனின்றி நிறைய பேசினால், அவனால் ஆகும் நன்மை ஏதும் இல்லை
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
* பயனில்லாத, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் இருக்கும் நன்மையும் நீங்கி விடும்.
195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
* சிறப்பு மிக்கவராயினும் பயனில்லாத சொற்களை கூறினால், அச்சிறப்பு அவரிடம் இருந்து நீங்கி விடும்
196. பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
* பயனில்லாது பேசுபவனை மக்களுள் அற்பன் என்பது சரி
197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
* சான்றோர் நன்மை பயக்கக் கூடியதை சொல்லா விட்டாலும், பயன்னற்றதை சொல்ல மாட்டார்கள்
198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
* சிறந்தது எது என ஆய்ந்து உணர்ந்த அறிவுடையோர், பயனில்லாததை பேச மாட்டார்கள்
199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
* அப்பழுக்கற்ற அறிவுடையவர் பொருளற்ற, குறை உள்ள சொல் கூற மாட்டார்கள்
200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
* சொல்லில் பயனில்லாததைத் தவிர்த்து, பயனுள்ளதைப் பேச வேண்டும்
0 கருத்து:
கருத்துரையிடுக