கனடா பண்கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப் போட்டி – 2012
இடம்:- செல்வச்சன்நிதி ஆலய மண்டபம் - ஸ்காபரோ. கட்டணம்:-$5
காலம்:- 30-09-2012- ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 2 மணி
வயது:யூன் மாதம் கல்வி கற்று முடிந்த வகுப்புகள் அடிப்படையில் பிரிவுகள் தெரிவு செய்வதுடன், பேச்சுப்போட்டியின்போது பிள்ளைகளின் அடையாள அட்டை மூலம் அவர்களின் வயது நிரூபிக்கப்படல் வேண்டும்.
- இள மழழைகள் பிரிவு: ((KG))
பிறந்த வருடம்:2007-2008
அம்மா
என்னை படைத்தவர் என் அம்மா.எனக்காக கண் விழித்தவர் என் அம்மா.எனக்காக பசி இருந்தவர் என் அம்மா.என்னைக் பாதுகாத்தவர் என் அம்மா.எனக்குப் பாலும் உணவும் ஊட்டியவர் என் அம்மா.என் கை பிடித்து என்னை நடக்கச் செய்தவர் என் அம்மா.எனக்கு பாடம் சொல்லித் தருபவர் என் அம்மா.என்னை அழகுபடுத்தி மகிழ்பவள் என் அம்மா.அன்பின் உலகம் என் அம்மா.என் அம்மாவைப்போல் ஒரு தெய்வமில்லை.என் அம்மாவை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்.அவரின் விருப்பம் போல் நடப்பேன்.படித்துப் பெரியவன் ஆவேன்.அவரை மகிழ வைப்பேன். அதில் நானும் மகிழ்வேன்.இது உறுதி.
நன்றி
வணக்கம்
- முதுமழழைகள் பிரிவு ((1-2))
பிறந்த வருடம்:2005-2006
சைவ சமயம்
எமது சமயம் சைவசமயம்.எனவே நாம் சைவர்கள் என அழைக்கப்படுகிறோம்.சைவசமயம் சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்டுள்ளது. இம் மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகிறார்கள்.
நாம் நல்வாழ்வு வாழ்வதற்குரிய வழிபாட்டு முறைகளை சைவ சமயம் கொண்டிருக்கிறது.சைவர்களாகிய நாம் ஒவ்வொருநாளும் காலையும் ,மாலையும் முதலில் உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும்.பின்னர் திருநீறு அணிந்து இறைவனை வழிபட்டு உள்ளத்தினை சுத்தம் செய்தல் வேண்டும்.விசேட தினங்களில் ஆவது ஆலயம் சென்று வழிபாடு செய்தல் அவசியம் ஆகும்.
அன்பே சிவம் என்கிறது எமது சமயம்.பஞ்சமா பாதகங்களை மறப்போம். எல்லா உயிர்களிடத்தும் நாம் அன்புகொள்வோம்.நல்ல மனிதர்களாக வாழ்வோம், வல்லவர்களாக வளர்வோம் என்று
இந் நன்னாளில் உறுதி கொள்வோமாக!
நன்றி
வணக்கம்
- மத்தியபிரிவு ((3-4))
பிறந்த வருடம்:2003-2004
திருவள்ளுவர்
தமிழ் உலகம் போற்றும் திருக்குறள் தந்த மாமனிதர் திருவள்ளுவர்.அவர் கிறிஸ்துக்கு முன் 30 ஆம் ஆண்டு பிறந்தவர்.
அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.அதனால் தான் அவரால் உலகப் பொதுமறையினை நமக்கு கொடுக்க முடிந்தது.
அவர் கற்பனைக் கவிகள் புனையவில்லை.சாதி வேறுபாடுகளை வெறுத்தார்.விலங்குகளைப் பலியிடும் வேள்விகளை எதிர்த்தார்.பொய்,களவு இல்லாத நாகரீக வாழ்வை விரும்பினார்.கல்வியின் அவசியத்தினை உணர்ந்தார்.இயற்கையை நேசித்தார்.பண்பான வாழ்க்கை முறையினை அறிந்தார்.மனிதநேய ஆட்சி முறையினை எண்ணினார்.அனைத்து சமூக சீர்திருத்த சிந்தனைகளையும் குறள் வடிவமாக்கினார்.அவைகளை 1330 பாடல்களாக்கினார்.அப்பாடல்களினை 133 அதிகாரங்களாக்கினார். மேலும் அவற்றினை முப்பெரும்பிரிவாக்கினார். அவை,அறம்,பொருள்,இன்பம் என அழைக்கப்படுகிறது .
அறிவும்,நற்சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம்.அவற்றினை நமக்கு அள்ளித்தந்தவர் திருவள்ளுவர்.
மனிதகுலம் ஒழுக்க நெறிகளுடன் சிறப்பாய் வாழ்ந்திட வழி சொல்லும் இரண்டடி தத்துவத்தினை நமக்களித்த திருவள்ளுவர்
என்றென்றும் மறக்க முடியாத் மாமனிதரே!
நன்றி
வணக்கம்.
- மேற்பிரிவு ((5-6))
பிறந்த வருடம்:2001-2002
தைத்திருநாள்
"தமிழர் போற்றும் நன்னாள்
உழவர் போற்றும் நன்னாள்"
என்று சிறப்பிக்கப்படுவது தைத்திருநாள்.அது சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் தமிழர் தைப்பொங்கல் ஆகும்.
பொங்கல் என்பதற்கு"பொங்கி வழிதல் என்பது பொருள்.பொங்கல் திருநாள் அன்று புதிய பானையில் புதிய அரிசியிட்டு பொங்கல் வைப்பார்.அப்பொழுது பொங்கலிலிருந்து பால் பொங்கி வருவதுபோல அன்றிலிருந்து மக்கள் அனைவரும் நல வாழ்வுடனும் வளமுடனும் சிறப்பாக வாழவேண்டும் என்று உரைப்பதே பொங்கல் திருநாளாகும்.
உழவர்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாத இறுதியில் நெற்கதிர்களை அறுவடை செய்து தை முதலில் தங்கள் உழைப்பின் பயனை அனுபவிக்க ஆரம்பிக்கும் நாளே தைத்திருநாள்.அந்நாளில் தமது உழைப்பிற்கு உறுதுணையாக இருந்த நிலம் நீர் காற்று சூரியன் போன்ற இயற்கை சக்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறந்த நாளே தைப்பொங்கல் ஆகும்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்."
என்ற பழமொழிக் கேற்ப உழவர்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்து நம் எல்லோருக்கும் உண்டி கொடுத்த அந்த சக்திகளுக்கு அவர்களுடன் இணைந்து நன்றி செலுத்தி நாமும் மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
நன்றி ......வணக்கம்.
- அதிமேற்பிரிவு ((7-8))
பிறந்த வருடம்:1999-2000
கனடா
கனடா, வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு.அது உலகத்தில் இரண்டாவது பெரிய நாடு ஆகும்.கனடாவின் வடக்கே வடமுனை காணப்படுகிறது.
கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.தெற்கே அமெரிக்க ஒன்றியம் அயல் நாடாக அமைந்திருக்கிறது.மேற்கே பசுபிக் சமுத்திரமும் அமெரிக்க அலாஸ்காவும் எல்லைகளாக இருக்கிறது.
கனடா பத்து மாகாணங்களையும்,மூன்று ஆட்சிநிலப் பகுதிகளையும் கொண்டது.ஆங்கிலம்,பிரஞ்சு என்பன கனடாவில் ஆட்சி மொழிகளாக உள்ளன. "ஒட்டாவா" கனடாவின் தலைநகரம் ஆகும். நுனாவுட் ஆட்சி நிலப் பகுதியில் அவர்களுடைய மொழியான "இனுக்ரிருற்" ஆட்சி மொழியாக உள்ளது.
பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் கனடாவுக்குள் வர ஆரம்பித்தனர்.பின்னர் ஆங்கிலேயர்1610 ஆம் ஆண்டில் குடியேறத் தொடங்கினர்.
பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. நியூபௌன்ட்லாந்து 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.
1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர்.1971 ஆம் ஆண்டு, உலக நாடுகளிலேயே முதலாவதாக, கனடா பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆபிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையாக இருந்தனர்.
கனடா இயற்கைவளம் மிக்க நாடு.கனடாவின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகியவை உறுதியானவை.கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக் கட்டமைப்பைஉடையது.
கனடாவின் தேசிய கீதமாக "ஓ கனடா"இசைக்கப்பட்டு வருகிறது.
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் கனடியக் குடிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம்.நல் மக்களாக நாமும் வாழ்ந்து நாட்டுக்கும்,நமக்கும் பெருமைகள் சேர்ப்போமாக.
நன்றி ......வணக்கம்.
அனுப்பியவர் -S .மனுவேந்தன்
0 கருத்து:
கருத்துரையிடுக