கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கள்ளக்காதல் காரணமாக தனது கணவனை கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார் ஒரு பெண். பின்னர் உடலை பொக்லைன் போட்டு மண்ணில் புதைத்து விட்டனர். போலீஸார் அனைவரையும் கைது
செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய கோட்டிமுளை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் அய்யப்பன். 35 வயதாகும் இவருக்கு, காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த அவரது அக்காள் மகளான 26 வயது சங்கீதாவை மணமுடித்துக் கொடுத்தனர்.
திருமணத்திற்குப் பின்னர் தனிக்குடித்தனமாக இருந்து வந்த அய்யப்பனும், சங்கீதாவும் பின்னர் முட்டம் கிராமத்தில் உள்ள சங்கீதாவின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.
கடந்த 20ம் தேதி அய்யப்பன் வெளியே போனார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அயப்பனின் தந்தையும், மனைவி சங்கீதாவும் போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் ஆரம்பத்தில் இந்த வழக்கை கண்டு கொள்ளவில்லை. கிடப்பில் போட்டு விட்டனர். இதையடுத்து அய்யப்பனின் அண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைப் போட்டார். இதையடுத்து போலீஸாருக்கு திடீரென வேகம் பிறந்தது. தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் அய்யப்பன் கொலை செய்யப்பட்டிருப்பதும், கொன்றது அவரது மனைவி சங்கீதா மற்றும் கள்ளக்காதலன் வரதன் என்றும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் இவர்கள் இருவர் தவிர வரதனின் நண்பர்களான பாலமுருகன், ராஜசேகரன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸில் வரதன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்..
எனது அக்கா வனிதாவை 3 ஆண்டுகளுக்கு முன்பு முட்டத்தில் உள்ள சங்கீதாவின் அண்ணன் சுரேசுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். என்னுடைய அக்காவை பார்ப்பதற்காக அடிக்கடி முட்டத்திற்கு செல்வேன். அப்போது எனக்கும் சங்கீதாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இதை ஒரு நாள் அய்யப்பன் நேரில் பார்த்து சங்கீதாவை கண்டித்துள்ளார். இருப்பினும் நாங்கள் கள்ளத்தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை.
அய்யப்பன் எங்களுக்குள் இருக்கும் கள்ளத் தொடர்பை சங்கீதாவின் தந்தை ஜெயவேலிடம் கூறி விட்டார். ஆனால் ஜெயவேல் அதனை நம்பாமல் தனது மகள் அப்படிப்பட்ட பெண் இல்லை என்று அய்யப்பனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இனிமேலும் அய்யப்பனை விட்டு வைத்தால் நமக்கு ஆபத்து என்று எண்ணினோம். அதன்படி அய்யப்பனை கொலை செய்ய சங்கீதாவுடன் சேர்ந்து நானும் திட்டமிட்டேன்.
இந்த நிலையில், அய்யப்பன் என்னிடம் பணம் கேட்டார். இதை வாய்ப்பாக பயன்படுத்திய நான் கடந்த 18-ந் தேதி இரவு அய்யப்பன் வீட்டுக்கு எனது நண்பர்கள் 5 பேருடன் காரில் சென்றேன். அங்கு சென்றதும் அய்யப்பனிடம் பணம் தருகிறேன், நீயும் உனது மனைவியும் எங்களுடன் வாருங்கள் என்று அவர்களை அழைத்து வந்தேன். வடபாக்கம் அருகே உள்ள வயல்வெளியில் காரை நிறுத்தி அய்யப்பனை கீழே இறக்கினோம்.
பின்னர் அய்யப்பனை நான், அவரது மனைவி சங்கீதா, ராஜசேகரன், பாலமுருகன் மற்றும் 2 பேர் சேர்ந்து இரும்பு குழாயால் தலையில் அடித்து கொலை செய்தோம். அவரது உடலை அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு, பொக்லைன் எடுத்து வந்து மண் அள்ளிப் போட்டு அவரது உடலை மூடிவிட்டேன் என்றார் வரதன்.
இதையடுத்து உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கு அய்யப்பனின் உடலைத் தோண்டி எடுத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக