பேரணாம்பட்டு அடுத்த சிந்தகனவாய் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (31), தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி ராகினி (21), திருமணமாகி இரண்டரை ஆண்டுகளாகிறது.ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த
23-ம் தேதி மீண்டும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்று மதியம் ராகினி வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை சரவணன் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்று புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து வேலூர் ஆர்.டி.ஓ. ஜெயஸ்ரீ பிரேத பரிசோதனை அறிக்கைப்படி நேற்று விசாரணை நடத்தினார்.
அதில் ராகினி மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. அவரது கணவர் வினோத்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையறிந்த வினோத்குமார் டி.சி. மோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் தரணியிடம் நேற்று சரணடைந்தார். அவரை வி.ஏ.ஓ. பேரணாம்பட்டு போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் வினோத்குமார் கூறியதாவது:-
கடந்த திங்கட்கிழமை உடல்நிலை சரியில்லாததால் ராகினி பேரணாம்பட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது நானும், அண்ணி பாரதியும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். இதை பார்த்து ஆத்திரமடைந்த ராகினி என்னிடம் தகராறு செய்தார். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.
அப்போது அங்கு வந்த என் அ¢ண்ணன் கிருஷ்ணமூர்த்தி ராகினியின் தலை மற்றும் கைகளை பிடித்துக் கொண்டார். அண்ணி பாரதி ராகினியின் கால்களை பிடித்துக் கொண்டார். நான் தலையணையால் ராகினியின் முகத்தை அழுத்தி கொலை செய்தேன்.
பின்னர் சடலத்தை தூக்கில் மாட்டி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர் என கூறியுள்ளார்.
இதையடுத்து வினோத்குமாரை கைது செய்து குடியாத்தம் சப்-மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி பாரதி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக