அயனாவரம், பாலக்காரு தெருவைச் சேர்ந்தவர் பழனி (63). மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கற்பகம் (55). இவர்களுக்கு 3 மகள்கள். 3 பேரும் திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்கள்.
பழனி மனைவி கற்பகத்துடன் வாடகை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு பென்சன் பணம் வந்தது. என்றாலும் கற்பகம் பங்களா வீடுகளில் வேலை பார்த்து வந்தார். கற்பகத்தை வேலைக்கு போகக் கூடாது என்று பழனி தடை போட்டார். இதையும் மீறி கற்பகம் வேலைக்கு சென்றார். இதனால் பழனிக்கு கற்பகத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கற்பகம் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது பழனி, அவரிடம் இனி நீ வேலைக்கு சென்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். பின்னர் திடீரென உருட்டுக்கட்டையை எடுத்து கற்பகத்தின் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி பழனி மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
கற்பகத்தை சென்னை அரசு பொதுமருத்துவ மனையிலும், பழனியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். நேற்று காலையில் கற்பகம் சிகிச்சை பலனின்றி இறந்தார். பலத்த தீக்காயம் அடைந்த பழனிக்கு டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணிக்கு இறந்து போனார். அவரது உடல் பரிசோதனைக்கு பிறகு மகள்களிடம் ஒப்படைக்கப்படும்.
0 கருத்து:
கருத்துரையிடுக