நடிகை தமன்னா ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். ‘படிக்காதவன்’, ‘கண்டேன் காதலை’ உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகுக்கு அறிமுகமானபோது தமன்னா செய்து கொண்ட ஒப்பந்தம் இப்போது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தமன்னாவின் முதல் படம் ‘சாந்து ஷா ரோஷன் செஹ்ரா’. இந்த படத்தில் நடிக்க 2003-ம் ஆண்டு இந்தி பட தயாரிப்பாளர் சலீம் அக்தர் தமன்னாவை ஒப்பந்தம் செய்தார்.
படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்காக 2005-ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார்.
இதற்காக ஒப்பந்த பத்திரத்தில் தமன்னா கையெழுத்திட்டதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை தமன்னா மீறி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சலீம் அக்தர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என் மகளும் தமன்னாவும் ஒரே பள்ளியில் சேர்ந்து படித்தனர். சாந்து சா ரோஷன் படத்தில் தமன்னாவிற்கு வாய்ப்பு தரும்படி என் மகள்தான் சிபாரிசு செய்தாள். தமன்னா மிகவும் அழகாக இருப்பார் என அவள்தான் என்னை வற்புறுத்தினாள்.
பிறகு தமன்னா பெற்றோருடன் என் வீட்டிற்கு வந்தார். அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுடன் மேற்கண்ட ஒப்பந்தம் செய்து கொண்டோம். பின்னர் தமன்னா தென்னிந்திய சினிமாவுக்கு சென்று விட்டார். ஒப்பந்தம் பேசிய நான் அவரை தொடர்பு கொண்டபோதிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தப்படி எனக்கு பணமும் தரவில்லை. தனது பெயரில் எழுத்துக்களையும் திருத்தம் செய்து கொண்டார்.
அவரது குடும்பப் பெயரான ‘பாட்டியா’ வை விலக்கிவிட்டு வெறும் தமன்னா என கூறிக்கொள்கிறார். தற்போது இந்தியில் ‘ஹிம்மத்வாலா’ என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு தமன்னா பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன்.
இவ்வாறு சலீம் அக்தர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக