நோன்பு என்றால் என்ன?அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்தில் இருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால் தான்
உனக்கு பூரண பயன் கிடைக்கும். இல்லாது போனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்கு கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை இது ஒரு பொது விதி இந்தப் பொது விதி நோன்பு என்ற வணக்கத்துக்கு மட்டுமென்று நினைத்துக் கொள்ளாதே!
ஷரீஅத்தில் விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு அமலும் இந்த விதிக்குட்பட்டதேதான்! நீ எந்த அமலை செய்வதானாலும் அந்த அமலைப் பற்றியும் அதைச் செய்யும் முறை பற்றியும் அந்த அமலின் நோக்கம் பற்றியும் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.
ஓர் அமலின் (வேலையின்) நோக்கத்தை தெரிந்து கொள்ளாமல் அவ்
வேலையிலீடுபடுவது அறிவுடமையாகுமா? நீ நன்றாக சிந்தித்துப் பார்! நீ நோன்பு நோற்றாலும் வேறெந்த வணக்கத்தைச் செய்தாலும் அவ் வணக்கத்தின் நோக்கத்தை அறிந்து செயல்படு!
ஓர் ஊரின் தலைவன் தனது ஊர் மக்களுக்கு ஒரு வேலையை கட்டளையிடுகிறான். என்று வைத்துக் கொள்! அந்த மக்கள் அவ் வேலைக்குரிய காரணத்தை அறியாதவர்களாய் வேலையை மட்டும் செய்கின்றார்களென்றால் தாம்செய்யும் வேலைக்குரிய அர்த்தமே தமக்குத் தெரியாத நிலையில் அவர்கள் இருக்கின்றார்களென்பது தெளிவான விஷயம் தான். எனவே நோன்பாயிருந்தாலும் வேறெந்த வணக்கமாயிருந்தாலும் அதைப் பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக வணக்கத்தின் நோக்கம் மறுமையில் நல்லவர்களுக்குக் கிடைக்கின்ற சுவர்க்கம், மங்கை மதுபானம் போன்றவையாக இருக்கலாகாது.இவற்றுக்காகவும், இவற்றை பெற்று மகிழ்ந்து வாழ்வதற்காகவும் வணக்கம் செய்யலாகது. இவற்றுக்காக இவற்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் வணக்கம் செய்தல் வணக்கத்தின் அடிப்படை நோக்கமல்ல.
வணக்கத்தின் அடிப்படை நோக்கமென்னவெனில் வணங்கும் நீ உனது வணக்கத்தின் மூலம் மனத்தெளிவு பெற்று அதில் ஞானப்பிரகாசம் சுடர்விட்டு அதனால் நீ உன்னை அறிந்து உனதிறைவனையறிவதுமேயாகும். இதுதான் “அமலின்” வணக்கத்தின் அடிப்படை நோக்கம்! இதுதான் அமலின் நோக்கமென்பதைத் தெரிந்து கொண்ட உனக்கு சுவர்க்கமோ, ஹூறுல்ஈன் மங்கையரோ, மதுவோ, எதற்கு? அமலென்பது உன்னைச் சுத்தப்படுத்தி நீ அணிந்திருக்கின்ற “வஹ்மு” பேதபுத்தியென்ற முகமூடியைக் கிழித்தெறிந்து உனக்கு உன்னை யாரென்று காட்டித்தருகின்ற ஓர் ஔஷதம் அருமருந்து என்பதை நினைவில் இருத்திக்கொள். மருந்தைக்குடிக்கும் நீ அந்த மருந்து எந்த வியாதிக்குரியதென்பதைத் தெரிந்து குடி!
எனவே, நோன்பு என்ற வணக்கமென்றால் என்ன? அதை எவ்வாறு செய்யவேண்டுமென்பதை அறிந்து கொள் அல்லாஹ் உனக்கு நல்லருள் புரிவானாக. “ஸவ்மு” என்ற அறபுச் சொல்லுக்கு “நோன்பு” என்று நாம் தமிழில் பொருள் கொண்ட போதிலும் அச்சொல் தருகின்ற உண்மைத் தத்துவத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் தான் அதனுடைய நோக்கத்தை அறிந்து கொள்ளலாம். “ஸவ்மு” என்றால் “தடுத்தல்” என்று பொருள்படும். தடுத்தலென்ற பொருளுடைய “ஸவ்மு”என்ற சொல்லைத் தெரிவு செய்தவன் அல்லாஹ்வேயன்றி வேறுயாறுமல்ல. அவன் தெரிவு செய்த சொல்லின் அர்த்த புஷ்தியை கருத்தாழத்தை யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியாது.அச் சொல் பொதுவாக “தடுத்தல்”என்ற அர்த்தத்தை மட்டும் தருகிறதேயன்றி, எதிலிருந்து எதை தடுப்பதென்பது அச்சொல்லில் விளக்கப்படவில்லை. இருந்தாலும் தடுத்தல் என்ற அர்த்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று கோணத்தில் அதை ஆராயலாம்.
முதலாவது,தடுத்தலென்பது நோன்பை முறிக்கும் காரியங்களான உண்பது, குடிப்பது, சேர்க்கை செய்வது போன்றவற்றை விட்டுமநீ உன்னைத் தடுத்துக்கொள்வதைக் குறிக்கும். இவ் விபரப்படி குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, குடிப்பது, சேர்க்கை செய்வது போன்றவற்றை விட்டும் நீ உன்னைத் தடுத்துக்கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுவாய்!
இது “ஸவ்மு” என்ற சொல்லின் வெளிப்படையான விளக்கத்தில் தோன்றிய ஒரு முறை இவ்வாறு நோன்பு நோற்பதைஷரீஅத்தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும். முஸ்லிம்களில் அநேகர் இவ்வகையில் மட்டும்தான்நோன்பு நோற்கிறார்கள். இவ்வகை நோன்பு படித்தரம் குறைந்ததாகவே கணிக்கப்படும். இவ்வகை நோன்பிற்கு இமாம் கஸாலீ(றஹ்) அவர்கள் தங்களின் “இஹ்யா உலூமுத்தீன்” என்ற நூலில் “ஸவ்முல் அவாம்”“பாமரர்களின் நோன்பு” என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் இவ்வகை நோன்பு “ஸவ்முஷ்ஷரீஅஹ்” ஷரீஅத்துடைய நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நோன்பு மேற்குறித்த காரியங்களைச் செய்வதால் முறிந்துவிடும். பாதிலாகிவிடும்.
இரண்டாவது: தடுத்தலென்பது மேற்கூறப்பட்ட உண்ணுதல், பருகுதல், சேர்க்கை செய்தல் போன்றவற்றை விட்டும் உன்னை நீ தடுத்துக்கொள்வதுடன் உனது உறுப்புக்களால் பாவம் செய்வதை விட்டும். மேலும் உனது உள்ளத்தால் பாவம் செய்வதை விட்டும் நீ உன்னைத்தடுத்துக் கொள்வதையும் குறிக்கும்.
இவ் விபரப்படி நீ மேற்கூறப்பட்ட அனைத்தை விட்டும் உன்னைத் தடுத்துக் கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுவாய்! இது “ஸவ்மு” என்ற சொல்லின் சிறிது ஆழமான விளக்கத்தில் தோற்றிய ஒரு முறை இவ்வாறு நோன்பு நோற்பதை “தரீக்கத்” தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும். முஸ்லிம்களில் அநேகர் இவ்வாறு நோன்பு நோற்பதில்லை. இது கடினமான முறையென்று கைவிட்டு விடுகிறார்கள். இப்பொழுது கூறப்பட்ட இந்த முறையில் நோன்பு நோற்றாலும் கூட அதுவும் தரம் குறைந்ததாகவே கணிக்கப்படுகிறது.
இவ் வகை நோன்பிற்கு இமாம் கஸாலீ (றஹ்)அவர்கள் தங்களின் இஹ்யாவில் “ஸவ்முல் கவாஸ்” விஷேஷமானவர்களின் நோன்பென்று பெயரிட்டுள்ளார்கள்.மேலும் இவ் வகை நோன்பு “ஸவ்முத்தரீகா” தரீகாவுடைய நோன்பென்றும் அழைக்கப்படுகிறது.இவ்வகை நோன்பு மேற்க்குறிப்பிட்ட காரியங்களைச் செய்வதால் முறிந்து வடும். எனவே இவ் வகை நோன்பு நோற்ற ஒருவர் பகல் நேரத்தில் (நிய்யத்து வைத்ததிலிருந்து -சஹர்முடிவிலிருந்து நோன்பு திறக்கும் நேரம் வரை) கை, கால், கண் போன்ற உறுப்புக்களால் பாவம் செய்துவிட்டாலும், அல்லது தனது கல்பினால் - மனத்தால் பாவம் செய்துவிட்டாலும் அவரின் நோன்பு முறிந்துவிடும்.
மூன்றாவது:தடுத்தலென்பது மேற்கூறப்பட்டவையனைத்தை விட்டும் நீ உன்னைத் தடுத்துக் கொள்வதுடனும், உனதுள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடனும் உனதுள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவைத் தவிர வேறெந்த நினைவும் வராமல் தடுத்துக் கொள்வதையும் குறிக்கும் இவ்விபரப்படி உனதுள்ளத்தில் இறைவனின் நினைவைத்தவிர வேறு நினைவு வராமல் தடுத்துக் கொள்வாயானால் நீ நோன்பு நோற்றவனாக (தடுத்துக் கொண்டவனாக) ஆகிவிடுகிறாய். இது “ஸவ்மு” என்ற சொல்லின் மிக ஆழமான விளக்கத்தில் தோன்றிய ஒரு முறை இவ்வாறு நோன்பு நோற்பதை ஹகீகத்தின் அல்லதுமஃரிபத்தின் படியுள்ள நோன்பென்று சொல்லப்படும் முஸ்லிம்களில் நோன்பு நோற்பவர்களில் இவ் வகையில் நோன்பு நோற்பவர்கள் அரிதிலும் அரிது. இது மிகக் கடினமான முறையென்று முற்றாக விட்டுவிடுகிறார்ரகள்.
இவ்வகை நோன்பு மட்டுமே சம்பூரண நோன்பாகின்றது. இவ் வகை நோன்புக்கு இமாம் கஸாலீ (றஹ்) அவர்கள்“ஸவ்மு கவாஸ்ஸில் கவாஸ்” அதிவிஷேடமானவர்களின் நோன்பென்று பெரிட்டுள்ளார்கள். மேலும் இவ் வகை நோன்பு “ஸவ்முல் ஹகீகா – ஸவ்முல் மஃரிபா” மஃரிபாவுடைய நோன்பென்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நோன்பு நோற்ற ஒருவரின் உள்ளத்தில் பகல் நேரத்தில் அல்லாஹ்வின் நினைவைத்தவிர வேறு நினைவு வந்து விடுமானால் அவரின் நோன்பு முறிந்து விடும். நபிமார்களும், வலீமார்களும் இவ்வகை நோன்பு நோற்றார்களென்பதை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.
அன்புச் சகோதரனே!
இது வரை நீநோன்பின் வகைகளை அறிந்து கொண்டாயல்லவா? நீ இது காலவரை எந்த வகை நோன்பு நோற்று வந்திருக்கிறாய் என்பதை நினைத்துப் பார்! அல்லது இவ்வருடம் எந்த வகை நோன்பு நோற்பதற்கு நீ யோசிக்கிறாய்? மூன்றாம் வகை நோன்பு ஆரம்பப்படியிலுள்ள உனக்கு கஷ்டமாயிருந்தாலும் இரண்டாம் வகை நோன்பையாவது நோற்றுக் கொள்! உனது உள்ளம் வஞ்சகம், பொறாமை, பெருமை போன்ற அசூசியில் புரண்டதாயிருக்க நீ பசியோடும் தாகத்தோடு மட்டும் நேரத்தைக் கழிப்பதில் என்ன பயனைக் காணுவாய்?
எனவே “ஸவ்மு” (தடுத்தல்) என்ற சொல் நோன்பை முறிப்பவைகளான உண்ணல், பருகல், சேர்க்கை செய்தல் போன்றவற்றிலிருந்து நீ உன்னைத் தடுத்துக் கொள்வதையும், வெளியுறுப்புக்களாலும் உள்ளுறுப்பான மனதாலும் பாவம் செய்யாமல் அவைகளைத் தடுத்துக் கொள்வதையும் மனதில் அல்லாஹ்வைத் தவிரவுள்ள வேறு நினைவு வராமல் அதைத் தடுப்பதையும் குறிக்கக் கூடிய பொதுவான சொல்லாகும்.
நோன்பின் நோக்கமென்ன?
நோன்பு நோற்குமுனக்கு ஒரு நோக்க மிருக்க வேண்டும். அந்நோக்கம் நோன்பு விதிக்கப்பட்டதற்கான நோக்கமாகவுமிருக்கவேண்டும். நோன்பு நோற்பதால் பகல் நேரத்தில் உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் நீயும், நோன்பு நோற்பவர்களும் அல்லாஹ்வுக்கு மிச்சப்படுத்தி கொடுக்கின்றீர்கள் என்று கருதி விடாதே! உலக முஸ்லிம்கள் ஒரு வருடத்தில் முப்பது பகல் உண்ணாமல்,பருகாமல் நோன்புவைப்பது அவனுக்கு மிச்சப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக அல்ல!
இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டபின் நோன்பின் நோக்கமென்னவென்பதை ஆராய்ந்து பார்! நோக்கம் என்னவெனில் நீ உனது மனவெழுச்சிக் காலாகாமலும் உனது சிற்றின்ப காம உணர்வுக்கடமையாகமலும் இருப்பதேநோன்பின் பிரதானநோக்கமாகும். மனவெழுச்சியும், காம உணர்வும் எதனால் ஏற்படுகின்றன என்பது உனக்குத் தெரியுமா? மிதமிஞ்சி உண்பதும், மிதமிஞ்சிப் பருகுவதும் காம உணர்வைத்தூண்டுபவைகளாகும். மிதமிஞ்சிய உணவின் மூலம் உனதுள்ளம் இருளடைகின்றது, பலவீனமாகின்றது.ஷெய்தானின் ஆட்சி அதனால் அதிகரிக்கப்படுகின்றது. காம உணர்வு தானாகப் பிறக்கின்றது பெண்ணாசை உருவாகின்றது. அதனால் பொன்னாசையும் ஏற்படுகின்றது.'
உனது உடலில் எங்கெல்லாம் இரத்தம் ஓடுகின்றதோ அங்கெல்லாம் ஷெய்தானும் ஓடிக் கொண்டிருகிறான். எனவே பசித்திருப்பதன் மூலம் அவன் ஓடும் இடங்களை நெருக்கமாக்கி வையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபி மொழி மூலம் பசித்திருப்பதினால் ஷெய்தானின் ஆட்சி பலம் குறைந்து விடுகின்றது என்பதும் அதனால் தீய எண்ணங்களும், தீச் செயல்களும் முற்றாக நின்று அல்லது குறைந்து விடுகின்றது என்பது தெளிவாகின்றது.இவ்வுண்மையே உனது வாழ்கையில் அனுபவ ரீதியாக கண்டிருப்பாய் என நினைக்கின்றேன். பசியென்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் மனிதர்களில் இருக்கின்றார்களல்லவா? இவர்கள் பசித்திருப்பதினால் ஏற்படும் பயனை அறிந்திருப்பார்களா? அனுபவித்திருப்பார்களா?
சோதரா உன் நிலை என்ன? பசித்திருந்ததுண்டா? பசித்திருப்பதால் உண்டாகும் நண்மையை நீ அறிந்திருக்கின்றாயா? பசியில் உள்ள பேரின்பத்தை அனுபவித்திருக்கிறாயா?மிதமிஞ்சி உணவருந்தும் நிலை உன்னிடமிருந்து மாறி அளவோடு உண்டு அளவோடு பருகும் நிலை ஏற்படாத வரையும் நீ பசித்திருக்கவோ பசியின் இன்பத்தைக் காணவோமுடியாது.
ஞான வழி நடக்கும் நீ பசித்திருப்பதை ஒரு வணக்கமாகக் கருதி வாழ் ஞான வழி நடப்பவனுக்கு கூறப்படுகின்ற உபதேசங்களில் "பசித்திரு ,தனித்திரு, விழித்திரு" என்ற உபதேசம் மிகமுக்கியமானதென்பதை அறிந்துகொள்! எனவே நோன்பின் நோக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்து தான் அந்நோக்கத்திற்கேற்ப நோன்பு நோற்க்க வேண்டும் வழமைக்கு மாறாக மிதமிஞ்சிய உணவை நிறுத்திப் பசித்திருப்பதும், அதன் மூலம் உன்னிலுள்ள ஷெய்தானின் தன்மைகளைக் குறைத்து மனவெழிச்சியையும் காம உணர்வையும் அழித்து விடுவதுதான் நோன்பின் நோக்கமென்பதை அறிந்து அமலில் இறங்கு.
சகோதரா நோன்பு மாதத்தில் நீ எந்த அளவு உண்ணுகின்றாய்? பருகுகின்றாய்? என்பதை சற்று யோசித்துப் பார்? சஹர் செய்யும் பொழுது நப்சுக்கு வழிப்பட்ட சாதாரண காலத்தில் உண்பதை விட மிக ருசியாகவும் அதிகமாகவும் உண்ணுகிறாய்! மேலும் பகல் நேரம் பசியேற்படாமல் இருக்கும் நோக்கத்துடன் உண்ணுகிறாய்! ஒரு பகல் உண்ணாமல் இருப்பதையிட்டு அதற்கு நீ உற்கொள்ளும் உணவு பல நாட்களுக்குப் போதுமானதாக இருக்கிறது அதே போல் நோன்பு திறந்த பின்பும் மிதமிஞ்சி உண்ணுகின்றாய்.இந்நிலையில் நீ நோற்கின்ற நோன்பு எங்ஙனம் உண்மையான நோன்பாகப் போகின்றது. ஏனெனில் உனது நோன்பில் நோன்புடைய பிரதான நோக்கமே இல்லாமல் இருக்கிறது.
இரண்டு நேரங்களிலும் மிதமிஞ்சி உண்டு நோன்பு நோற்கின்ற நீ பகல் நேரத்திலும் பசியை அனுபவிக்கின்றாயா? இல்லை நிச்சயமாக நீ பசியை அனுபவிக்கவே இல்லை! அவ்வாறு நீ நோற்ற நோன்பில் நோன்பின் நோக்கமே உண்டாகவில்லை எனவே நப்சுக்கு மாறு செய்யாமல் ருசியாகவும் மிதமிஞ்சியும் சாப்பிட்டு நோற்கப்படுகின்ற நோன்பு பேரளவில் நோன்பாக இருந்தாலும் அது உண்மையான நோன்பே அல்ல! அவ்வாறு நோன்பு நோற்றவர் ஸாயிமீன் (நோன்பாளிகள்) கூட்டத்தில் சேரவும் மாட்டார்! நீ வழமையாக நோன்பு நோற்று வந்தவனாய் இருந்தால் எந்தவகையில் எந்த அடிப்படையில் நோன்பு நோற்று வந்திருக்கிறாய் என்பதை சற்று எண்ணிப்பார்! நீ நோற்று உள்ள பல நூறு நோன்புகளில் எத்தனை நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுருக்கின்றது என்பதை யோசித்துப்பார்!
நோன்பாளியின் இருவகை மகிழ்ச்சி
அன்பு சகோதரா! "நோன்பாளிக்கு இரண்டு சந்தோசங்கள் உண்டுஒன்று –நோன்பு திறக்கும் பொழுது மற்றது –தனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது" என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளதை நீ அறிவாயா? இவ்விரு சந்தோசங்களும் எவை? அவை எதனால் ஏற்படுகின்றது என்பதை சற்று நீ அறிந்து கொண்டால்தான் நோன்பு என்ற வணக்கத்தில் பிரவேசிக்கப்போகின்ற உனக்கு உதவியாய் இருக்கும்.
சிலர் இதற்கு பற்பல விளக்கங்களை கூறுவார்களாயினும் அவ்விளக்கம் பொருத்த மற்றதும் புரட்டலுள்ளதுமாகும். அவர்கள் இதற்குச் சொல்கின்ற விளக்கமென்னவெனில் நோன்பு திறக்கும் பொழுது ஈத்தம் பழம், வடை, கஞ்சி, சம்பல் மற்றும் உருசிமிக்க உணவுப்பொருட்களை சேர்த்து அவைகளை முன்னே வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவகைச் சந்தோசம் ஏற்படுகின்றதல்லவா? அதுதான் ஹதீஸில் குறிப்பிட்ட சந்தோசம் என்கிறார்கள். அன்புச் சகோதரா இவ்வகைச் சந்தோசத்தைப் பற்றியா நமது நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்?
அவர்களே வெறும் நீரிலும் ஈத்தம்பழத்திலும் நோன்பு திறந்திருக்கின்றார்கள். அதுதான் நோன்பு திறப்பதற்கு சிறந்ததென்றும் அவர்களே கூறியிருக்கின்றார்கள். அதுவல்ல சகோதரா சந்தோசம்! நீ சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை எத்தனையோ விஷயங்களை விட்டு நடந்தாயல்லவா? உறுப்புக்களால் பாவம் செய்வதைவிட்டாய் அதேபோல் உள்ளத்தினால் பாவம் செய்வதையும் விட்டு நடந்தாய் இது பெரும் சாதனைதான். இச்சாதனை மூலம் நீ பெரிய அமல் ஒன்றைச் செய்தவனாகின்றாய்.
அதன் விபரமென்னவெனில் "அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணங் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள் அல்லவா? உரிய முறையில் நோன்பு நோற்கும் நீ அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணங் கொண்டவானாகின்றாய் "அஸ–ஸமத்" என்று அவனுக்கு ஒரு திருநாமம் உண்டு. சகலதை விட்டும் தேவையற்றவன் என்பது அதன் பொருள். உரிய முறையில் நோன்பு நோற்கும் பொழுது இத்திருநாமத்தின் தன்மைஉன்னிலுமேற்படுகின்றதல்லவா? உரிய முறையில் நோன்பு நோற்று அதைப் பூர்த்தி செய்து திறப்பதற்காக இருக்கும் பொழுது இத்தகைய சிறப்பான தன்மை உன்னிலேற்பட்டதை நீ நினைக்கையில் உனக்கு சந்தோசம் ஏற்படுமா?, இல்லையா? மேற்குறித்த ஹதீஸின் இந்தச் சந்தோசத்தைப் பற்றித்தான் நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதை உணர்ந்து கொள்!
நோன்பாளிக்கு ஏற்படுகின்ற இரண்டாவது சந்தோசம் என்னவென்றால் நீ நோன்பு நோற்றுவந்தவனாயிருந்தால் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பதும் நிச்சயமானது. மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு அதிவிஷேஷமானதாக இருக்கும். இது குறித்துத்தான்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளி இறைவனைச் சந்திக்கும் பொழுது அவனுக்குச் சந்தோசம் ஏற்படுகின்றதென்று குறிப்பிட்டார்கள். நீ உண்மையான முறைப்படி நோன்பு நோற்றால்தான் இவ்விரு சந்தோசத்தையும் அனுபவிப்பாய்!
முப்பத்தாறின் இரகசியம்
முன்னோர்களான நபிமார்களில் வருஷம் முழுவதும் நோன்பு நோற்று வந்தவர்களும், ஒரு நாள் விட்டு நோன்பு நோற்று வந்தவர்களும் இருக்கிறார்கள். இந்த வகையில் நீ நோன்பு நோற்பதற்கு சக்தியற்றவனாயிருக்கின்றாய். இதனால்தான் றமழான் மாதம் மட்டும் உனக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
இம்மாதத்தைத் தவிர மேலதிகமாக நீ நோற்க விரும்பினால் நோற்றுக்கொள். ஆனால் அவையெல்லாம் சுன்னத்தான நோன்புகளாக கணிக்கப்படுமேயல்லாமல் பர்ழான நோன்பாக மாட்டாது.வருடம் முழுவதும் நோன்பு நோற்பதற்கோ உனக்கு சக்தியில்லாததால் முன் வாழ்ந்த மக்களை விட நீ நன்மை குறைந்தவனாய் இருக்கின்றாய் அல்லவா? இதனால் உனக்கு கவலை ஏற்படும் என்று நினைக்கின்றேன்.
நீ கவலை கொள்ளாதே? முன்னைய நபிமார்களின் உம்மத்தை விட உடற்பலத்தால் நீ குறைந்தவானாயிருந்தாலும்உள்ளத்தைப் பொறுத்தவரையிலும், நன்மையைப் பொறுத்த வரையிலும் நீதான் சிறந்தவனாகிறாய். அதனாற்றான் நீ செய்யும் ஒரு வேலைக்குப் பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. ஒன்றுக்குப் பத்து வீதம் குறைவின்றிப் பெற்றுக் கொண்டே இருப்பாய் இவ்வடிப்படையில் முப்பது நோன்புகளுக்கும் முன்னூரு நன்மைகளைப் பெறுகின்றாய்.
றமழான் மாதத்தைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதம் சுன்னத்தான ஆறு நோன்பு நோற்றுகின்றாய் இவ்வாறுக்கும் அறுபது கிடைக்கின்றது. எனவே றமழானில் நோன்பு நோற்பதனாலும் அதையடுத்து ஆறு நாட்கள் நோன்பு நோற்பதாலும் மொத்தம் 360 நன்மைகளைப் பெற்று வருஷம் முழுவதும் நோன்பு நோற்ற பாக்கியத்தை பெற்று விடுவாய். இது அல்லாஹ் உனக்குச் செய்த மாபெரும் அருளாகும். எனவே றமழான் மாதத்தில் மட்டும் நேன்பு நோற்பதோடு நின்று விடாமல் ஷவ்வால் மாத ஆறு நாட்களும் நோன்பு நோற்று வருஷம் முழுவதும் நோன்பு நோற்ற கூட்டத்தோடு சேர்ந்து கொள்.
ரமழானில் நின்று வணங்கு
அன்புச் சகோதரா! நம்பிக்கையுடனும் நன்மையைக் கருதியும் ரமழான் மாதம் நின்று வணங்குபவனின் முன் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் "என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கின்றாயா?இது ஸஹீஹானஹதீஸ்தான் மேலே கூறிய ஹதீஸின் படி றமழான் மாதம் நின்று வணங்கினால் நீ முன் செய்த பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுமென்பது உண்மைதான். இப்பாக்கியத்தைப் பெறுவதற்கு நீயும் விரும்புவாய் என்பதில் சந்கேமில்லை.
ஆனால் நின்று வணங்குவதுதான் உனக்குப் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் நின்று வணங்குவதென்றால் இரவு முழுவதும் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நீ கருதலாம். சன்மார்க்கம் மிக எளிதானது.குழப்பத்துக்குரியதோ பிரச்சினைக்குரியதோ கஷ்டமானதோ அல்ல. ரமழானில் நின்று வணங்குவதென்றால் என்னவென்பதை தெரிந்துகொள்.நோன்பு திறந்ததிலிருந்து சுபஹ் வரை தொழுதால்தான் நான் நின்று வணங்கிய கூட்டத்தில் சேரலாம் என்று நினைத்துக் கொள்ளாதே.
நோன்பு மாதம் ஒவ்வொரு இரவிலும் மஹ்ரிப்தொழுகையை ஜமாத்துடன் தொழுது அதற்கான இரண்டு ரகஅத் சுன்னத்தையும் தொழுது இஷாத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுது அதற்கான முன்பின் சுன்னத்துக்களையும் தொழுது தறாவீஹ் தொழுகையையும் வித்றுத் தொழுகையையும் தொழுது வருவாயானால் றமழான் மாதம் நின்று வணங்கிய கூட்டத்தில் சேர்ந்து விடுவாய். இப்போதுநான் கூறிய தொழுகையெல்லாம் நமதூரைப் பொறுத்த மட்டில் இரவு பத்தரை மணிக்கு முன் முடிந்துவிடுகின்றதல்லவா? இஸ்லாம் இவ்வாறு இலேசானதாயும் சலுகை நிறைந்ததாயுமிருக்க நீ ஏன் அசட்டையாக இருக்கிறாய்?இந்த ஒரு மாதமாவது மேற்கூறிய வணக்கத்தை செய்யாமலிருந்து கொண்டு அல்லாஹ்வின் பேரருளை எதிர்பார்ப்பது எவ்வாறு? எதிர்பார்ப்பது நியாயமாகுமா? நின்று வணங்குதல் என்பதன் விபரம் இதுதான்.
இந்த அளவாவது நீ செய்தால் நின்று வணங்கியவனாகி விடலாம் அல்லவா? ஆனால் இவ்வளவுக்கும் மேலாக நீ வணங்க விருப்பினால் அது உனது ஹிம்மத்தைப் பொறுத்ததேயாகும். செய்வதற்கு கூலி கிடைப்பது நிச்சயமே! "நின்று வணங்கியவனுடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள்கூறியதிலிருந்து நீ என்ன விளங்கியிருக்கிறாய்?நீ முன் செய்த சிறிய பெரிய பாவம் அனைத்தையுமே மன்னித்து விடுகின்றான் என்று கருதுகிறாயா? அவ்வாறு கருதாதே! இதில் விபரமுண்டு விபரத்தைக் கூறுகின்றேன் சற்று சிந்தி!
பாவங்கள் இருவகைப்படும் ஒன்று சிறிய பாவம் மற்றது பெரிய பாவம். பெரிய பாவம் என்றால் நீ செய்யக் கூடிய தொழுகை ஸகாத் போன்ற நல்ல காரியங்களினால் மட்டும் மன்னிக்கப்படமாட்டாது. அவைகளுக்காக அல்லாஹ் இடத்தில் நீ பாவமன்னிப்புக் கோரவேண்டும். உதாரணமாக விபச்சாரம், குடி ஆகியவற்றைப் போன்று. சிறிய பாவமென்றால் நீ செய்கின்ற தொழுகை ஸகாத்போன்ற நல்ல காரியங்களினால் மன்னிக்கப்படும். உதாரணமாக அன்னியப்பெண்களைப் பார்ப்பது போன்று இவ்விரு பாவங்களிலும் நீ றமழான் இரவில் நின்று வணங்குவதால் சிறிய பாவம் மட்டும்தான் மன்னிக்கப்படுகின்றது. பெரிய பாவத்திற்காக அது குறித்து நீ அழுது சலித்து மன்னிப்புக்கோரிக் கொள்.!
அத்தோடு இன்னொரு வகையில் பாவம் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று அடியானுக்கும் அல்லாஹ்விற்குமிடையே சம்மந்தப்பட்டது. மற்றது அடியார்களுக்கிடையே சம்மத்தப்பட்டது.முந்திய வகையைச்சேர்ந்த பாவமாயின் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரினால் அதை அல்லாஹ் மன்னித்து விடுவான். உதாரணமாக தொழுகையை விடுவது போன்று,. இரண்டாவது வகையைச் சேர்ந்த பாவமாயின் ஒருவர் இன்னொருவரின் பொருளைத் திருடுதல் புறம் பேசுதல் அநீதி செய்தல் போன்ற இவ்வகைப் பாவம் அல்லாஹ் விடம் மன்னிப்புக் கொருவதால் மட்டும் மன்னிக்கப்பட மாட்டாது. திருடிய பொருளை பொருளுக்குரியவரிடம் ஒப்படைக்கும் வரை யாரைப்பற்றிப் புறம் பேசினாரோ அவரிடம் நேரடியாகச் சென்று மன்னிப்புக் கேட்கும் வரை அநீதி செய்தவர் அநீதி செய்யப்பட்டவரின் மனத்திருப்தியைப் பெறும்வரை!
எனவே இப்புனித மிக்க றமழான் மாதத்தில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரவிளையும் நீ இரண்டாம் வகையைச் சேர்ந்த பாவங்கள் செய்தவனாயிருந்தால் மேற்கூறிய முறையில் கையாண்டு உன் வாழ்வைத் தூய்மைப்படுத்து!
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்
மௌலவி A.அப்துர் றஊப் மிஸ்பாஹி –பஹ்ஜி அவர்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக