புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொஞ்சம் வட்டாரம், பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ (Dhee) என்ற பெயரில் வந்த படத்தை மறுபடியும் தமிழில் ‘மிரட்டல்’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ்.ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மிரட்டலாக ஒன்றுமில்லை. அரசாங்கம் என்ற அதிரடி படத்துக்குப் பிறகு சில ஆண்டு
இடைவெளிக்கு பிறகு மாதேஷ் தந்துள்ள படம் இது.

சாப்ட்வேர் இளைஞன் மாதிரி வேடங்களில் பார்த்துப் பழகிய வினய், இதில் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மனதில் பதிகிற மாதிரி எதையும் அவர் செய்யவில்லை.

தங்கை சர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார அன்னன், மெகா தாதாவாகவும் நடித்திருக்கின்றார் பிரபு. தன் நண்பனான பாண்டியராஜனின் மகன் வினய்யை தன்னிடமே அடியாளாக வைத்துக் கொள்கிறார்.

இன்னொரு தாதாவான பிரதீப் ராவத்தின் மகனை போட்டுத் தள்ளுகிறார் பிரபு. இதனால் பிரபுவின் தங்கையை கொல்ல அடியாட்களை ஏவுகிறார் பிரதீப். தங்கையைக் காக்கும் பொறுப்பை வினய்யிடம் ஒப்படைக்கிறார் பிரபு. காப்பாற்றும் பொறுப்பேற்ற வினய்யுடன் காதலாகிறார் சர்மிளா. காதல் தீ கொழுந்துவிட்டெறிய ஆரம்பிக்கிறது.

பிரபுவைப் பார்க்கும்போது மட்டும் அதை அடக்கிக் கொள்கிறார்கள். சர்மிளாவை வேறு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்க பிரபு முயல, ஒரு நாள் ஓடிப் போய் பழனியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு வினய்யின் பெற்றோரும் உடந்தையாக நிற்கின்றனர். திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே பிரபுவின் எதிரிகள் சர்மிளாவை போட்டுத் தள்ளப் பார்க்க, அதிலிருந்து காப்பாற்றுகிறார் வினய். காப்பாற்றி முடிக்கும்போது, சரியாக பிரபு வந்து நிற்கிறார்.

உடனே திருமணத்தை மறைத்து, யதேச்சையாக காப்பாற்றியதாக சொல்லிவிடுகிறார் வினய். தில்லுமுல்லு தொடர்கிறது. தானும் சர்மிளாவும் கணவன் மனைவி என்ற உண்மையை பிரபுவுக்கு சொன்னாரா… இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

படத்தில் ஹீரோ வினய்யை விட அதிக முக்கியத்துவம் பிரபுவுக்குதான். அவர் தோற்றம், தாதா கெத்துடன் அவரது நடை, தங்கை மீதான கண்மூடித்தனமான பாசம், அறியாமை என அனைத்திலும் கலக்குகிறார் பிரபு.

வினய்யை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. மற்றபடி ரொமான்ஸ், டான்ஸ், பிரபுவை ஏமாற்றும் குறும்புத்தனம் என கலகலப்பாக நடித்திருக்கிறார். படத்தின் ஸ்பெஷல் பார்க்க ரொம்ப ப்ரெஷ்ஷாக இருக்கும் நாயகி சர்மிளாதான். அவரும் வினய்யும் லண்டன் வீதிகளில் போடும் ரேடியோ பாடல் கேட்கவும் பார்க்கவும் இதம்.

சந்தானத்தை இன்னும் கூட நன்றாக பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் வருகிற காட்சிகளில் சிரிப்புக்குப் பஞ்சம் வைக்கவில்லை மனிதர். பிரவீண் மணியின் இசை பரவாயில்லை. இந்த மாதிரி படங்களில் பின்னணி இசைக்கு பெரிய வேலை இல்லை, கண்ணனின் ஒளிப்பதிவு அருமை.

இத்தனை இருந்தாலும், திரைக்கதை என்ற விஷயத்தில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கோட்டை விட்டிருக்கிறார் மாதேஷ். நகைச்சுவை, கதாநாயகி போன்ற விஷயங்களுக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம் மிரட்டல் திரைப்படத்தை.

நடிப்பு: வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன், பிரதீப் ராவத்
பி.ஆர். ஓ: நிகில்
இசை: பிரவீண் மணி
ஒளிப்பதிவு: டி கண்ணன்
இயக்கம்: மாதேஷ்
தயாரிப்பு: மீடியா ஒன் குளோப

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top