முருகனுக்கு மால்மருகன் என்றொரு திருநாமம் உண்டு. மருகன் என்றால் மாப்பிள்ளை. முருகனே திருமாலுக்கு மாப்பிள்ளை.
அவனுக்கோ தேவியர் இருவர் உண்டு. ஆனால் மக்கள் இல்லையே!
அப்படியிருக்க முருகனுக்கு எப்படி மாப்பிள்ளை வருவான் என்று சிந்திக்கத் தோன்றும். இதற்கு விடையறிய முருகனடியாராகிய முசுகுந்த சக்ரவர்த்தியின் வரலாற்றை அறிய வேண்டும். அந்த வரலாறு எங்குள்ளது?
நாயன்மார்களைப் (சிவனடியார்கள்) பற்றி பெரிய புராணம் உள்ளது.
அதுபோல் முருகனடியார்களைப் பற்றி ஒரு புராணம் உள்ளது! அதன் பெயர் சேய்த் தொண்டர் புராணம்.
முருக பக்தருள் சிறந்தவரும் தமிழறிஞருமான செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அறுபதாண்டுகளுக்குமுன், "முருகன் பன்னிரு திருமுறைகள்' என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டார். அதில் பன்னிரண்டாவது திருமுறையாக வருவதுதான் சேய்த்தொண்டர் புராணம். சேய் என்பது முருகனைக் குறிப்பது!
முருகன் திருமுறைகள் பன்னிரண்டு.
அருணகிரிநாதர் அறுபடை வீடுகளைப் பாடிய திருப்புகழ் முதல் ஆறு திருமுறைகள். ஏழாம் திருமுறை பொதுவான மற்ற தலங் களைப் பற்றிய திருப்புகழ். திருவாசகத்திற்கு நிகரானவை கந்தர் அலங்காரமும், கந்தர்
அந்தாதியும். இவை இரண்டும் எட்டாம் திரு முறை. கந்தர் அனுபூதி திருமூலரின் திருமந்திரத் திற்கு நிகரானது. எனவே இது ஒன்பதாம் திருமுறை வேல்விருத்தம் முதலியவை பத்தாம் திருமுறை. நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையும், குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவும் பதினோ ராம் திருமுறை. தேனூர் வரகவி சொக்கலிங்கனார் இயற்றிய சேய்த் தொண்டர் புராணம் பன்னிரண்டாம் திருமுறையாய் அமைந்தது.
இந்த சேய்த் தொண்டர் புராணம் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்துடன் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. திருத் தொண்டர் புராணத்தில் தில்லை வாழ் அந்தணர் சருக்கம் உள்ளதுபோல் இதில் செந்தில் வாழ் அந்தணர் பெருமை கூறப் பட்டுள்ளது.
சேய்த் தொண்டர் புராணத்தில் இரண்டாவ தாய் வருவது முசுகுந்தன் வரலாறு. உமாமகேசு வரன் கயிலையில் அமர்ந்திருந்தார். அருகே ஒரு வில்வ மரம். அதில் குரங்கு ஒன்று அமர்ந் திருந்தது. குளிர் தாங்காமல் அது இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டேயிருந்தது.
அவை உமையவள் மீதும் சிவன்மீதும் விழுந்தன. சிவராத்திரியன்று இவ்வாறு செய்த குரங்கை சிவன் அருகில் அழைத்தார். பயந்து போன குரங்கு, ""பெருமானே! அறியாமல் தங்கள்மீது இலைகளைப் போட்டதற்கு மன்னித்து அருள்க'' என்றது.
""எமக்கு உகந்த வில்வதளங்களால் எம்மை அர்ச்சித்திருக்கிறாய். ஆகவே உனக்கு பூவுலகில் அரச பதவி அளிக்கிறோம்'' என்றார் சிவபெருமான்.
""பெருமானே, தங்களைப் பிரிந்து வாழ என்னால் முடியாது. அப்படிப் பிறந்தாலும் தங்களை மறவாதிருக்க இதே குரங்கு முகத்துடன் பிறந்திட அருள்க'' என்றது குரங்கு. சிவபெருமானும் அவ்வாறே அருள் புரிந்தார்.
அரிச்சந்திரனின் உறவு முறையாக- குரங்கு முகத்துடன் சோழ வம்சத்தில் பிறந்தது அந்தக் குரங்கு. முசுகுந்தன் எனப் பெயரிடப்பட்டது. (முசு-குரங்கு). முசுகுந்தன் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்தான்.
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம். இதற்கு முதல் அழைப்பே முசுகுந்தனுக்குத்தான் அனுப் பப்பட்டது. திருமணத்தின் போது முசுகுந்தன் அகத்திய ரைச் சந்தித்தான். அவரிடம் சுக்ரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகியவற்றைக் கேட்டறிந்தான்; அவற்றைக் கடைப்பிடித்து வந்தான். அதனால் மகிழ்ந்த முருகன் முசுகுந்தனுக்கு காட்சி தந்து, ""என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்க, ""தங்கள் படை வீரர்களாகிய வீரபாகு முதலிய ஒன்பதின்மரை எனக்குத் துணையாகத் தந்தருள்க'' என்றான். (நவவீரர்களும் முருகனின் தம்பிகளே.)
முருகனைப் பிரிய மனமில்லாத வீரபாகு முதலியோர் தயங்கினர்; மறுத்தனர்.
""எனது ஆணையை மறுத்ததால் மனிதராய்ப் பிறந்து, சிலகாலம் முசுகுந்தனுக்கு ஏவல் செய்து பிறகு எம்மிடம் வருவீராக'' என்றார் முருகன்.
மனிதராய்ப் பிறந்த வீரபாகு புஷ்பகந்தியை மணந்தார். அவர்களுக்கு சித்திரவல்லி என்ற மகள் பிறந்தாள். அந்தப் பெண்ணை முசுகுந்தனுக்கே மணம் முடித்து வைத்தனர்.
முருகனின் தம்பி வீரபாகுவுக்கு முசுகுந்தன் மருமகன். அப்படியானால் அண்ணன் முருகனுக்கும் முசுகுந்தன் மாப்பிள்ளை தானே!
0 கருத்து:
கருத்துரையிடுக