புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் மக்கள் புலம் பெயர்வது என்பது நீண்ட காலமாகவே இடம் பெற்று வந்துள்ள போதிலும், அத்தகைய பெயர்வுகள் பொருளியல் மேம்பாட்டுக் காரணங்களின் பாற்பட்டனவாகவே பெரும்பாலும் காணப்பட்டன. அதாவது வாழ்வாதாரம், அரசியற் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் போன்ற ஏனைய
காரணிகள் பெயர்வுக்கான உந்து சக்தியை வழங்கியிருக்கவில்லை. ஆனால், சமீப காலத்தில் மூல காரணமாகிய பொருளியல் மேம்பாட்டுடன் பின்னதாகக் குறிப்பிடப்பட்டிருப்பனவும் தமிழ் மக்களைத் தமது பாரம்பரிய வதிவிடங்களிலிருந்து பெயர்ப்பதிற் பாரிய செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

அதன் விளைவாக ஒன்றுடனொன்று தொடர்புடைய இரு வெளிப்பாடுகள் இனம் காணப்படலாம். ஒன்று, புலம் பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை கூரிய ஓர் அதிகரிப்புக்குட்பட்டுள்ளது. மற்றது. பெயர்வின் பரம்பலும், முன் போன்று ஒரு சில நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாயன்றி உலகளாவிய ரீதியிற் பரந்து விரிந்ததொன்றாக மாற்றமடைந்தது. இத்தகைய (எண்ணிக்கை) உயர்வும் (விரிந்த) பரப்புமே தமிழர் பண்பாட்டில் புலம் பெயர் மட்டத்திலிருந்தெழும் பங்களிப்புப் பற்றிச் சிந்திக்கவேண்டிய ஒரு தேவையை உருவாக்கியுள்ளன.

அவ்வாறு நோக்குமிடத்துப் பொருளியலாளர் எவ்வாறு பொருளியல் மீதான அரசியலின் செல்வாக்கை முக்கியத்துவப்படுத்தி “அரசியற் பொருளாதாரம்” என்ற ஒரு தனித்துவ நோக்கினை மேற்கொள்கின்றனரோ அதே பாணியில் பண்பாட்டின் மீதான அரசியல் தாக்கத்தையும் கருத்திலெடுத்து “அரசியற் பண்பாடு” என்ற ரீதியிற் பார்க்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரை ஏற்படுகின்ற தெனலாம். இவ்வாறு கூறுமிடத்து நாம் அரசியலின் பண்பாடு பற்றிப் பேசவில்லை. ஆனால் (தமிழர்) பண்பாட்டின் மீது அரசியல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையே கோடிட்டுக் காட்டுகிறோ மென்பது குறிப்பிடப்பட வேண்டும்.


  • அரசும் தமிழ்ப் பண்பாடும்


சமூகமொன்றின் ஏனைய அம்சங்களைப் போன்றே, அதன் பண்பாடும் “அரசு” என்ற நிறுவனத்தின் ஆதரவு இருக்குமாயின் நன்கு பேணப்படுவது மாத்திரமன்றிப் பெரிதும் பலம் பொருந்தியதொன்றாகவும் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்குமென்பதில் ஐயமில்லை. எனினும், இன்றைய தமிழ்ப் பண்பாடு அவ்வாறான நிலைமை ஒன்றின்றியே வலுவானதொன்றாக நிலை பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது. இதற்கு முக்கியமாக மூன்று காரணிகள் பொறுப்பாயுள்ளன எனலாம் :

1. ஏற்கனவே நிலவியிருந்த இறைமை வாய்ந்த அரசுகள் மூலம் பெற்றுக்கொண்ட பலம் இன்னமும் தமிழ்ப்பண்பாட்டை ஒர் உயர்நிலையிற் பேணுவதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சோழ சாம்ராச்சியத்தினதும் இலங்கையில்; யாழ்ப்பாண இராச்சியத்தினதும் பங்களிப்புகள் எடுத்துக்காட்டாக நினைவு கூரத்தக்கவை.
2. அரசுகள் பலவற்றிற் புவியியல் ரீதியாகத் தமிழர் செறிந்து வாழும் பகுதிகள் இனம் காணப்படக்கூடியதாயிருப்பதும் அதன் வழி ஓர் இரண்டாந்தரமட்டத்தில் தமிழ்ச் சமூகங்கள் ஆக்கம் பெற முடிவதும்.
3. இத்தகைய சமூகங்களில் தமிழ்ப் பண்பாடு மேம்பாடு கருதி அமைப்பு ரீதியாக இடம் பெறும் நடவடிக்கைகள்.

இக்காரணிகளின் அடிப்படையில் “தமிழ் கூறும் நல்லுலகம்” ஒன்றை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. தமிழ்ப் பண்பாடு இவ்வாறான தொரு பின்னணியில் தகுந்த பாதுகாப்புடன் உயிர்த்துடிப்புடையதொன்றாகவும் இருப்பதனாலேயே இதர நெருக்கடிகளின் மத்தியிலும் தமிழ்ப்பண்பாடோ, அதனைப் பேணுவதோ அச்சுறுத்தலுக்குள்ளாகவில்லை. இன்று தமிழ்ப் பண்பாடு தன்னைத் தானே பேணிக்கொள்ளக் கூடிய ஒரு தராதரத்தினைப் பெற்றுள்ளது எனலாம்.


  • பண்பாடும் புலம்பெயர்வும்


தமிழ்ப் பண்பாட்டுக்கும் அப்பண்பாட்டுக்குரிய மக்களின் புலம் பெயர்வுக்குமிடையிலான தொடர்பினை நோக்குமிடத்து, நாம் பண்பாடு ஒரு புறநிலைத் தாக்கத்துக்குட்படுவது பற்றியே ஆராய விழைகின்றோம். தமிழ்ப் பண்பாட்டின் மீதான மறுநிலைத் தாக்கம் எவ்வகையிலும் புதிய ஒரு விடயமல்ல. எனினும், புலம் பெயர்வதன் மூலமான பாதிப்பில் நாம் காணும் முக்கிய வேறுபாடு யாதெனில், இது வரை தமிழ்ப் பண்பாடு தன்னை நோக்கி வந்த புறநிலைத் தாக்கங்களை உள்வாங்கி எவ்வாறு தன்னைச் சரிப்படுத்திக் கொண்டதென்பது எடுத்துக் கூறப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியின் “தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்” (கா. சிவத்தம்பி, தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை. 1994) என்ற கட்டுரை இந்தப் பரிமாணம் பற்றிய ஒரு முழுநிலை ஆய்வுக்கான கட்டமைப்பை வழங்குகின்றது. ஆனால், தற்போது தமிழ் மக்களே பாரிய அளவில் புலம் பெயர்ந்து உலகின் நானா பக்கங்களிலும் சிதறுவதனால் அவர்களது பண்பாட்டின் மீது ஏற்படக்கூடிய பல்வேறு பாதிப்புக்கள் பற்றிப் பேசவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவே ஏனைய பண்பாடுகளுக்கில்லாத ஒரு தனித்துவத்தைத் தமிழ்ப் பண்பாட்டுடன் ஏற்படுத்தி வைக்கின்றது. இவ்வகையில் ஆங்கிலப் பண்பாட்டுடன் தமிழ்ப் பண்பாட்டையும் ஒப்பு நோக்க முடியுமாயினும் முன்னையது அரசியல் மேலாதிக்கத்தின் ஒரு விளைவாயிருக்க எம்;மீதான தாக்கம் அரசியற் பலவீனத்தின் ஒரு வெளிப்பாடாக உருவாகின்றது.


  • பண்பாடும் சமூகமும்


பண்பாடு என்பது சமூகத்தை அடித்தளமாகக்கொண்டது. பண்பாட்டுக்கான வரைவிலக்கணம் எற்கனவே குறிப்பிடப்பட்ட பேரா. சிவத்தம்பியின் கட்டுரையில் இரத்தினச் சுருக்கமாகக் குறிக்கப்படுகின்றது.

“பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட்கூட்டம் தனது சமூக, வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதீகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மதநடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினது தொகுதியாகும்.” (பக்கம் 5)

ஆகவே சமூக ஊடாட்டங்களே ஒரு பண்பாட்டை உயிர்த் துடிப்புடன் வைத்திருப்பதற்கான அடிப்படைத் தேவை என்பது இதிலிருந்து புலனாகின்றது.

ஆனால் தமிழர் புலம்பெயர்வின் வழி ஏற்பட்ட ஒரு முக்கிய தாக்கம் என்னவெனில் தமி;ழ்ப் பண்பாடு தனது பலத்தின் அடிநாதமாகிய சமூகத்தின் பங்களிப்பை இழந்து விட்டமையாகும். ஏற்கனவே குறித்த இறைமை அரசொன்றின் ஆதரவற்ற நிலையுடன் இதுவும் சேர்ந்து கொண்ட போது புலம் பெயர்ந்த தமிழரைப் பொறுத்தவரை அவர்களது பண்பாடு ஓர் அநாதரவு குழந்தையாக விடப்பட்டமையைக் கண்டு கொள்ளலாம். இதன் மூலம் ஏற்பட்ட ஓர் உடனடித் தாக்கம் யாதெனில் பண்பாடு என்பதும் அதனைப் பேணுவதென்பதும் தனிப்பட்ட ஒருவரது ஃ குடும்பத்தினது பொறுப்பாயிற்று. அதன் விளைவுகளின் தன்மையைப் பார்க்குமிடத்துப் புலமை மட்டத்தில் ஒரு விடயம் தெற்றெனப் புலனாகின்றது. அதாவது, பண்பாடொன்றின் பேணல், மேம்பாடு என்பனவற்றைப் பொறுத்துச் சமூகத்தின் முக்கியத்துவம் என்ன என்பதற்கான நடைமுறை ஆதாரங்களாக இவ்விளைவுகள் விளங்குகின்றன. சமூகப் பண்பு அதிகமாக உள்ள இடங்களில் உயர் தரத்திலும், அது குறைவாயுள்ள பகுதிகளில் குறைந்த மட்டங்களிலும் பண்பாட்டின் தன்மைகள் பேணப்படுவதைக் காணலாம்.

இதனைப் பெருமளவு தெளிவுபடுத்துவதற்குப் பொறுப்பாயிருந்தது புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் தாய்த் தமிழ்;ச் சமூகத்துக்கு மிடையிலான உறவு சிலபல காரணங்களினால் முற்றாகவே துண்டிக்கப்படக் கூடிய நிலைமை உருவாகியமையேயாகும். முந்திய கட்டங்களில் பொருளாதார மேம்பாடு கருதிப் புலம்பெயர்ந்தவர்கள் வேறொரு புலத்தில் வசித்திருந்தாலும் தமது தாய்ச் சமூகத்துடன் முழுநிலைத் தொடர்ச்சியாக இல்லாவிடினும் ஒரு குறைநிலைத் தொடர்ச்சி மட்டத்தில் ஊடாடிக் கொண்டுதானிருந்தார். ஒர்இரு வழித் தொடர்பு முறையில் இடம் பெற்ற விடுமுறைக் கால, மற்றும், பண்டிகை, கொண்டாட்டம், வைபவம் தொடர்பான விஜயங்கள் அதனைச் சாத்தியப்படுத்தின. இந்த நிலைமை தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு இன்னமும் பொருந்துகின்ற காரணத்தினாலேயே, புலம் பெயர்ந்த தமிழரின் பண்பாட்டுத் தனித்துவம் பற்றிப் பேசும் போது அது பெருமளவுக்கு இலங்கைத் தமிழருக்கு மாத்திரம் உரியதொன்றாகின்றது. அதே நேரத்தில் சில தனித்துவ நிலைகள் பற்றிப் பேசக் கூடியளவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் தமிழ்ப் பண்பாடு காணப்படுகின்றதென்றால், அதற்கு தமிழ்நாட்டின் சமூகத்துடனான ஊடாட்டம் ஒரு பாரிய பங்களிப்புச் செலுத்தி வருகின்றதென்பதில் ஐயமில்லை. அது இல்லாவிடில் பண்பாடு முற்றாகவே அழிந்துவிடக்கூடிய அபாயமும் ஏற்படாமல் இல்லை.

தாய்ச் சமூகத்துடனான ஊடாட்டத்திற்கான வாய்ப்புத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட தமி;ழ் மக்களதும், குடும்பங்களதும் ஊடாட்டம் அவர்கள் புலம் பெயர்ந்த களத்திலிருந்த (அந்நிய) சமூகத்துடனேயே இடம் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இத்தகைய ஒரு நிலையில் பண்பாட்டைப் பேணுவதென்பது, குறிப்பாகக் குடும்பங்களின் இரண்டாவது தலைமுறையினர் விடயத்தில், அதுவும் அவர்களது பதின்மப் பிராயங்களில், ஒரு பெரும்சவாலாகவே எதிர் நோக்கப்படுகின்றது. இது பண்பாடு பேணல் என்பதைத் தனிப்பட்ட குடும்பங்களது வலிமை ஈடுபாடு என்பவை மீதான ஒரு “தங்கியிருக்கும் மாறியாக” ஆக்கிவிடுகின்றது. எனவே, தமிழ்ப் பண்பாடு அதன் பேணல் நிலையைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட களத்திலேயே தராதர வேறுபாடுகளுக்குட்படுத் துவதற்குப் பொறுப்பாயிற்று.

எவ்வாறாயினும், இந்த வேறுபாடுகளின் மத்தியிலும், இரு தன்மைகள் முக்கியமாகச் சுட்டப்படலாம். முதலாவதாகத் தமிழ்ப் பண்பாடு எந்த ஒரு தரத்தில் புதிய களத்துள் நுழைந்ததோ, அதே தரத்தில் தக்க வைக்கப்படும் ஒர் “உறைவு” நிலை ஏற்பட்டது. தாய்ச் சமூகத்தில், அதிலான சமூகப் பொருளியல் | சமூக-அரசியல் சக்திகளின் பாதிப்பால் ஏற்படக்கூடிய மாற்றங்களின் செல்வாக்கு இந்தப் புதிய புறநிலைக் களத்தில் முற்றாகத் தவிர்க்கப்பட்டதென்றே கூறலாம். முன்கூறிய ஊடாட்டமின்மையுடன், இலங்கை அரசாங்கத்தின் செய்தித் தணிக்கைக் கெடுபிடிகளும் அகநிலைச் சமூக மாற்றங்களைப் பூரணமாகப் புறநிலைக் களம் அறிந்து கொள்வதினின்றும் தடுத்து விடுகின்றது. இரண்டாவதாகத் தமிழ்ப் பண்பாட்டின் பேணல், மேம்பாடு என்பவற்றின் ஒரு முக்கிய சாதனமாகிய தமிழ் மொழியின் பங்கு படிப்படியாகக் குறைக்கப்படுவதாகும். புற மொழிகளின் வாயிலாகப் பண்பாட்டின் சிறப்புகள் பேசப்படுவதுடன் பேணல் முயற்சிகளும் இடம் பெறுகின்றன. இரண்டாவது தலைமுறையினரைப் பொறுத்தவரை தமிழின் பங்களிப்பு முற்றாகவே அற்றுப் போய்விடுகிறதெனலாம். எனினும், அதன் உதவியின்றியே தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு வடிவங்களாகிய பரதம், இசை. நாடகம் ஏன் பேச்சு வடிவங்கள் கூட மேடையேறுவது வியப்பாகவும் ஆனால் அதே நேரத்தில் பெரிதும் விசனிக்கத்தக்கதுமான ஒரு வெளிப்பாடாகும். இந்நிலையில் தமிழ்ப்பண்பாடு உயிர்த் துடிப்பற்றுச் செயற்கையாக வெறும் சடமாக உயிர் தப்பவைக்கப்பட்டிருப்பது புலம் பெயர்ந்த தமிழரின் பண்பாட்டுத் தனித்துவத்தின் பரிதாபகரமான ஒருபரிமாணமாகும்.

எனினும் இதிலிருந்து வெளிப்படும் உண்மைகள் சில எமது கவனத்துக்குரியன. அவற்றுள் முக்கியமானது பண்பாட்டுக்கும் பொருளியலுக்கு மிடையிலான தொடர்பாகும். ஒரு மொழியைப் பண்பாட்டு நிமித்தங்களுக்கும் மேலாகப் பொருளாதாரத் தேவைகள் கருதியே மக்களும் மாணவர்களும் கற்க முன்வருவதென்பது மேன்மேலும் உறுதியாகின்றது. பொருளியல் தேவையும் இறுக்கமான சமூகக் கட்டுக்கோப்பும் மொழியைப் பேண முன் வராதுவிடில் அது வழக்கிலிருந்து அழிந்து விடுமென்பதற்குத் தமிழ்மொழி சான்றாகத் திகழ்கின்றது. இதற்குச் சான்றாக ஒன்றுக்கு மேற்பட்ட எடுத்துக்காட்டுக்களை முன் வைக்க முடியும். முதல் நிலையில் தமிழ்மக்கள் குடியேறிய மொறிஷியஸ், தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் தமிழ்மொழி வழக்கிழந்து போயிருப்பதையும் காணலாம். அதன் பிந்திய வடிவமே புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குறிப்பாக அவர்களது இரண்டாவது தலைமுறையினரிடையே தமிழ்மொழி எதிர்நோக்கும் சீரழிவாகும். ஆனால், அதே நேரத்தில் தமிழ்ப் பண்பாடு மொழியின் பக்கபலமின்றிப் பேணப்படும் ஒரு சு10ழ்நிலை உருவாகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அது பெறுமதி குறைக்கப்பட்ட ஓர் அந்தஸ்தை அடைவது தவிர்க்கமுடியாதது. மறுபுறம், தமிழ்ப் பண்பாட்டின் கலை வடிவங்கள் சில வாழ்க்கைத் தொழில் என்ற மட்டத்திற் பொருளாதார நலன்களுக்கு இட்டுச் செல்லுமாயின் அதற்கான உயர்தரம் வேண்டி நிற்கும் உயிர்த்துடிப்புக் கருதித் தமிழ்மொழிக்குப் புத்துயிரளிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெறலாம். இது தமிழரல்லாத பிறமொழி பேசும் கூட்டத்தாரிடமிருந்து கூட ஊற்றெடுக்கலாம்.


  • பண்பாட்டுப் பேணல் முயற்சிகள்


புலம் பெயர் மட்டத்தில் தமிழ்ப் பண்பாடு இவ்வாறு (சமூக) ஊடாட்டம் இல்லாது ஈடாட்டம் காணும் நிலையைச் சீர்திருத்துவதற்கான முயற்சிகளும் இல்லாமல் இல்லை. இத்தகைய முயற்சிகளின் விளைவாகவே நாம் முன்குறிப்பிட்டவாறு, பண்பாட்டு வடிவங்கள் சில இன்னமும் உயிர் பிழைத்த நிலையில் உள்ளன. இவ்வகையில் முக்கியமானது புலம் பெயர் களங்களில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு சங்கங்கள், மன்றங்கள் என்பவற்றின் பங்களிப்பாகும். இவை தமிழ்ச் சங்கங்களும், சமய நோக்குக் கொண்ட இந்து மன்றங்கள், கழகங்கள் போன்றவையும் என அடையாளம் காணப்படலாம்.

இத்தகைய அமைப்புகளின் பொதுவான தன்மையினை நோக்குமிடத்து, அவை புலம் பெயர் களங்களில் (தமிழ்ச்) சமூக மொன்றில்லாத நிலையில் அதனைப் பதிலீடு செய்து முட்டுக் கொடுக்கும் ஒரு சாதனமாகவே நிறுவப்பட்டுள்ளன. இவ்வகையில் அவை புலம் பெயர்ந்த தமிழரின் பண்பாட்டுத் தனித்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன. இந்த ஒரு காரணத்திற்காகவே அவற்றின் சாதனையை ஓரளவு மதிப்பீடு செய்வது அவசியமாகின்றது.

இது விடயத்தில் முதற்கண் குறிப்பிட வேண்டியது அவை எவ்வளவு தான் திறமையுடன் இயங்கினாலும் ஒரு சமுதாயத்தை இத்தகைய சங்கங்களும் மன்றங்களும் முற்றாகப் பதிலீடு செய்ய முடியாதென்பதேயாகும். பொதுவாகத் தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையிற் செறிந்து வாழும் பகுதிகளில் அவை கூடியளவு அர்த்தத்துடன் இயங்குவதாகவும் அவ்வாறில்லாவிடில் அவற்றின் இயக்கமும் மழுங்கியே காணப்படுமென்றும் கூறலாம். அடுத்தது அவை இயங்குகின்றன என்பதே தமிழ்ப் பண்பாடு ஓர் அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ள தென்பதற்கான ஒர்அறிகுறியாகும். ஏனெனில், மக்கட் கூட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவினர் எந்த மட்டத்திலாவது தம்மை ஒன்று திரட்டி ஏதாவது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களுக்காவோ அமைப்பு ரீதியாக இயங்குகின்றனரென்றால் அந்த நோக்கம் ஃ நோக்கங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன என்பதே கருத்தாகும். ஆகவே இத்தகைய வரையறைகளைக் கணிப்பிற் கொண்டு தான் அவற்றின் பங்களிப்பையும் நோக்க வேண்டும்.

பண்பாடு தொடர்பாக அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் மதம்சார் அலுவல்கள், ஒப்பீட்டு ரீதியாகக் கூடியளவு வெற்றியளித்துள்ளன என்றே கொள்ளலாம். அதற்கான காரணங்கள் தெளிவானவை. சுருக்கமாகக் கூறுவதாயின் “மதம் ஓர் அபின்” என்ற மாக்சின் கூற்றையே நினைவு கூர வேண்டும். மரபு ரீதியாகவே தமிழ் மக்கள் தம் மதங்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் என்பது மாத்திரமன்றி, அவசர கண்காணிப்புக்குட்பட வேண்டிய பல சமூக ரீதியான பிரச்சினைகளின் மத்தியிலும் மத அலுவல்களின் பால் அணிதிரண்டு அவற்றுக்கு மேலதிக முக்கியத்துவமளிக்கக் கூடியவர்களென்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது. புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் இந்தத் தன்மை மேலோங்கியுள்ளமை எவரது கவத்தையும் ஈர்க்கக் கூடியதொன்றாகும். அதனால், நாம் முன் கூறிய தமழ்மொழி பற்றிய வரையறையின் மத்தியிலும் மத வைபவங்களைக் கருவாகக் கொண்ட விழாக்களும். கொண்டாட்;டங்களும் அவற்றை இடப்படுத்தக் கூடியவகையில் ஆலயங்களை நிர்மாணிப்பதும் புலம் பெயர் தமிழரின் பண்பாட்டுத் தனித்துவத்தின் பிரதான அம்சங்களாகத் திகழ்கின்றன.

மதத்தைவிட்டுத் தமிழ்ப் பண்பாட்டின் கலை வடிவங்களை முக்கியமாக எடுத்துக் கொள்வோமாயின், நாடகம், பரதம், இசை போன்ற பலவும் தமிழ்ச் சங்கங்களின் அனுசரனையுடன் ஆக்கம் பெற்றாலும் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட “உறைவு” நிலைக்குட்பட்டவையாக, அந்த முத்திரையுடனேயே வெளிவருவதாகக் கூறலாம். அதாவது, அவை யாவுமே தாய்ச் சமூகத்திலிருந்து தமிழ் மக்கள் விடுபட்ட கட்டத்தில் எந்தத் தரத்திலிருந்தனவோ அந்தத் தரத்திலிருந்து அதிகளவு து}ரத்துக்கு முன்னேறவில்லை. புதிய அணுகுமுறைகளையோ உத்திகளையோ அவற்றிற் காண்பதரிது. நவீனமயமாக்கப்பட்ட தொழில் நுட்ப வசதிகளின் சு10ழலிலேயே அவை உருவாகினாலும் அதன் செல்வாக்கு ஆக்கங்களின் தரத்திற் பெருமளவுக்குப் பிரதிபலிக்கவில்லை. புலம் பெயர் மட்டத்திற் களத்துக்குக் களம் வேறுபாடுகளைக் காட்ட முடிந்தாலும் பொதுவாக இந்த நியதிக்குட் பட்டனவாகவே படைப்புக்கள் பலவும் விளங்குகின்றன. இவற்றோடு நாம் குறித்த தமிழ்மொழிப் பாவனை பற்றிய வரையறையும் சேரும் போது அவற்றின் தரம் மேலும் அறிமுகப்படுவதற்கே காலாகின்றது. எனினும், இவை தமிழ்ப் பண்பாட்டின் புலம் பெயர் பரிமாணத்தின் வாழ்வாதார முயற்சிகள் என்பதுடன் அவற்றின் கரு பல சமயங்களில் தாய்ச் சமூக மட்டத்திலிருந்தெழும் பிரச்சாரத்தின் பாற்பட்ட சில தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் சாத்தியப்படுத்துகின்றன வென்பதிற் சந்தேகமில்லை.

கலைவடிவங்களில் நவீன உத்திகளைக் கையாள்வதென்பது ஒருவகையில், இந்தச் சங்கங்களின் அங்கத்துவ அமைப்பின் செயற்பாடே யாகும். அங்கத்துவ அமைப்பு, மறுபுறம், வௌ;வேறு களங்களிற் குடியேறிய தமிழ் மக்களின் தனிப்பட்ட கல்வியின் தன்மை, தராதரம், திறமை, தொழிலனுபவம் என்பவற்றைப் பொறுத்ததேயாகும். எல்லா வற்றுக்கும் மேலாகப் பண்பாட்டு மேம்பாடு என்பது சமூக-பொருளாதார அபிவிருத்தியுடன் நெருக்கமாக இணைந்ததொன்றே. அபிவிருத்தி மட்டம் உயருமிடத்துப் பண்பாடும் அதன் கலை வடிவங்களும் உயர்ந்த தரத்தை எட்டும். ஆனால், தமிழ் மக்கள் பாரிய அளவிற் புலம் பெயர்வது சமூக – பொருளாதார, அரசியல் நெருக்கடிகளின் ஒரு விளைவாயிருக்குமிடத்து நவீனமயமாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டினை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் பொருளாதார நலன்களின் மேம்பாடு கருதிக் குடியேறியோரும் இன்னமும் குடியேறுவோரும் பொருள் முதல் சார் வளங்களைப் பெற்றிருந்தாலும். அவர்களது முன்னேற்றம் பண்பாட்டின் மேம்பாட்டுக்குப் பெருமளவு அடிப்படையாயுள்ள சமூக விஞ்ஞான மானிடவியல் துறைகளைச் சார்ந்ததாயன்றி இயற்கை விஞ்ஞானத்தின் பாற்பட்டதாகவே காணப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட காரணிகளுடன் இதுவும் புலம் பெயர்ந்த தமிழரின் பண்பாட்டுத் தனித்துவம் எதிர்கொண்ட ஒரு மட்டுப்படுத்தற் காரணியாகச் செயற்பட்டது.

இவற்றுக்குப் புறம்பாகச் சங்கங்களின் மத்தியிலிருந்தே ஊற்றெடுத்த ஒரு நிறுவன மட்டக் காரணியும் அவற்றின் சாதனையைப் பாதித்ததென்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அதுவே சங்கங்கள் மத்தியில் தனிப்பட்ட காரணங்களின் வழி ஏற்பட்ட போட்டியாகும். இது போட்டி பூசல்களிலிருந்து இயல்பாகவே ஒதுங்கிக் கொள்ள விரும்புவோரைச் சங்கங்களிற் சேருவதினின்றும் தடுத்ததுடன் அவர்களிடமுள்ள திறமைகளின் வாயிலான அவர்களது பங்களிப்பையும் இல்லாமற் செய்துவிடக் கூடியதாயிருந்தது. இத்தகைய போட்டி, பொறாமை, பூசல்கள் என்பனவே, ஒரு தனி நிலையில், புலம்பெயர் தமிழரின் பண்பாட்டில் ஒரு விரும்பத்தகாத தனித்துவத்தைப் புகுத்த முனைந்தன வெனலாம்.

சங்கங்களிலிருந்து சுதந்திரமான வகையிலும் அவற்றின் அநுசரனையுடனும் புலம்பெயர்ந்த தமிழர் பண்பாட்டின் மற்றொரு தனித்துவ வளர்ச்சியாகக் குறிப்பிடத்தக்கது. வெகுசனத் தொடர்புச் சாதனங்களாகும். பத்திரிகை | சஞ்சிகை, வானொலி என்ற இரண்டுமே இதில் முன்னணி வகிக்கின்றன. இவற்றுடன் இணையம், இணையத் தளங்கள் என்ற கணினி சார் முன்னேற்றங்களையும் குறிப்பிட வேண்டும். இத்தகைய வளர்ச்சிக்குத் தமிழ் மக்களின் புலம் பெயர்வுடன் இணைந்த நேர்க்கணிய நன்மைகளுள் ஒன்றாக நாம் மேலே குறிப்பிடும் தொழில்நுட்ப முன்னேற்றம் பக்கபல மாயிருந்துள்ளது. தொடர்புச் சாதனங்களின் தரம், தவிர்க்க முடியாத வகையில் நாம் முன் கூறிய சில வரையறைக்குட்பட்டதாயினும், இருநிலைகளில் அவற்றின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று, உலகின் பல்வேறு களங்களிலும் சிதறிப் போயுள்ள தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் அவை பெரும் பங்காற்றுகின்றன. நாம் முன்னர் குறிப்பிட்ட தாய்ச் சமூகத்துடன் கொள்ளக்கூடியஉறவு துண்டிக்கப்பட்ட நிலையை இவை ஓரளவுக்கேனும் ஈடு செய்யக்கூடியவையாயுள்ளன. மற்றது, தமிழ் மக்கள் பற்றிய சமூக அரசியல் செய்தி; பரிமாற்றத்திற்கு அவை வகை செய்கின்றன. முக்கியமாக இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செய்தித் தணிக்கையின் மத்தியில், குறிப்பாக இணைய மூலமான தொடர்பாடல், வேண்டிய செய்திகளை உலகெங்கணும் பரந்துவாழும் தமிழ் மக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதில் மகத்தான சேவையாற்றுகின்றன.


  • நேர்க்கணிய அம்சங்கள்


இதுவரை கூறப்பட்டவற்றிலிருந்து புலம் பெயர்ந்த தமிழரின் பண்பாடு தனித்துவமான சில பண்புகளைக் கொண்டிருந்தாலும் அவை மட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டினை உயிர் பிழைக்க வைத்திருப்பதற்கும் பேணுவதற்குமான சவால்களாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன என்பது தெளிவானது. இத்தகைய சவால்களின் மத்தியில் புலம்பெயர்வின் நேர்க்கணியமானவையென அடையாளம் காணப்படக்கூடிய சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. அவற்றை முக்கியமாக இரு மட்டங்களில் அடையாளம் காண முடியும்.

முதலாவதாக, ஒரு சமநிலை மட்டத்தில் பண்பாடு பற்றிய பண்புகள் பலவும் தமிழரைத் தமிழராக எப்போதுமே இனம் காண்பதற்கு உறுதுணை புரிவனவாக உள்ளன. அவை தமிழர் பண்பாட்டின் தனித்துவத்தைத் தொடர்ந்து பறைசாற்றும் சின்னங்களாக விளங்கி அப்பண்பாடு அழிந்தோ அல்லது துர்ந்தோ போகும் ஒரு செய்முறைத் தோற்றம் பெறாது பாதுகாத்து வருகின்றன எனலாம். தமிழ்ப் பண்பாட்டின் ஆயுளை அகநிலை மட்டத்தில் இவ்வாறு கெட்டியாக்கிக் கொண்டபின், புலம்பெயர் களங்களிலேயே புறநிலையில் தமிழர் பண்பாடு சந்திக்கும் பல்வேறு சக்திகளும் பண்பாட்டினை மேலும் மெருகுபடுத்துவதற்குரிய வாய்ப்பினை வழங்குவதாயுள்ளன. அவ்வாறான சக்திகளே இரண்டாது மட்டத்தில் இனம் காணப்படுகின்றன. இவை சமூக, கல்வி – தொழில்நுட்ப ரீதியானவையாகப் பாகுபடுத்தப்பட முடியும்.

சமூக மட்டத்திலான முக்கிய நன்மையாகக் கருதப்படக் கூடியது தமிழர் பண்பாடு தன்னைத் திறந்ததொன்றாக்கி ஏனைய பண்பாடுகளுடன் இடையுறவு கொண்டமையினால் இப்பண்பாடுகளின் விழுமியங்கள் அல்லது பெறுமானங்கள் தன்னைப் பாதிக்கும் ஒரு நிலைக்குஆளாக்கிக் கொண்டமையாகும். இதன் மூலம் தமிழர் பண்பாடு இரு வகைகளில் பயனடைந்ததெனலாம். ஒரு புறம். தமிழ்ப் பண்பாட்டுடன் மோதிய பெறுமானங்கள் நன்கு அபிவிருத்தியடைந்த ஒரு சு10ழலிலிருந்து ஊற்றெடுத்த காரணத்தினால், அவை அதனை மேலும் மெருகுபடுத்துவதற்கு மாத்திரமன்றிக் குறைபாடுகளுக்கு இடம்கொடுக்க கூடிய சில தன்மைகளைக் களைந்து பண்பாட்டை மேலும் சீர்திருத்துவதற்கான வாய்ப்பையும் அளித்தன எனலாம். மறுபுறம். இவ்வாறான பெறுமான மோதல்கள் தமிழ்ப் பண்பாடு தனது வலிமையையும் சக்தியையும் மறு பரிசோதனை செய்துகொள்வதற்கான ஓர் உரைகல்லாகவும் அமைய முடிந்தன. பல்வேறு கோணங்களிலிருந்தும் களங்களிலிருந்தும் எற்பட்ட பாதிப்புக்களின் மத்தியிலும் தமிழர் பண்பாடு தனது சிறப்பினை வெளிப்பிடுத்தி மேலோங்கி நிற்பதற்கும் அதன் தனியாள்மையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டுவதற்கும் விழுமிய மோதல்கள் தொடர்ந்து துணை புரிந்தவண்ணமுள்ளன.

சமூக பெறுமானங்களைப் பாதிக்கக் கூடிய ஒரு முக்கிய அம்சமாகச் சுட்டப்படத்தக்கது பெறுமானங்களுக்கான அடிப்படைத் தர்க்க ரீதியான அணுகுமுறையாக அமைவதாகும். அதன் மூலம் தமிழர் பண்பாட்டிற் குறிப்பாக மதத்தின் வழி இடம் பிடித்துக் கொண்டிருக்கும் (மூட) நம்பிக்கை களின் பாற்பட்ட இயல்புகளைத் திரும்பவும் பரீட்சித்து அவற்றில் களையவேண்டியவற்றைக் களைந்து தக்கவைக்க வேண்டியவற்றைத் தக்க வைக்கும் ஒரு செய்முறை தானாகவே இயங்க முற்படுமெனலாம். அதன் வழி தமிழர் பண்பாட்டின் சாபக்கேடாக நீண்ட காலமாகவே இருந்து வரும் சாதி முறைமை படிப்படியாகப் பலமிழப்பதற்கு வாய்ப்புகள் பெருகுமென எதிர்பார்க்கலாம். இதே அலைவரிசையில் இன்னொரு முக்கிய மாற்றமாகக் கணிக்கப்படக் கூடியது (தமிழ்ப்) பெண்களின் நிலை பற்றியதாகும். புலம்பெயர் தமிழர் பண்பாட்டில் பெண்களின் நிலை ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாகவோ அதற்கும் மேலாகவோ கூடச் சென்றிருப்பதாகக் கூறலாம். எவ்வகையில் நோக்கினும் இது தனித்துவம் வாய்ந்தது மாத்திரமன்றிப் பெரிதும் புரட்சிகரத் தன்மை பொருந்தியதொன்றுமாகும். இதனோடு கூடவே சமூக ரீதியாகப் பெண்களைப் பிணைத்து வைத்துள்ள சீதன முறைமை போன்றனவும் படிப்படியாக அற்றுப் போகுமென எதிர்பார்க்கலாம். இவ்வாறு கூறுமிடத்துத் தமிழ்ப் பண்பாட்டின் இத்தகைய சில சாபக்கேடுகள் புலம்பெயர் களங்களுக்கும் பரவியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும், புலம் பெயர் மட்டத்தில் இரண்டாவது தலைமுறையொன்று உருவெடுக்கும் போது இவை பெருமளவுக்கு வலுவிழந்து போய்விடு மெனலாம். அதே நேரத்தில் ஏனைய சமூகங்களுடனான கலப்புத் திருமணங்கள் அதிகரிப்பதற்கும் தமிழ்ச் சமூகங்களுடனான கலப்புத் திருமணங்கள் அதிகரிப்பதற்கும் தமிழ்ச் சமூகத்தின் து}ய்மை நிலை பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு. 

இதேபோன்று கல்வி-தொழில்நுட்ப மட்டத்திலும் பல முன்னேற்றகரமான மாற்றங்களை அவதானிக்கலாம். இவையும் சமூகப் பெறுமானங்களின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. தமிழ்மக்களின் மரபு ரீதியாக அக்கறை கொள்ளும் மருத்துவம், பொறியியல் துறைகளுக்குச் சார்பாகவும் அவற்றுக்குப் புறம்பாகவும் இந்த மாற்றங்களை இனம் காணலாம். அவற்றுட் குறிப்பிட்டுக் கூறுவதாயின் கணினித் துறையில் நம்மவர் ஈட்டியுள்ள வியத்தகு முன்னேற்றங்களைச் சுட்டலாம். இவை வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் வழி தமிழர் பண்பாட்;டைச் செல்வாக்கினுக்குப்பட்டுத்துவது பற்றி ஏற்கனவே எடுத்துக் காட்டப்பட்டது. இத்தகைய சாதனைகளின் மத்தியிலும் சமூக விஞ்ஞானத் துறை பொறுத்த அக்கறை குறைந்த நிலையும் கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இது புலம் பெயர் களங்களில், தமிழ் மக்கள் ஒரு முழுச் சமூகம் என்ற வகையில் தாய் மண்ணில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளைச் சரியான முறையி;ல் விளங்கிக் கொள்வதையும் அவற்றின் மத்தியிலேயே எதிர்நோக்கப்படும் சமூகச் சவால்களை எதிர்கொள்வதையும் பெரிதும் கடினப்படுத்துகின்றது. இவ்வாறான சமூக விஞ்ஞான நோக்கின் மட்டுப் படுத்தப்பட்ட தன்மையே புலம் பெயர் தமிழர் பண்பாட்டின் ஒர் அகநிலைத் தனித்துவமாகத் தான் தென்படுகின்றது. ஆனால், அது பண்பாட்டின் சிறப்பு முழுமை பெறுவதை ஒரளவுக்காவது தடுக்கின்ற தென்பதும் உண்மையேயாகும்.


  • பண்பாடும் தாய்ச் சமூகமும்


புலம் பெயர்ந்த தமிழரின் பண்பாட்டில் இவ்வாறாகத் தனித்துவத் தன்மை வாய்ந்த மாற்றங்கள் இடம் பெற்று வரும் அதேவேளை இலங்கையில் இடப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் தாயச் சமூகம் மாற்றங்களுக்குட்படாது தேங்கிய நிலையிலிருப்பதாக எவ்வகையிலும் கருதக்கூடாது. புலம் பெயர் களத்திலான மாற்றங்கள் தாய்ச் சமூகத்திலான மாறுபாடுகளின் பிரதிபலிப்பே என்பதையும் மறுப்பதற்கில்லை. இலங்கைத் தமிழர் சமூகமானது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல கொந்தளிப்புகளை எதிர்நோக்கியவிடத்து அவற்றின் கூர்மையும் செறிவும் இதுவரை நிலவியிருந்த சமூகத்தின் பெறுமானங்களையும் பண்பாட்டின் கோலங்களையும் பரதரப்பட்ட வகையிற் பாதிக்கக் கூடியனவாயிருந்தன. அத்தகைய மாற்றங்கள் தனியான ஒர் ஆய்வு அணுகுமுறையை வேண்டி நிற்பன. இவை இதே ஆசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஊhயபெiபெ ளுஉநயெசழைள ழக வுயஅடையைn ஊரடவரசந : ளுழஅந வாழரபாவள ழn வாந ஊரடவரசயட னுiஅநளெழைளெ ழக வாந நுவாniஉ றுயச in ளுசi டுயமெய’ (யுளயைn நுவாiniஉவைலஇ ஏழடரைஅந 2இ ழே. 1இ ஆயசஉh 2001இ pp. 35-54) என்ற கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன. ஆகவே, அவற்றை இங்கே மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேனும் எடுத்தியம்புவது அசாத்தியமானது. எனினும், அவற்றின் நன்மை பொறுத்த ஓரிரு அம்சங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட வேண்டும்.

அவற்றுள் முக்கியமானது, புலம் பெயர் மட்டம் போன்றன்றித் தாய்ச் சமூகம் தொடர்ந்தும் இறுக்க நிலையைப் பேணிநின்ற காரணத்தினால் சமூக ஊடாட்டங்களே மாற்றங்களுக்குக் காலாயின. எனினும், இந்த ஊடாட்டங்கள் நெருக்கடிகள் மிகுந்த போர்ப் பின்னணியொன்றில் நிகழ்ந்த காரணத்தினால் ஒர் அசாதாரணத் தன்மையை அவை ஏற்பது தவிர்க்க முடியாததாயிற்று. அதன் விளைவாக இக்கால கட்டத்தில் இடம் பெற்ற மாற்றங்களே தனித்துவத் தன்மை பெற்றிருந்ததுடன், பல சந்தர்ப்பங்களில், நேர்க்கணியத் தன்மை பெற்றிருந்ததுடன், பல சந்தர்ப்பங்களில், நேர்க்கணியத் தன்மை பொருந்தியவையாகவும் விளங்கியிருந்தன. எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடுவதாயின் பெண் பேராளிகளின் தோற்றம் உட்பட்ட பெண் நிலை வாத மாற்றங்களைக் குறிப்பிடலாம். ஆகவே, தமிழர் பண்பாடு அகநிலை மட்டத்திலும் பெரிதும் இயக்கத் தன்மையுடையதொன்றாகவே காணப்படுகின்றது. இந்த இயக்கத் தன்மை தமிழர் பண்பாட்டின் கலைவடிவங்களுக்கும் விரிந்து சென்று அவற்றையும் மாற்றங்களுக்குட்படுத்தியுள்ளன.

சுதேசிய மட்டத்திலான இந்த வளர்ச்சிகளை இங்கு குறிப்பதற்குக் காரணம் யாதெனில் தமிழர் பண்பாட்டிலான மாற்றங்கள் அகநிலை, புறநிலை என்ற இரு பரிமாணங்களில் எங்கு நிகழ்ந்தாலும் பண்பாட்டின் முழுமைத் தன்மையை நாம் மறந்துவிடலாகாது என்பதனாலேயாகும். அதாவது, புலம்பெயர்ந்த தமிழரின் பண்பாட்டைத் தனிநிலையில் வைத்து, அவற்றின் தனித்துவத் தன்மைகளின் மத்தியிலும், நோக்கமுடியா தென்பதேயாகும். இன்றைய கட்டத்தில் அகநிலை, புறநிலை என்ற இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றே காணப்படுகின்றன. இதன் கருத்து, ஏதோ ஒரு கட்டத்தில் தமிழர்பண்பாட்டின் இரு பரிமாணங்களும் ஒன்றிணையும் ஒரு நிலை உருவாகுமென்பதேயாகும். 


  • முடிவுரை


நாம் இதுவரை கூறியவற்றிலிருந்து புலம் பெயர்ந்த தமிழரின் பண்பாடு அவதானிக்கப்படக் கூடிய தனித்துவத் தன்மைகள் சிலவற்றைக் கொண்டுள்ளதென்பதும் அவை நல்லதும். தீயதும் சேர்ந்த ஒரு கலவை என்பதும் புலனாகின்றது. அதே நேரத்தில் இந்தப் பண்பாட்டின் தோற்றத்திற்குத் தாய்ச் சமூகம் எதிர்நோக்கிய அரசியல், பொருளாதார நெருக்கடிகளே காரணமாயமைந்தன என்பதும் தொடக்கத்திலேயே உணர்த்தப்பட்டது. அதே நெருக்கடிகள் புலம் பெயர் தமிழரின் பண்பாட்டைத் தாய்ச் சமூகத்திலிருந்து துண்டிக்கும் சக்தி பெற்றிருந்தாலும் இது ஒரு தற்காலிக நிலையென்பது வலியுறுத்தப்பட வேண்டும். மறுபுறம், தமிழர் பண்பாட்டின் அகநிலை, புறநிலை என்ற இரண்டிலும் சில நேர்க்கணிய வளர்ச்சிகளை அவதானிக்கவும் முடிகின்றது.

ஆகவே, இவற்றைக் கொண்டு பார்க்குமிடத்துத் தமிழர் சமூகம் தற்போது அநுபவித்து வரும் அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து அதன் பண்பாடு ஒருமுகப்பட்டு வளர்ச்சியடையும் நிலை தோன்றும் போது பண்பாடானது ஓர் உயர்ந்த தரத்தினை அடைவதற்கான சாத்தியக் கூறுகள் மிகையாகவே தென்படுகின்றன. அதற்கான தகுந்த அடிப்படை அரச மட்டத்திலிருந்து அமைப்பு ரீதியாகக் கிடைக்கக் கூடிய பக்க பலமேயாகும். அவ்வாறானதொரு நிலை அரசியல் தீர்வொன்றின் வழி தோன்றும் வரை புலம் பெயர்ந்த தமிழர் பண்பாட்டுப் பரிமாணமொன்று தொடர்ந்திருக்கவே செய்யும். எனினும், இது ஒரு தற்காலிக நிலையேயன்றி வேறில்லை. அந்த நிலை மறையும் போது அகம், புறம் என்ற இரண்டும் ஒன்றிணைந்து தமிழர் பண்பாடு அதன் சிகரத்துக்கே எடுத்துச் செல்லப்படுமென்பதிற் சந்தேகமில்லை.

2 கருத்து:

  1. வெல்ல முடியாத ஒன்று நம் தமிழ் பண்பாடு.

    பதிலளிநீக்கு
  2. What's the coolest thing you've done with Python?
    If you want to more details to contact us: #LoginForExcellence, #PythonTraininginChennai,#PythonTrainingInstituteinChennai,#PythonTraininginVelachery,#TraininginVelachery,

    பதிலளிநீக்கு

 
Top