கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கதிர்புரம் கொல்லாகொட்டாயை சேர்ந்தவர் பவுன்ராஜ் (35). வேன் டிரைவர். இவரது மனைவி வேடியம்மாள் (30). இவர்களுக்கு சவுமியா என்ற மகளும், கோகுல் என்ற மகனும் உள்ளனர்.
பவுன்ராஜின் உறவினர் கால்வே அள்ளியை சேர்ந்த சந்திரன் (25). இவர் தாசம்பட்டி கூட்ரோட்டில் இருசக்கர மெக்கானிக்காக வேலைப்பார்த்து வருகிறார். பவுன்ராஜின் வீட்டிற்கு உறவினர் என்பதால் சந்திரன் அடிக்கடி சென்று வந்தார்.
இந்நிலையில் பவுன்ராஜ் டிரைவர் என்பதால் பல முறை வெளிஇடங்களுக்கு சென்று விடுவார். அந்த நேரத்தில் அங்கு செல்லும் சந்திரனுக்கும், பவுன்ராஜின் மனைவி வேடியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கணவன் வீட்டிற்கு வராத ஏக்கத்தில் இருந்த வேடியம்மாளுக்கு சந்திரனின் தொடர்பு சந்தோசத்தை கொடுத்தது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தனர்.
மேலும் சந்திரன்- வேடியம்மாளின் கள்ளக்காதலுக்கு வேடியம்மாளின் தாய் சின்னவள் (50)-ம் உடந்தையாக இருந்து உள்ளார். பவுன்ராஜ் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரும் சந்திரன், வேடியம்மாளுடன் கணவன்-மனைவி போலவே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஒரு நாள் வேடியம்மாள்-சந்திரன் ஆகியோர் உல்லாசமாக படுக்கையில் இருந்ததை பவுன்ராஜ் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டார். அப்போது ஊரில் உள்ளவர்கள் வேடியம்மாளை எச்சரித்து இனி இது போல் நடக்க கூடாது என்று சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் சந்திரனுடன் உள்ள தொடர்பை வேடியம்மாவால் விடமுடிய வில்லை. ஆனால் இதற்கு கணவர் இடையூறாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்தார்.
இதுப்பற்றி வேடியம்மாள் தனது தாய் சின்னவளுடன் பேசினார். பின்னர் வேடியம்மாள், சின்னவள், கள்ளக்காதலன் சந்திரன் ஆகியோர் சேர்ந்து பவுன்ராஜை தீர்த்து கட்ட முடிவு செய்து அதற்காக நேரம் பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுன்ராஜ் தனது மாமியார் சின்னவளிடம் தனக்கு பணம் தேவைப்படுகிறது. தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி தருமாறு கேட்டிருக்கிறார். இதை சாதகமாக்கி கொண்டு அவர்கள் பவுன்ராஜை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2-ந் தேதி சின்னவள், பவுன்ராஜிடம் ஒருவர் பணம் தருவதாக கூறியுள்ளார். வா நாம் போய் வாங்கி வரலாம் என்று கூறியிருக்கிறார்.
இதை உண்மை என நம்பிய பவுன்ராஜ், தனது மோட்டார் சைக்கிளில் மாமியார் சின்னவளை ஏற்றிக் கொண்டு சென்றார். அவர்கள் கோட்டாபுரம் அருகே ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சின்னவள் திடீரென வண்டியை நிறுத்து இங்கு தான் அவர்கள் வருவதாக தெரிவித்தனர் என்று கூறினார்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளை விட்டு அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அங்கு மறைந்து இருந்த சந்திரன், வேடியம்மாள் ஆகியோர் திடீரென உருட்டுக்கட்டையால் பின் பக்கமாக பவுன்ராஜை தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து சந்திரன், வேடியம்மாள் ஆகியோர் தூக்கி போட்டனர். இதில் முகம் சிதைந்த நிலையிலேயே பவுன்ராஜ் அங்கேயே பலியானார்.
பின்னர் பிணத்தை அருகில் இருந்த புதர் பகுதியில் வீசினர். மேலும் போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் துப்பு துலக்காமல் இருக்கும் வகைளில் மிளகாய் பொடியையும் தூவினர். பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டனர். இங்கு வந்ததும் சந்திரனும், வேடியம்மாளும் ஜாலியாக இருந்து உள்ளனர்.
இந்நிலையில் பவுன்ராஜின் அண்ணன் பெரியசாமி என்பவர் காவேரிப்பட்டணம் போலீசில் தனது தம்பியை காணவில்லை என்று புகார் செய்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கோட்டாபுரம் பகுதியில் ஒருஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பவுன்ராஜின் அண்ணன் பெரியசாமியை அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். அப்போது அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தனது தம்பி பவுன்ராஜ் தான் என்று அடையாளம் காட்டினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் சந்திரன், வேடியம்மாள், சின்னவள் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக