டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த 23 வயது மருத்துவ மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது. மாணவியின் உடலுடன் சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்ட விமானம், அதிகாலை 3.30 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
டெல்லிக்கு வந்த சில மணி நேரத்தில் பலத்த பாதுகாப்புடன் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மாணவி வசித்த டெல்லி மஹாவீர் என்கிளைவு பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கடும் பனி மூட்டத்துக்கு இடையே நடந்த உடல் தகனம் நிகழ்ச்சியில் ஆர்.பி.சிங். பங்கேற்றார். மாணவியின் உடல் தகனத்தின்போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாணவியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடந்த 16ஆ் திகதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில், ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த போது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர்.