புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சி மீது புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200
ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

அந்த இடங்களை மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர மாநில விவசாயிகளுக்கு விற்றுவிட்டனர்.

நாளடைவில் விவசாயப் பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் ஆந்திர மாநில விவசாயிகள் அந்த இடங்களை நடிகர்கள் மற்றும் தனியார்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டனர்.

தற்போது நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சி உள்பட 19க்கும் மேற்பட்ட வெளியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் சிலர் அரசு புறம்போக்கு இடம் சுமார் 130 ஏக்கரில் தனித்தனியாக மா, தேக்கு மற்றும் தென்னை தோப்புகள் அமைத்து பண்ணை வீடுகளாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புஷ்பகிரி பகுதியில் விசாலாட்சி உள்பட 19 பேர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 60 ஹெக்டேர் பரப்புள்ள அரசு புறம்போக்கு இடங்களை வரும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என படப்பை வருவாய் துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஆனால் இந்த ஆக்கிரமிப்பானது இன்று நேற்று நடந்து வருவதல்ல என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

கடந்த 50 வருடமாகவே பலரும் இந்த நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை இருந்த அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கையே எடுத்ததில்லை.

மிகவும் தாமதமாக இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக வடிவேலு மனைவி உள்ளிட்டோர் மீது வழக்கு பாயுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
 
Top