புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி, உயிரிழந்த எனது மகளின் பெயரை பகிரங்கமாக தெரிவிக்கிறேன். இதை உலகம் அறிந்து கொள்ளட்டும். எனது மகளைப் போன்று பாதிக்கப்பட்டு உயிர் வாழ்ந்து வரும் இந்தியப் பெண்களுக்கு இது உத்வேகமாக
இருக்கட்டும்.இதை பெருமையுடன் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் டெல்லி பலாத்காரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்ணின் தந்தை.

டெல்லியில் ஓடும் பஸ்சில் தனது ஆண் நண்பருடன் பயணித்த இளம் பாரா மெடிக்கல் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சீரழித்து சாலையில் போட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த 23 வயது மாணவி பின்னர் இரண்டு வாரம் உயிருக்குப் போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை சட்டத்திற்குட்பட்டு காவல்துறையும், அரசும் வெளியிடவில்லை. ஆனால் அவரது பெயரை வெளியிட வேண்டும், அவரைக் கெளரவப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மத்திய இணை அமைச்சர் சசி தரூரும் இக்கோரிக்கையை வைத்தார். மேலும் புதிய திருத்தப்பட்ட கற்பழிப்பு குற்றத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்த நிலையில் அப்பெண்ணின் தந்தை தற்போது தனது மகளின் பெயரை பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக லண்டனைச் சேர்ந்த தி சண்டே பீப்பிள் என்ற பத்திரிகைக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தனது மகளின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேட்டியில் அவர் கூறுகையில், எனது மகளின் உண்மையான பெயரை உலகம் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன். எனது மகள் எந்தத் தவறும் செய்யவில்லை. தன்னைப் பாதுகாக்கப் போராடி அவர் உயிரிழந்துள்ளார். அவளுக்காக நான் பெருமைப்படுகிறேன். அவரது பெயரை வெளியிடுவதன் மூலம் அவளைப் போல பாதிக்கப்பட்டு, உயிர் மீண்டு வாழ்ந்து வரும் பெண்களுக்கு தைரியம் கிடைக்கும், புது நம்பிக்கை பிறக்கும் என்று நம்பகிறேன். எனது மகள் கடைசி வரை நம்பிக்கையோடும், தைரியத்தோடும் போராடினாள் என்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், எனது மகளை சீரழித்த ஆறு பேரையும் தூக்கில் தொங்க விட வேண்டும். அதற்குக் கீழான எந்தத் தண்டனையையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஆறு பேரும் சாக வேண்டும். அதை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் மனிதர்களே அல்ல, மிருகங்கள். இவர்களைப் போன்ற மிருகங்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க இந்த ஆறு பேரையும் சாகடிக்க வேண்டும் என்றார் கோபத்துடன்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top