கணவனின் தம்பியை அடைய, தனது காதல் கணவனையே கொன்றுவிட்டு, நகைக்காக கொன்று விட்டார்களே என்று அழுது புலம்பிய மனைவியொருவரின் கபட நாடகம்
அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தின், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள முனியனூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள நாச்சிமுத்துபுரத்தை சேர்ந்த யமுனாதேவி (24) என்பவரை, 5 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கோகுல் (4) என்ற ஆண் குழந்தை உள்ளது. கார்த்திகேயனுக்கு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் வெல்டர் வேலை கிடைத்ததால், மனைவியுடன் நாச்சிமுத்துபுரத்தில் வசித்து வந்தார்.
கடந்த 12ஆம் திகதி காலை வேலைக்கு போன கார்த்திகேயன், அன்று இரவு முழுவதும் வீடு திரும்பாததால், யமுனாதேவி தன்னுடைய உறவினர்களிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மறுநாள் காலை பெருந்தலையூர் பவானி ஆற்றங்கரையில் கார்த்திகேயன் உடலில் பல இடங்களில் இரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
கார்த்திகேயன் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் 12ஆம் திகதி இரவு 9 மணி முதல் கார்த்திகேயனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
கார்த்திகேயனின் செல்போன் எண்ணுக்கு சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில், அவருடைய சித்தப்பா மகன் சரவணன் என்பவர் பேசி இருப்பது தெரியவந்தது.
அதனால் அவரை பிடித்து பொலிசார் விசாரணையை தொடங்கினர். அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கார்த்திகேயனின் சித்தப்பா மகன் நாமக்கல் மாவட்டம் சமயசங்கிலியை சேர்ந்த சரவணன் என்கிற ஜெகநாதன் (24). ஈரோட்டில் மினி ஆட்டோ டிரைவராக இருந்தார்.
அவர் அண்ணன் கார்த்திகேயனை பார்ப்பதற்காக அடிக்கடி நாச்சிமுத்துபுரம் வந்து செல்வது வழக்கம். அப்போது, சரவணனுக்கும், யமுனாதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.
கார்த்திகேயன் வேலைக்கு சென்ற பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் சரவணனின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்து வந்தனர்.
இதை கேள்விப்பட்ட யமுனாதேவி ´நீ யாரையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. என்னை வேண்டுமானால் திருமணம் செய்துகொள்´ என்று கூறியுள்ளார்.
´உன் கணவர் உயிருடன் இருக்கும்போது, நான் எப்படி உன்னை திருமணம் செய்துகொள்ள முடியும்´ என்று சரவணன் கூறியுள்ளார். அதற்கு யமுனாதேவி, கவலைப்படாதே நமக்கு இடையூறாக இருக்கும் என் கணவரை தீர்த்துக்கட்டி விடலாம் என்று கூறி அதற்கான திட்டமும் போட்டுக் கொடுத்துள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் சரவணன், கார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டு, ´இன்று என் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள். ஆற்றங்கரைக்கு வா மது விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்´ கூறியுள்ளார்.
அதை நம்பிய கார்த்திகேயன் வேலை முடிந்து இரவு எட்டரை மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு மது பாட்டில்களுடன் சரவணனும், அவருடைய நண்பர் ஈரோடு ஆர்.என்.புதூரை சேர்ந்த மினி ஆட்டோ டிரைவர் மோகன்குமாரும் (23) தயாராக இருந்தனர்.
கார்த்திகேயனுக்கு இருவரும் அதிக அளவில் மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளனர்.
மதுபோதையில் தள்ளாடிய கார்த்திகேயனின் தலையில் சரவணன் தயாராக வைத்திருந்த இரும்பு ராடால் அடித்தார். இதில் நிலைகுலைந்த கார்த்திகேயனை மோகன்குமாரும் சரவணனும் சேர்ந்து மதுபாட்டிலை உடைத்து முகம், கழுத்து, மார்பு என பல இடங்களில் குத்தியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் சரவணன் யமுனாதேவியின் வீட்டுக்கு வந்து, சொன்னபடி செய்துவிட்டோம் என்று கூறினார். இதைக்கேட்ட யமுனாதேவி வழக்கை திசை திருப்ப தன்னுடைய நகைகளையும், மோதிரத்தையும் கள்ளக்காதலனிடம் எடுத்துக்கொடுத்து விட்டார்.
சரவணன் நகையை பெற்றுக்கொண்டு நண்பருடன் ஈரோடு வந்துவிட்டார்.
கணவரின் உடலைப்பார்த்து யமுனாதேவி நகைக்காக யாரோ கொன்று விட்டார்களே?என்று அழுது புலம்பிய நாடகம் ஆடியதும் விசாரணையில் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து சரவணனையும், அவருடைய நண்பர் மோகன்குமாரையும், யமுனாதேவியையும் தனிப்படை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக