விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ளது ஆலங்குப்பம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கலியன் (52) என்பவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஆடு மேய்த்த போது திடீரென இறந்து கிடந்தார்.
மேலும் அவர் மேய்த்த ஆடும் இறந்து கிடந்தது. சுடுகாட்டில் சூனியம் வைத்த பொருட்களை கலியன் எடுத்து சாப்பிட்டதால் அவரும், ஆடும் இறந்து போனதாக தகவல் பரவியது.
இதன்பின்னர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன்கள் பசுமதி (22), சரோஜினி (25) மற்றும் பிரபா (18) சாரங்கம் என்பவரின் மகன் சுதாகர் (21), ராமச்சந்திரனின் மகள் பாரதி (17) ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்தும், உடல் நலக்குறைவாலும் இறந்து போனார்கள்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வந்த கவுசல்யா (13) என்ற மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 6 மாதத்தில் இபோல் எந்தவித காரணமின்றி 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (22) என்பவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவர் காணவில்லை. பின்னர் அவரைத் தேடிச்சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் பார்த்து உயிருடன் காப்பாற்றினர். இதுகுறித்து ஜெயச்சந்திரன் கூறும்போது தான் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு செல்லும் போது ஏதோ ஒரு உருவம் தன் கழுத்தில் கயிறு கட்டி இழுத்து சென்று மரத்தில் தூக்கு போட்டதாக கூறினார்.
இதே போல் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (45) என்பவரும் தனது வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.
நாற்காலி விழும் சத்தம் கேட்கவே அவரை அவரது குடும்பத்தினர் தூக்கில் இருந்து இறக்கி காப்பாற்றினர். அவரும் தற்கொலை முயற்சி மேற்கொண்டது குறித்து கேட்ட போது ஜெயச்சந்திரன் கூறியது போலவே அவரும் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவரவர்களின் வீடுகளில் உள்ள 15 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை ஊரைவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இரவு 7 மணிக்குமேல் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே அடைந்துவிடுகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக