புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒருதலை காதல் தகராறில் தம்பியை பழிவாங்குவதற்காக அவரது அண்ணனை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். செங்குன்றம் அருகே நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது. சென்னை அடுத்த செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகர் அன்னை இந்திரா தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரது மகன்கள் உதயகுமார் (24), வினோத் (20). இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். உதயகுமாருக்கு சமீபத்தில்தான் பெண் பார்த்து பேசி முடித்தனர். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த உதயகுமார், நள்ளிரவு 11 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டார்.

மொண்டியம்பாக்கம் திலகர் தெரு, சுப்பிரமணிய பாரதியார் தெரு சந்திப்பில் 2 பைக்குகளில் வந்த சிலர், உதயகுமாரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அந்த கும்பல் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியை எடுத்து உதயகுமாரை சரமாரியாக வெட்டியது. இதில் அவரது நெஞ்சு, கழுத்து பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் விழுந்து துடித்தார். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அலறல் சத்தம் கேட்டதும் அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே உதயகுமார் இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

உதயகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: உதயகுமாரின் தம்பி வினோத்துக்கு அவரது அத்தை மகளை திருமணம் செய்ய பேசி முடித்துள்ளனர். உதயகுமார் திருமணம் முடிந்த பிறகு, வினோத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே, இவர்களது அத்தை மகளை மொண்டியம்மன் நகரை சேர்ந்த தினேஷ் (21) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது தெரிந்ததும் தினேஷை வினோத் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, அடிக்கடி தகராறு செய்துள்ளனர். தம்பிக்கு ஆதரவாக உதயகுமார் பேசியுள்ளார்.

தனது காதலுக்கு தடையாக இருக்கும் வினோத்தை பழிவாங்க, அவரது அண்ணன் உதயகுமாரை கொல்ல தினேஷ் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தனது நண்பர்களான அன்பரசு (23), ரமேஷ் (26)ஆகியோருடன் சேர்ந்து நள்ளிரவில் தனியாக வந்த உதயகுமாரை வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ளனர் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய தினேஷ், அவரது நண்பர்கள் அன்பரசு, ரமேஷ் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஒருதலை காதல் பிரச்னையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top