புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனிதன் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாகப் போகும் உடல் உறுப்புக்களை தானம் செய்ய வலியுறுத்தும் உன்னதமான கதை.

படத்தில் ‘இதயத்தை’ தானம் கொடுக்க வைத்து நம் ‘இதயத்தை’ தொட்டு விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ஞாபகப்படுத்தும் கதைதான் ‘சென்னையில் ஒரு நாள்’. அழகான காதல், அன்பான அண்ணன், பாசமான கணவன், அருமையான குடும்பம் இப்படி ஆரம்பமாகும் படம் போகப் போக அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பை ஒரு சென்டிமென்ட் கதையில் ஏற்படுத்தியிருப்பது இதுதான் முதன் முறையாக இருக்கும்.

இயக்குனர் ஷஹித் காதருக்கு முதலில் அழுத்தமான ஒரு ‘ஷேக் ஹேன்ட்ஸ்’.

பல கனவுகள், லட்சியங்களுடன் வேலைக்கு முதல் முறையாகச் செல்லும் சச்சின் வழியில் விபத்தில் சிக்கி மூளை செயலிழந்து மரணத்தின் வாசலில் நிற்கிறார். அதே சமயம் இதயத்தில் உள்ள பிரச்சனையால் உயிர் வாழும் நேரத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜின் மகள்.

பலரின் வேண்டுகோளுக்குப் பிறகு மூளை செயலிழந்து இருக்கும் சச்சினின் இதயத்தை எடுத்து பிரகாஷ்ராஜின் மகளுக்கு பொருத்த சம்மதிக்கிறார்கள் சச்சினின் பெற்றோர். அதன் பின் சென்னையிலிருந்து வேலூருக்கு அந்த ‘இதயம்’ எப்படி பயணமாகிறது என்பதை துடிப்புடன் சொல்லிருக்கிறார்கள்.

படத்தில் இவர்தான் நாயகன், இவர்தான் நாயகி என யாரையும் தனித்து குறிப்பிட முடியாது. ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிருக்கு உயிரூட்ட பாடுபடும் பலரும் நாயகன், நாயகியரே.

சென்னை டூ வேலூர் 170 கி.மி, இந்த தூரத்தை 1.30 மணி நேரத்தில் கடக்க திட்டம் போடும் போக்குவரத்து ஆணையர் சரத்குமார், ஜீப்பை ஓட்டிச் செல்லும் போக்குவரத்து காவலர் சேரன், கூடவே டாக்டராகச் செல்லும் பிரசன்னா, இதயத்தைக் கொடுத்த சச்சினின் நண்பர் மிதுன், இவர்கள் மட்டுமல்லாது இவர்களுக்காக ஒத்துழைக்கும் அனைவருமே நம்மைப் பொறுத்தவரை இந்த படத்தின் ஹீரோக்கள்தான்.

ஒரு பக்கம் மகனை இழந்த பெற்றோரான ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன், மகன் சச்சின் இழந்த துக்கத்தைப் பொறுத்துக் கொண்டு மகனின் இதயத்தை தானமாகக் கொடுப்பதில் உயர்ந்து நிற்கிறார்கள். இவர்களை சம்மதிக்க வைக்கும் சச்சினின் காதலி பார்வதி அவர்களை விட உயர்ந்து நிற்கிறார்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், மகளைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படாத ‘பிஸியான நடிகர்.’ இவரின் மனைவி ராதிகா. மகள் சீரியஸாக இருக்கிறார் என்று தெரிந்தும் கூட வரும் வழியில் டிவிக்கு பேட்டி கொடுத்து விட்டு வரும் பிரகாஷ்ராஜைப் பார்த்து ராதிகா கேட்கும் கேள்விகளுக்கு திரையரங்கில் கைதட்டல் அதிருகிறது.

‘பேரும், புகழும் ஓய்ந்து வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்காரும் போது , அப்ப யாருமே எட்டிப் பார்க்க மாட்டாங்க, நாங்கதான் உங்க கூட இருப்போம்,” என சொல்வது உண்மையோ உண்மை. அசத்திட்டீங்க அஜயன் பாலா.

மல்லிகா, இனியா மற்றும் விஜயகுமார், சந்தானபாரதி, மனோபாலா கொஞ்சமாக வந்து போகிறார்கள். இருந்தாலும் கதையோட்டத்திற்கு முக்கியமான கதாபாத்திரங்கள்.

சரியான நேரத்தில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவின் ‘என்ட்ரி’.

மெஜோ ஜோசப்பின் இசையில் ‘திக் திக்’ நிமிடங்கள் இசையால் இன்னும் ஏற்றம் பெறுகிகின்றன. கதாபாத்திரங்களுடன் ஷேஹநாத் ஜே. ஜலால் கேமரா லாவகமாக பயணிக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பாக பயணிக்கும் படத்தில் மகேஷ் நாராயணணின் படத்தொகுப்பு அந்த விறுவிறுப்பை இன்னும் அதிகமாக்குகிறது.

“இந்த படத்தைப் பார்த்து , போக்குவரத்து சிக்னலில் ‘ரெட்’ சிக்னல் விழுந்தால் இரண்டு பேராவது அதை மீறிச் செல்லாமல் இருந்தால் போதும், அதுவே இந்த படத்துக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றி, நாம் கொடுக்கும் மரியாதை….”

‘சென்னையில் ஒரு நாள்’ – ‘கிரீன் சிக்னல்’…..

நடிகர்கள் : சரத்குமார்,சேரன்,பிரசன்னா,இனியா,ராதிகா

இயக்கம் : ஷாஹித் காதர்

இசை :மெஜோ ஜோசப்




இரண்டாம் இணைப்பு 

சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை சிறுமி அபிராமிக்கு பொருத்தி அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்".
ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் விபத்தில் சிக்குகிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலையில் ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.

தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார்.

இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற பொலிசார் அனைவரும் பின்வாங்கும்பொழுது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’

பொலிஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.

தானம் பெற்ற இதயத்தை வேலூருக்கு மின்னல் வேகத்தில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு மிகுந்த பொலிஸ் கார் டிரைவராக சேரன்.

பொலிசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதையே நினைத்து வருந்தும்போது அவர் முகத்தில் காட்டிய உணர்ச்சிகளை, பயங்கர வேகத்தில் காரை ஓட்டிச் செல்லும்போதும் காட்டியிருக்கலாம்.

செல்வாக்கு மிகுந்த நட்சத்திர நடிகராக பிரகாஷ்ராஜ், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவருடைய மனைவியாக ராதிகா. பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா ராதிகாதான்.

மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா.

மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில் படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.

விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டொக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள்.

கதையை அதன் போக்கில் நகர்த்தி செல்லும் அம்சங்களாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஷஹித் காதர்.

பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் மகள் இதய நோயாளி என்பதை ஆரம்ப காட்சிகளில் காட்டியிருக்கலாம் அல்லது உணர்த்தியிருக்கலாம்.

அதேபோல் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை, இன்னும் சிரத்தை எடுத்து படமாக்கியிருக்கலாம்.

மருத்துவமனையில் சச்சின் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், காதலி பார்வதி கலங்கிய கண்களுடன் அங்கு வருவதும், அவரை ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா பார்ப்பதும், சச்சின் இறந்தபின் பார்வதியிடம், ‘‘அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?’’ என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பதும், சோகமும் சுகமும் கலந்த கவிதை.

மொத்தத்தில் "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்"

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top