இந்திய சினிமாவில் மட்டும் காணப்படுகிற ஓர் அம்சம், கதைக்கு சம்பந்தமில்லாமல் வரும் காமெடி ட்ராக்.
லாஜிக்கிற்காக மெனக்கெடாமல் சிரிப்பதற்காக மட்டுமே வைக்கப்படும் பகுதி. சமீபமாக இந்த காமெடி ட்ராக்கையே கொஞ்சம் விரிவாக்கி முழுநீளப் படமாக எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதிலும் மூன்று வகையான படங்கள் உண்டு.
01) பார்க்க சகிக்காத ஒன்பதுல குரு போன்றவை.
02) சகித்துக் கொண்டு பார்க்கலாம் என்பவை இரண்டாவது வகை கலகலப்பு மாதிரி.
03) இரசித்துப் பார்க்கக் கூடிய பாஸ் என்கிற பாஸ்கரன் போன்றவை மூன்றாவது வகை.
இதன்படி பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா இரண்டாவது வகை.
ஒவ்வொரு புதுவருடத்துக்கும் இனி குடிக்க மாட்டோம் என்று சபதம் செய்துவிட்டு, விடிவதற்குள் ஆஃப் வேண்டாம் ஒரு ஃபுல் சொல்லு என்று ட்ராக் மாறும் ஒரு நண்பர் கூட்டம் தான், விமல், சிவ கார்த்திகேயன், சூரி மற்றும் இன்னொருவர்.
இந்த நான்காமவர் நான் மகான் அல்ல படத்தில் ஜெய்பிரகாஷை கொலை செய்யும் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதையும் ஞாபகப்படுத்தலாம்.
குடியும், பெற்றோர்களிடம் திட்டுமாக காலம் கழிபப்பவர் விமல், சிவ கார்த்திகேயனின் இலட்சியம் அரசியலில் பெரிய ஆளாக வேண்டும். இதற்காக முன்னாள் எம்எல்ஏ யின் அல்லக்கை வேலையை கச்சிதமாக செய்கிறார்கள்.
இந்தநிலையில் இருவரது வாழ்விலும் ஊடலுக்கு பின் காதல் குறுக்கிடுகிறது.
பெற்றோர்களால் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று பார்த்தால் அப்படியில்லை. அரசியல் பிரச்சினையால் ஏதோ ஆகப்போகிறது என்றால் அதுவுமில்லை. வெட்டியாக திரியும் புள்ளைக்காக அப்பா உயிர்த் தியாகம் செய்யும் தமிழ் சினிமாவின் இன்ஸ்டன்ட் டிகாஷனுடன் அரைகுறையாக முடிகிறது படம்.
எங்கே போகிறது நமது ரசனை? என்று படம் பார்ப்பவர்களை கேட்கவைக்கிறது திட்டவட்டமாக கதை என்று எதுவுமில்லை என்பதால் கேரக்டர்களின் கேனத்தனமான செயல்கள்தான் இயக்குனரின் டார்கெட்.
விமலின் காதலியாக வரும் பிந்து மாதவி விமலை பறந்து பறந்து அடிக்கிறார். அவரது குடும்பத்திலுள்ள பெண்களுக்கே கணவனை அடிப்பது பரம்பரை வியாதியாம். இது வடிவேலு, கோவை சரளா பலமுறை அரைத்த மாவு.
இதில் இரசிக்க வைப்பவர் பொண்டாட்டி பிள்ளைக்கு செலவு செய்ததை டயரியில் எழுதி வைத்து வட்டியோடு திருப்பி கேட்கும் டெல்லி கணேஷ். குடித்துவிட்டு குத்தாட்டம் எல்லாம் போடுகிறார்.
தூங்கி எழுந்த ´சுறுசுறுப்புடன்´ அதே வழக்கமான விமல். பறந்து பறந்து அடிக்கிறாடா என பம்மும் அவரது கேரக்டருக்கு அந்த நடிப்பு பொருத்தமாகவும் இருக்கிறது. சிவ கார்த்திகேயன் ஒருகாட்சியில் ரஜினி போலவே பேசுகிறார். அப்ளாஸ் அள்ளுகிறது. கறுப்பாக இருக்கிறார், களையாக சிரிக்கிறார், ஹீரோயினிடம் நன்றாக வழியவும் செய்கிறார்.
விமல், பிந்து மாதவி ஜோடியைவிட சிவ கார்த்திகேயன், ரெஜினா ஜோடியின் காதல் எபிசோட் பரவாயில்லை. மாமனார் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடும் சூரியின் கேரக்டர் மிகை கற்பனை என்றாலும் இடையிடையே அவர்விடும் கமெண்ட்கள் சிரிக்கிற ரகம்.
கிளைமாக்ஸை மனதில் வைத்து சிவ கார்த்திகேயனின் பெற்றோர்களின் கேரக்டரை மட்டும் ஓரளவு சின்சியராக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
பாடல்கள் எதுவும் பெரிதாக உறுத்தாதது ஆறுதல். இடைவேளைக்குப் பிறகு வரும் ஹைபிட்ச் டூயட்டில் சிவ கார்த்திகேயனின் நடன அசைவுகள் பாடலுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை.
இன்றைய வெகுஜன ரசனையை மனதில் வைத்து சரியாக அடித்திருக்கிறார் பாண்டிராஜ் ஜனங்களும் வஞ்சனையில்லாமல் சிரிக்கிறார்கள்.
படத்தில் சிரிப்பு இருக்கிறது, சென்டிமெண்ட் இருக்கிறது... பசங்க படத்தில் நம்பிக்கை தந்த பாண்டிராஜ் என்கிற இயக்குனரைதான் காணவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக