புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எல்லா மனிதர்களையும் ஆட்டிப் படைக்கும் ஒரு விஷயம், பயம். நாம் அனேக விஷயங்களில் தோற்றுப் போவதற்கு முக்கிய காரணங்களில் பயமும் ஒன்று. பயம் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் முட்டுக்கட்டை. அது முன்னேற்றத்தை காணாமல் போகச் செய்துவிடும். பேய் பிசாசு கதைகள் நமக்குள் ஏற்படுத்திய பயம் ஒருபக்கம். கவலை, முயலாமை, இயலாமை, இல்லாமை, வறுமை, மறுமை என பயமுறுத்தும் வேறுசில சங்கதிகள்
இன்னொரு புறம். இவற்றில் ஏதாவது ஒரு பயம், ஒவ்வொருவரையும் எப்போதாவது ஆட்டிப் படைக்கிறது. இவற்றை எதிர்கொள்வது எப்படி?

மனிதர்களை மிகவும் அதிகமாகப் பாதிப்பது, பணத்தைப் பற்றிய பயம் தான். `நாளைக்குப் பணம் கிடைக்குமா, கிடைக்கும் பணம் போதுமான அளவில் இருக்குமா, அதை வாங்கணும், இதை வாங்கணும், வேறு என்ன செய்தால் சம்பாதிக்கலாம்?` இப்படியே யோசித்துக் கொண்டு சந்தோஷத்தை இழப்பவர்கள் ஏராளம். எதிர்காலத் தேவைக்கான பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக பயத்தை மனதில் வளர்க்கக் கூடாது. அளவான அக்கறை வந்தால் போதும். கிடைக்கும் வருவாயில் சிறிது சேமியுங்கள், ஆத்திர அவசரத்துக்கு உதவும் நல்ல நண்பர்களையும் சேமித்துக் கொள்ளுங்கள். பண பயம் ஓடிவிடும்.

இளைஞர்களை வாட்டும் பயம், காதல் தோல்வி. `அவள் நம்மை விரும்புவாளா? என்பது ஆரம்ப கால பயமாக இருக்கிறது. அந்த பயம் நீங்கினால், `நம் காதலுக்கு அப்பா பச்சைக் கொடி காட்டுவாரா, தடைவிதிப்பாரா?` என்று அடுத்த பயம். இப்படி பயந்த மாதிரியே தோல்வி நேர்ந்து விட்டால், காதலித்தவர்களில் அதிகம் நேசித்தவரின் நிலை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. உண்மையில், காதலுக்கு ஒரு சக்தி உண்டு. அது அளவிட முடியாத பலத்தையும் தரும், அழிவுக்கு இழுத்துச் செல்லும் வெறிகலந்த பயத்தையும் தரும். காதலை சரியான மனநிலையுடன் எதிர்கொள்ளாதவர்களுக்கு தடைக்கற்களே ஏராளம். பயத்தை விடுங்கள், புதிதாய் காதலும், வாழ்வும் துளிர்க்கட்டும்.

தோல்வி பயம், பல வெற்றிகளையும், நிறைய சாதனைகளையும் முடக்கியிருக்கிறது. சந்தித்த தோல்விகளை அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பதும், முயலாமலே முடியுமா? என்று பயந்து பதுங்கிக் கிடப்பதும் வீழ்ச்சியையே தரும். பயம் மனதில் இருக்கும் வரை வெற்றி ஒரு எட்டாக் கனியே! தோல்வியில் பாடம் கற்கலாமே தவிர, பயம் தொற்ற அனுமதிக்கக் கூடாது. தோல்வி, வெற்றிப்பாதையை அடையாளம் காட்டும் அடிச்சுவடே தவிர வேறில்லை. பயத்திற்கு முக்கிய காரணம், ஒன்றைப் பற்றிய தெளிவின்மையே. எனவே தோல்விக்கும், பயத்திற்குமான காரணத்தை கண்டுபிடித்து தவிர்த்திடுங்கள். வெற்றி நிச்சயம்!

நினைத்ததைப் பேச முடிகிற, நினைப்பதைச் செய்ய முடிகிற சுதந்திரம் இருந்தால்தான் ஒருவரால் நிம்மதியாக இருக்க முடியும். சுதந்திரம் கிடைக்குமா, பறி போய்விடுமா? என்ற கவலையும், பயமும் நமது முன்னேற்ற இறக்கைகளை வெட்டி விடும். இந்தப் பயத்தைப் போக்க சுதந்திரம் கிடைக்கும் இடத்துக்குப் பறப்பதைத் தவிர வேறு வழியில்லை. உங்கள் எண்ணத்திற்கும், செயலுக்கும் சுதந்திரம் அளிப்பவர்களையே சார்ந்திருங்கள். `எனக்கு விதிக்கப்பட்டது இதுதான்’ என்று கூண்டுக்குள் அடைபட்டால், பறக்கும் பழக்கத்தையே மறந்துவிடும் பறவைபோல ஆகிவிடுவீர்கள்.

மற்றவர்கள் என்ன சொல்வார்களோ?என்று தயங்குவது நமது எல்லா செயல்களையும் முடக்கிப் போடக்கூடிய பயம். ஒருபோதும் நம்மால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களைப் பாராட்ட சிலர் இருப்பதுபோலவே தடுக்கவும், விமர்சிக்கவும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். செயலைத் தொடங்கும் முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிக்கலாமே தவிர, செயலில் இறங்கிய பிறகு பிறர் என்ன சொல்வார்கள்? என்பதை நினைத்து முடங்கக்கூடாது. உங்களைப் பற்றிய விமர்சனங்களை ஆராய்ந்து குறை நிறைகளை சரி செய்து கொள்ள வேண்டும்.

இது என்னால் முடியாது’, `ம்ஹூம் நான் மாட்டேன்பா’ என்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் பயம். மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டுமென்றால், முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்., தன்னம்பிக்கையும், முயற்சியும் தானே வெற்றிப்படிகள். இந்த இரண்டையும் தயக்கத்தால் தடை செய்தால், வெற்றி எப்படி கிட்டும்? இன்னும் சிலர், சில முடிகள் உதிர்ந்தாலே `ஐயய்யோ வயசாகி விட்டது’ என்றும், சற்று பார்வை மங்கலாகத் தொடங்கினால், `பார்வையே பறிபோனது’ போலவும் பதறுவார்கள். சிறு இழப்பைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல், எல்லாமே போய்விட்டதாக புலம்புவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

மூட நம்பிக்கைகளை நினைத்து அச்சம் கொள்வதும், காரியங்களை கைவிடுவதும் பரவலாக இருக்கும் பயம். பூனை குறுக்கே போகக்கூடாது; காக்கை தலைக்கு மேல் பறக்கக்கூடாது; கைம்பெண்கள் கண்ணில் படக்கூடாது என்று ஏகப்பட்ட மூட நம்பிக்கைகளைப் பட்டியலிடலாம்.

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?` `அதுவா, அது எங்கேயோ போகிறது’ என்று அர்த்தம். இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். ஜோக் உண்டு. வாழ்விலும் அதுதான் யதார்த்தம், தனது வேலைக்காக பூனை போய்க்கொண்டிருக்கிறது. உங்கள் வேலைக்காக நீங்கள் கிளம்புங்கள். வெற்றிக்கு செயலும், நேர்மையும் காரணமே தவிர, குறுக்கே வரும் பூனையும், காகமும் அல்ல!

எங்கும் நிம்மதி கிடைக்கவில்லை,எதிலும் அமைதி கிடைக்கவில்லை`, `எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என்று பயந்து புலம்புபவர்கள் ஏராளம். “அமைதியை விரும்பினால், நீ எப்போதும் போருக்குத் தயாராக இரு” என்று வின்ஸடன் சர்ச்சில் சொல்வார். அதுபோல எந்த இழப்பையும் ஈடுகட்டத் தயாராக இருந்தால் தான் இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழ முடியும். இருப்பதைக் கொண்டும் வாழ முடியாமல் பரிதவிப்பதாலும், மரண பயத்தை எண்ணி இருக்கும் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டிருப்பதாலும் எந்தப் பயனும் இல்லை. அதை விட்டுவிட்டு வாழும்போதே வாழ்ந்ததற்கான அடையாளங்களைப் பதியுங்கள்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top