புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


""என் கணவனை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர்,'' என, ஈரோட்டில் கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண் கூறினார். தந்தையின் போட்டோவை பார்த்து, "டாடி...' என அழைத்து, பச்சிளங்குழந்தை ஏங்கியது, பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
திருப்பூர் மாவட்டம், அனுப்பர் பாளையம் அமிர்தம் மகள் பிருந்தாதேவி. 2008ல் ஈரோடு,
வில்லரசம்பட்டியைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணனை, காதல் திருமணம் செய்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், மருமகளை ஏற்கவில்லை.

திருப்பூரில் வசித்த இவர்களுக்கு, திலக் என்ற இரண்டு வயது கைக்குழந்தை உள்ளது. பத்து நாட்களுக்கு முன், ராதாகிருஷ்ணனை, அவரது குடும்பத்தினர், ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். அதன்பின், அவர் தொடர்பு கொள்ளவில்லை. டிச., 12 ல் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த பிருந்தாதேவி, தன் கணவனை சேர்த்து வைக்கக் கோரி, கணவரின் வீட்டு வாயிலில், கைக்குழந்தையுடன் அமர்ந்து, ஆறாவது நாளாக, போராட்டத்தை தொடர்கிறார். அவருக்கு பாதுகாப்பாக, இரு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பிருந்தாதேவியை, பல்வேறு மகளிர் அமைப்பினர் சந்தித்து வருகின்றனர். வீட்டு வாசலில் தங்கியிருப்பதால், பனி, கொசு தொந்தரவால், அல்லல்படுகிறார். அவரது தாய் அமிர்தமும், நேற்று முதல், பிருந்தாதேவியுடன் தங்கியுள்ளார்.

அருகில் வசிக்கும் சிலர், போர்வை, கொசு வலை, குழந்தைக்கான பேபி பெட் ஆகியவற்றை, வாங்கிக் கொடுத்துள்ளனர். பிருந்தாதேவியின் கணவர் குடும்பத்தார், வீட்டை பூட்டிச் சென்றதால், இரவு நேரத்தில், திறந்த வெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார். மூன்று வேளையும், அருகிலுள்ள கடையில் சாப்பிடுகின்றனர்.பிருந்தாதேவியின் குழந்தை திலக், தன் பெற்றோரின் திருமண போட்டோக்களை பார்த்து, "டாடி வேணும்' என, அழுகிறான்.

பிருந்தாதேவி கூறியதாவது:என் கணவர் குடும்பத்தாருக்கு சாதகமாக, போலீசார் செயல்படுகின்றனர். என் கணவரின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள், இரவு நேரத்தில், என்னை மிரட்டுகின்றனர். பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாரும், தட்டிக் கேட்பதில்லை. இந்த உலகில் பெண்ணுக்கு நியாயம், தர்மம் கிடைக்காதா?என்னை இங்கிருந்து வெளியேறுமாறும், சட்டப்படி விவகாரத்து வாங்கிக் கொள்ளுமாறும், போலீசார் வற்புறுத்துகின்றனர். அப்பாவை பிரிந்துள்ள என் மகன், அடிக்கடி, "டாடி டாடி' என்று, போட்டோவை பார்த்து அழுகிறான். என் கணவரை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளனர். என் கணவரை பார்க்காமல், இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன்.
இவ்வாறு பிருந்தாதேவி கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top