புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மற்ற 3 குழந்தைகளிடம் பாசமாக இருந்த தாய், தன்னை மட்டும் புறக்கணித்தாகவும், தன்னை அதிக வேலை வாங்கியதாகவும் கருதிய 13 வயது சிறுவன் தனது தாயை கழுத்தை இறுக்கி கொலை செய்தான். வாஷியை அடுத்த ஜூகுகாவ் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி கோப்லே. இவரது மனைவி அஞ்சனா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சிவாஜி
கோப்லே நவி மும்பையில் ஒரு சிறிய கடையை வைத்து சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அஞ்சனா தனது வீட்டில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருந்தது. அப்போது வீட்டருகில் நின்று கொண்டிருந்த அஞ்சனாவின் 13 வயது மகன் ராஜூ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது தாய் ரெப்ரிஜிரேட்டரை சுத்தம் செய்த போது கீழே விழுந்து இறந்து விட்டதாக அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் கூறியிருக்கிறான்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அஞ்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் நகை, பணம் எதுவும் மாயமாகவில்லை என்பதால் திருட்டுக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது முதல்கட்ட விசாரணையிலேயே தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அஞ்சனா கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்த போது ராஜூ மட்டுமே வீட்டில் இருந்தான் என்பதால் போலீசார் அவனிடம் விசாரித்தனர். ஆனால், தனது தாய் ரெப்ரிஜிரேட்டரை சுத்தம் செய்த போது கீழே விழுந்ததில் தலையில் காயம்பட்டு இறந்ததாக கூறினான்.

மேலும் போலீசார் கேட்ட பல கேள்விகளுக்கு அவன் முன்னுக்கு பின் முரணாக பேசினான். இதனால், ராஜூ மீது போலீசுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

அவனை தனியாக அழைத்து சென்று தீவிரமாக விசாரித்த போது, தனது தாய் அஞ்சனா தன்னிடம் பாசம் காட்டாமல் புறக்கணித்ததால் அவரை கொன்றதாக ஒப்புக் கொண்டான்.

கணவன் சிவாஜி கோப்லேக்கு உதவி செய்வதற்காக அஞ்சனா தனது 13 வயது மகன் ராஜூவை அடிக்கடி நவி மும்பையில் உள்ள கடைக்கு அனுப்பி வைப்பதுண்டு.

மேலும், ராஜூவிடமே அடிக்கடி வேறு வேலைகளையும் செய்யச் சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ராஜூவுக்கு தாய் மீது வெறுப்பு ஏற்பட்டது. தன்னுடன் பிறந்த மற்ற மூன்று குழந்தைகள் மீது பாசமாக இருக்கும் தாய், தன்னை மட்டுமே புறக்கணிப்பதாக கருதினான். இதனால், ராஜூ கடும் கோபத்தில் இருந்திருக்கிறான்.

சம்பவத்தன்று ராஜூவும் அஞ்சனாவும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அஞ்சனா சமையல் அறையில் வேலையாக இருந்தார். அப்போது பின்பக்கமாக சென்ற ராஜூ, துப்பட்டா துணியால் தாய் அஞ்சனா கழுத்தை சுற்றி இறுக்கினான். பின்னர் அவன் கீழே தள்ளிவிட்டதில் அஞ்சனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

அதன் பிறகு வெளியில் வந்த ராஜூ கதவை வெளிப்பக்கமாக பூட்டினான். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தனது தாய் ரெப்ரிஜிரேட்டரை சுத்தம் செய்த போது கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியிருக்கிறான். இந்த உண்மைகளை ராஜூ போலீசாரிடம் கூறியதை தொடர்ந்து போலீசார்  அவனை கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top