புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


Posted Imageமுன்னொரு காலத்தில் ஒரு வயதானவரும் அவருடைய மனைவியும் ஒரு மலையடிவாரத்தில் விறகு வெட்டிப் பிழைத்து வந்தனர். அந்த மனிதர் மிகவும் நல்லவர். நேர்மையானவர். அமைதியானவர். ஆனால் அவருடைய மனைவியோ பேராசை பிடித்தவர். ஒருநாள் அந்த மனிதர் மலையருகிலிருந்த காட்டுக்கு விறகு வெட்டச் சென்றார். மரத்தை
வெட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு குருவியின் அழுகுரல் கேட்டது. என்னவென்று அந்த மனிதர் பதைபதைப்புடன் கூர்ந்து கவனித்தார்.

அங்கே உடைந்து கிடந்த மரக்கிளை அருகில் ஒரு குருவி காயம் அடைந்து கிடப்பதைக் கண்டார். அக்குருவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு வந்து, அதற்கு மருந்து போட்டு அதன் காயத்தை குணப்படுத்தினார்.

பின்னர் அதைத் தன்னுடனே வைத்துக் கொண்டார். அதற்குத் தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியைக் கொடுத்து, அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். இது அவரது மனைவிக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. தங்களுக்கான உணவை அந்தக் குருவிக்குக் கொடுப்பதை அந்தப் பெண் வெறுத்தாள். இதனால் எப்போதும் பெரியவரைத் திட்டிக் கொண்டே இருப்பாள்.

ஆனாலும் பெரியவர் குருவியைக் கவனிப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அவர் வெளியே செல்லும்போது, குருவியைக் கவனித்துக் கொள்ளும்படி தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு, அந்தக் கிழவியும் தண்ணீர் எடுப்பதற்காக வெளியே சென்றுவிட்டாள். தனியே இருந்த குருவிக்குப் பசிக்க ஆரம்பித்தது. வீட்டுக்குள் ஏதாவது உணவு கிடைக்குமா என்று தேடிப் பார்த்தது.

அங்கே ஒரு தட்டில் கொஞ்சம் அரிசி இருப்பதைக் கவனித்தது. பசி மிகுதியால் அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டது. கிழவி வீடு திரும்பியவுடன் தான் வைத்திருந்த அரிசியைக் காணாமல் வருத்தமுற்றாள். அந்த வருத்தம் கோபமாக மாறியது. இது குருவியின் வேலைதான் என்று நினைத்தாள். குருவியைக் கூப்பிட்டு விசாரித்தாள். குருவி பசியில் அரிசியைத் தின்ற கதையைக் கூறியது.

கோபத்தில் குருவியின் சிறிய நாக்கை ஒரு கத்தியைக் கொண்டு அறுத்துவிட்டாள். நாக்கை இழந்த குருவி கதறக்கூட முடியாமல் அந்த வீட்டைவிட்டு வெளியேறியது. பெரியவர் வீடு திரும்பியதும், தனது செல்லக் குருவியைக் காணாமல் தவித்துப் போனார். கிழவியிடம் விசாரித்ததில் குருவியின் நாக்கு அறுபட்ட விவரம் தெரிய வந்தது. "ஓ குருவியே, உன்னைத் தனியே விட்டுச் சென்றதற்காக என்னை மன்னித்து விடு.

எப்படியும் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பேன்' என்று கண்ணீர் மல்கக் கூறிக்கொண்டே அந்தப் பெரியவரும் வீட்டை விட்டு வெளியேறினார். குருவியைத் தேடி வெகுதூரம் சென்று மற்றொரு காட்டை அடைந்தார். அப்போது மூன்று குருவிகள் அவர் முன் தோன்றின. அவைகளிடமிருந்து தனது குருவி அவைகளின் இருப்பிடத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டார். அவற்றுடன் கூடச் சென்று தனது குருவியைக் கண்டு கொண்டார். அதைத் தூக்கி வைத்துக் கொஞ்சி மகிழ்ந்தார்.

மற்ற குருவிகள் அவருக்கு மிகவும் சுவையான உணவுகளைக் கொண்டு வந்து அன்புடன் உபசரித்தன. பொழுது சாயும்வரை அவைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தார். மாலையில் அவைகளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டை நோக்கிக் கிளம்பினார். குருவிகள் எல்லாம் சேர்ந்து இரண்டு பெட்டிகளைக் கொண்டு வந்து அவர் முன் வைத்தன. ஒன்று சிறியதாகவும் ஒன்று மிகப் பெரியதாகவும் இருந்தது. அவற்றில் ஏராளமான செல்வங்கள் இருப்பதாகவும், ஏதாவது ஒரு பெட்டியை அவர் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்றும் குருவிகள் கூறின.

தனக்குச் சிறிய பெட்டியே போதும் என்று கூறிவிட்டு அதை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். தனது மனைவியிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்தார். பெட்டிக்குள் நிறையப் பொற்காசுகளும் தங்க நகைகளும் இருந்தன. பேராசை பிடித்த அந்தக் கிழவிக்குத் தானும் அதுபோல ஒரு பெட்டியைப் பெற்று வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

உடனே அங்கிருந்து கிளம்பி காட்டுக்குள் வேகமாக ஓடினாள் அந்தக் கிழவி. சீக்கிரத்திலேயே குருவிகள் இருக்கும் இடத்தை அடைந்தாள். குருவிகளிடம் தனக்கும் ஒரு பெட்டி தரும்படி மிகவும் கெஞ்சிக் கேட்டாள்.
குருவிகளுக்கு வெறுப்பாக இருந்தாலும், பெரியவரின் நல்ல மனத்தை நினைத்து அந்தக் கிழவிக்கும் ஒரு பெட்டியைத் தரச் சம்மதித்தன. இப்போது கிழவியின் முன்பு இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன.

ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது. பெரிய பெட்டிக்குள் இன்னும் அதிகமாக நகைகளும் தங்கக் காசுகளும் இருக்கும் என்ற நினைப்பில் அந்தக் கிழவி பெரிய பெட்டியைத் தேர்வு செய்தாள். குருவிகளும் சம்மதம் தெரிவித்து அந்தப் பெரிய பெட்டியைத் தாராளமாக எடுத்துக் கொண்டு போகலாம் என்று கூறின. பெட்டியை எடுத்துக் கொண்டு வேகவேகமாக வீடு திரும்பினாள். பெரியவருக்குக்கூட காட்டாமல் தானே அந்தப் பெட்டியைத் திறக்க முயற்சித்தாள்.

தான் பெரிய பணக்காரியாக மாறப் போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியுடன் பெட்டியைத் திறந்தாள். பெட்டியைத் திறந்ததும் திடுக்கிட்டுப் போனாள். பெட்டி நிறையப் பாம்புகளும் மற்றும் பயங்கரமான வினோதமான சிறிய விலங்குகளும் பூச்சிகளும் இருந்தன. அவளுடைய பேராசைக்குக் கிடைத்த பரிசு!

1 கருத்து:

 
Top